மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் மூன்றாம் பாசுரத்தை இங்குக் காணலாம்.
இதற்கு முந்தைய இரண்டாம் பாசுரத்தின் ஆழ்பொருளை அறிய இங்கு கிளிக் செய்து படியுங்கள்.
ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி *
நாங்கள்நம்பாவைக்குச் சாற்றிநீராடினால் *
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து *
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள *
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப *
தேங்காதேபுக்கிருந்து சீர்த்தமுலைபற்றி
வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள் *
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்.
விளக்கவுரை:
ஓங்கியுலகளந்த உத்தமன்பேர்பாடி நாங்கள்
வாமனாவதாரம் எடுத்த எம்பெருமான உயர வளர்ந்து மூன்று உலகங்களையும் தன் திருவடிகளாலே அளந்துக் கொண்ட புருஷோத்தமனின் திருநாமங்களை நாம் (எம்பெருமானின் திருநாமத்தைப் பாடா விட்டால் உயிர் வாழ முடியாத நாம்) பாடிக் கொண்டு
நம்பாவைக்குச் சாற்றிநீராடினால்
நோன்பு இருக்க வேண்டும் என சங்கல்பம் செய்து கொண்டு குளித்தால்
தீங்கின்றிநாடெல்லாம் திங்கள்மும்மாரிபெய்து
ஒரு தீமையும் இல்லாமல் (தீமையாவது - மழையே பெய்யாமல் இருப்பது, அதித மழை பெய்து காட்டாற்று வெள்ளம் உண்டாவது) மாதந்தோறும் மூன்று மழை பெய்திடும்.
மூன்று மழையாவது :
தடை எதுவும் இல்லாமல் மழை பெய்ய வேண்டும்
நாடு முழுவதும் மழை பெய்ய வேண்டும்
ஒரு மாதம் - 30 நாட்கள், வெயில் - 9 நாட்கள், மழை - 1 நாள்
ஓங்குபெருஞ்செந்நெலூடு கயலுகள
அவ்வாறு மழை பெய்ததால், ஆகாசம் அளவும் வளர்ந்து பெருத்துள்ள செந்நெற் பயிர்களின் நடுவே மீன்கள் துள்ள
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப
அழகிய நெய்தல் மலரில் அழகிய வண்டுகள் கண் உறங்க
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலைபற்றி வாங்க குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்கள்
ஆயர் பாடியான இங்கு மாட்டுத் தொழுவத்தில் உள்ள பசுக்கள் வள்ளல் தன்மை மிகுந்தவை. உடலால் பெருத்திருப்பவை. அந்தப் பசுக்கள் தாங்காமல் பால் கறக்கக் கூடியவை. இவ்வாறு இருக்கும் பசுக்களின் மடியை தொட்ட மாத்திரத்திலேயே குடம் குடமாக பால் சுரக்க வேணும்.
நீங்காதசெல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்.
இப்படிபட்ட அழிவில்லாத செல்வம் எப்போதும் நிறைந்திட வேணும்.
சுவாரஸ்யமான வைபவங்கள்
உலகளந்த உத்தமன்:
இந்த பாசுரத்தினால் உலகத்தை காப்பாற்றும் பொருட்டு எம்பெருமான் அவதரிக்கும் விபவ அவதாரம் பாடப்பட்டது.
ஓங்கியுலகளந்த உத்தமன்
பூரணமான அவதாரங்களான இராமர், கிருஷ்ண அவதாரங்களைக் காட்டிலும் ஆண்டாளுக்கு வாமனாவதாரத்திலே தனி பிரியமாம்.
இராமர், கிருஷ்ண அவதாரங்களில் முறையே இராவணன், கம்ஸர்களை அழித்து தர்மத்தை நிலை நாட்ட வேண்டியிருந்தது.
ஆனால் வாமனாவதாரத்தில் மகாபலியை அழிக்காமல் அவனது அகந்தையை அழித்து, தனது அடியவனாக ஆக்கிக் கொண்டபடியால், கருணை வடிவான வாமனாவதாரம் பிரியமாயிற்று.
பூங்குவளைப்போதில் பொறிவண்டுகண்படுப்ப
அழகிய தாமரை மலரின் நறுந்தேனை நன்கு குடித்து விட்டு ஆண் வண்டானது அந்த மலரிலேயே மயங்கி உறங்கிவிட்டதாம்! மாலை நேரம் ஆகி விட மலரின் இதழ்கள் மூடிக் கொண்டன. இரவு முழுவதும் காத்திருந்தது பெண் வண்டு. வண்டின் உடல் முழுவதும் மகரந்த துகள்கள் ஒட்டிக் கொண்டன. மறுநாள் சூரியன் உதயமாக தாமரையும் அலர்ந்தது. ஆண் வண்டும் பெண் வண்டிடம் ஒட, பெண் வண்டோ அதன் நடத்தையை சந்தேகிக்க, பின் ஊடலும் கூடலும் ஆகின.
இந்த வைபவம் திருவரங்கத்தில் பங்குனி உத்திரத்திற்கு முந்தைய நாள் நிகழும். மிக அருமையான வைபவம். நம் வாழ்நாளில் காண வேண்டிய ஒன்று.
ஆழ் பொருளுரை
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
உத்தமனான எம்பெருமானின் திருநாமங்களை பாடி பகவானை அனுதினமும் சிந்திப்பதனால்,
தேஹாத்ம அபிமாநம் - தேஹமே ஆத்மா என எண்ணுதல்
உடலை ஆத்மாவாக எண்ணுதல். இந்த அறிவு தெளிவுபடும்.
அநந்ய சேஷத்வம் – எம்பெருமானை மட்டுமே ஒரே தலைவனாக ஏற்பது.
அநந்ய சரணத்வம் – எம்பெருமான் ஒருவனையே ஒரே புகலாக ஏற்பது
அநந்ய போக்யத்வம் – பகவானை மட்டுமே அனுபவிப்பது
பகவான் ஒருவன் அனுபவத்துக்கு மட்டுமே உரியனாய் இந்த ஆத்மா இருத்தல் என்பதே தேர்ந்த பொருள்.
இதனால் கர்மத்தின் பொருட்டு ஏற்படும் துக்கங்கள் ஆத்மாவுக்கு அல்ல எனும் ஞானத்தால் இவ்வுலகில் உள்ள ஆத்மாக்கள் மகிழ்வர்.
பொறிவண்டு கண்படுப்ப
இங்கு வண்டு என்பது எம்பெருமானை குறிக்கும்.
மேற் சொன்ன ஞானம் பிறந்தமையால் எம்பெருமான் நம் உள்ளத்தில் மிக மகிழ்வுடன் எழுந்தருளியிருப்பான்.
தேங்காதே புக்கிருந்து சீர்த்தமுலைபற்றி வாங்க * குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் * நீங்காதசெல்வம் நிறைந்து
இங்கு வள்ளல் பெரும் பசுக்கள் ஆச்சாரியர்கள்
ஆச்சாரியரின் திருவடி பற்ற, அவரும் நமக்கு எம்பெருமானின் திருவடிகளைக் காட்டி சரணாகதி பண்ண வைத்து, மேற் சொன்ன ஞான விஷயங்களை உணர வைத்து, பகவத் குண அனுபவத்திலே பரிபூர்ணனாக நம்மை மாற்றுவார்கள். இதுவே நம் ஆச்சாரியர்களின் வள்ளல் தன்மை.
ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள
இந்த உபதேசங்கள் பலன் அளிப்பதை கண்டு சந்தோசத்தில் திளைக்கும் ஆச்சாரியர்கள்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
コメント