தை மாதத்தில் மட்டும் ஒரு வாரத்தில் மூன்று உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இம்மாதத்தில் தான் நான்கு முக்கியமான நாட்கள் உள்ளன. அவை தை புனர்பூசம், தை பூசம், தை மகம், தை ஹஸ்தம்.
தை புனர்பூசம் என்பது இராமானுஜருடைய முக்கிய சீடரான எம்பார் என்ற கோவிந்தபெருமாளின் திருநக்ஷத்திரம் ஆகும். இராமானுஜரின் தாயாரும், எம்பாரின் தாயாரும் சகோதாரிகள், அவர்கள் இருவரும் பெரிய திருமலை நம்பிகளுடைய சகோதரிகள். எனவே, இராமானுஜரும், எம்பாரும் பெரிய திருமலையினுடைய மருமகன்கள் ஆகிறார்கள்.
அவர்களுடைய உற்சவம் தை மாதம் புனர்பூசம் ஆகும். அதனைத் தொடர்ந்து பூசம் வருகிறது. இது குருபூசம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்று நடைபெறும் உற்சவம் குருபூச உற்சவம் ஆகும். இராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரையில் அவதரித்தார்.
தற்போது ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் இராமானுஜரின் திருமேனி தைப்பூசத்தில் தான் எழுந்தருளப்பட்டது. இதே போல் ஆழ்வார்திருநகரியில் வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் அவதரித்தார். ஆனால், அவருடைய திருமேனி எழுந்தருளப்பட்டது மாசி விசாகம் ஆகும். எனவே, அங்கு இரண்டு உற்சவங்கள் நடைபெறுகின்றன.
மேலும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் திருமழிசையாழ்வார். சக்கரத்தின் அம்சமாக திருமழிசையாழ்வார் பிறந்தார். ஆழ்வார்களில் நான்காவதாக பிறந்த இவர், துவாபர யுகத்தில் பிறந்தார். திருமழிசையாழ்வார் மட்டுமே துவாபார யுகத்திலும் வாழ்ந்து, கலியுகத் தொடக்கத்திலும் வாழ்ந்தவர். அவர் பல பிரபந்தம் பாடியிருந்தாலும், அவற்றில் இரண்டு மட்டுமே இப்போது கிடைக்கப்பெறுகிறது.
தை ஹஸ்தத்தில் கூரத்தாழ்வான் அவதரித்தார். கூரம் என்ற சேக்ஷத்ரத்தில் அவதரித்த அவர், பெரும் செல்வந்தாராக இருந்தவர். அப்படி இருந்தும் அவை அனைத்தும் விடுத்து, இராமானுஜர் திருவடிகளே சரணம் எனறு பற்றிக்கொண்டவர். இவ்வாறு தை புனர்பூசம், தை பூசம், தை மகம், தை ஹஸ்தம் என வரிசையாக பல மகான்களின் திருநக்ஷத்திரம் உள்ளதால், தை மிகவும் சிறப்பு பெற்றதாக உள்ளது. அவர்களது திருநக்ஷத்திர நன்னாளில், அந்த நாள் முழுவதும் அவர்களை நினைவு கொள்வோமாக.
Comments