top of page

Vaikuntha Ekadashi: பகல்பத்து ஆறாம் நாள் உற்சவம் - அழகிய மணவாளனும் வயலாளி மணவாளனும்

Updated: Dec 19, 2021

ஸ்ரீரங்கம் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் 6 ஆம் நாள் பகல்பத்து உற்சவம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று பகல்பத்து திருநாளையொட்டி, திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் அரையர்களால் சேவிக்கப்படும். நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

முந்தைய பதிவில், நம்பெருமாள் வருடம் முழுவதும் கண்டருளும் உற்சவங்கள், நித்தியபடி திருவாராதனங்கள் மற்றும் பல்வேறு வைபங்களை அரையர்கள் அவர்களது தாளங்களை நம்பெருமாளாக உருவகப்படுத்தி நாடகமாக நடத்திய விதம் குறித்து முழுமையாக விவரிக்கப்பட்டது. அது பற்றி அறிய இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.


நம்பெருமாள் அலங்காரம்

பகல்பத்தின் ஆறாம் நாளான இன்று நம்பெருமாள்,

  • ரத்தின நீள்முடி கிரீடம்

  • மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம்

  • வைரக் கல் அட்டிகை

  • ரத்தின அபய ஹஸ்தம்

  • காசு மாலை

  • வைர காது காப்பு

  • முத்துச்சரம் போன்ற திருவாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


முன்னிலும் பின்னழகிய பெருமாள்

இன்றைய பாசுரங்கள்:

  • கண்ணி நுண்சிறுத்தாம்பு (மதுரகவியாழ்வார்) - 11 பாசுரங்கள்

  • பெரிய திருமொழி (திருமங்கை ஆழ்வார்) - 250 பாசுரங்கள்

அரையர்களால் தாளத்துடன் பாடப்படும்.

இன்று தொடங்கி 5 நாட்களுக்கு பகல்பத்து முழுவதும் திருமங்கை ஆழ்வார் பாசுரங்களையே அரையர்கள் சேவிப்பார்கள்.


ஆழ்வார் அழகு: இந்த உற்சவத்தை முதன் முதலில் தொடங்கி வைத்த திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் இன்றிலிருந்து சேவிக்கப்படுவதால் திருமங்கை மன்னன்/குறையலூர் வேந்தன், வேல், கத்தி, வாள், கேடயம் ஏந்தி, கவசம் அணிந்து, ராஜகிரீடத்துடன் மிடுக்காக/கம்பீரமாக சேவை சாதிக்கிறார். வேல்,கத்தி,கேடயம் கொண்டு வரும் பரகாலனை அநுக்ரஹம் செய்ய, நம்பெருமாளும் ரங்கராஜனாக எழுந்தருளி இருக்கிறார்!

திருமங்கை ஆழ்வார் தளபதியாய் இருந்து பிறகு ராஜாவக ஆனதாலோ இன்று நீள்முடி (ராஜமுடி) க்ரீடத்தை நம்பெருமாளுக்கு அர்ச்சகர்கள் சாற்றி அனுபவிக்கிறார்கள். அவர் கதை அனைவரும் அறிந்த ஒன்றே...


அரையர் அபிநய பாசுரங்கள்

மதுரகவியாழ்வரின் "கண்ணிநுண் சிறுத்தாம்பினால்" எனத் தொடங்கும் முதல் பாசுரமும், திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழியின் "வாடினேன் வாடி" எனத் தொடங்கும் முதற் பாசுரமும் அரையர் அபிநயம் செய்து காட்டுவார்.

மதுரகவிகளும் மாமுனிகளும் ததீய(பாகவத) சேஷத்வத்தில் மதுரகவி ஆழ்வார் சத்ருகன் வழி நின்று, தேவு மற்றறியேன் என நம்மாழ்வாரையே தெய்வமாக கொண்டிருந்தார். அவ்வாறே, அவர் வழியில் மணவாள மாமுனிகளும் நம்மாழ்வாரின் திருவாய் மொழியின் மேன்மையை எடுத்துரைப்பதையே காலட்சேபமாகக் (வாழ்நாள் நோக்கமாக) கொண்டிருந்தார். நம்பெருமாளே மாமுனிகளின் திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தை ஒரு வருடம் கேட்டு, அவரை ஆசார்யராக ஏற்றுக்கொண்டார். அதனை எடுத்துரைக்கும் வகையில் இன்று மணவாள மாமுனிகள் சந்நிதியில் இருந்து, அரையர் ஸ்வாமிகளுக்கு மாலை மரியாதை செய்யப்படும்.

வாடினேன் வாடி: பின்னர் பெரியதிருமொழியின் முதற்பாசுரமான "வாடினேன் வாடி" பாசுரத்தை ஆழ்வார் பாவனையில், உருக்கமாகச் சேவித்து, அபிநயம் செய்வர். தொடர்ந்து ஆழ்வார் பாடிய பல திவ்யதேசப் பாசுரங்களையும் சேவிப்பர். ஆழ்வாருக்குத் திருமந்திரம் போதித்த வயலாளிமணவாளனைப் போற்றிப் பாடிய திருவாலி திருநகரி முதல்பதிகம் "புல்லி வண்டறையும் பொழில் புடை சூழ்"(3-5-10) பாசுரம் முடிய 250 பாசுரங்கள் சேவிக்கப்படும்.

அரையர்களுக்கு ஆழ்வார்/ஆசார்யர் மரியாதைகள்:(பொது) பகல்பத்து, இராப்பத்து நாட்களில், நம்பெருமாளின் நியமனம்பெற்று, அரையர்கள் ஆழ்வார்களிடம் வந்து, ஆழ்வார் கொண்டாட்டம் சேவித்து, நம்மாழ்வார் மற்றும் எம்பெருமானாரின் மாலைகள் படிகளைந்து, இரண்டு மூத்த அரையர்களுக்குச் சாத்தப்படுகிறது. அரையர் சேவை முடிந்ததும், நம்பெருமாள் பிரசாதங்களை அமுது செய்த பிறகு, ஆழ்வார் ஆசார்யர்களுக்கு, நிவேதனம் செய்யப்படும். ஆழ்வார்கள் அனைவருக்கும் முடிந்து,"திருக்கச்சி நம்பிகளுக்கு" நைவேத்யம் ஆனபின்னரே, உடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாசார்யர், ஆகியோருக்கு நிவேதனம் ஆகும்.

போனகம் செய்த சேடம்: உடையவர் திருக்கச்சி நம்பிகளை ஆசார்யரான படியால் அவருக்கு முதல் மரியாதை. உடையவருக்கு, காஞ்சிபுரத்தில் திருக்கச்சி நம்பிகளின் உச்சிஷ்ட்டம் கிடைக்காமற் போயிற்று. அந்த குறை நீங்க "போனகம் செய்த சேடம்" இங்கு அருளப்படுகிறது !! நம்மாழ்வார் அமுது செய்த பிரசாதம், அரையர்களுக்கு உரியதாகையாலே, அந்த பிரசாதங்கள் அரையர்களின் திருமாளிகைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்!


இவ்வாறாக பெரிய திருநாளில் ஐந்தாம் நாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!


109 views0 comments
bottom of page