திருக்கோஷ்டியூர் ரகசியம்: ஸ்ரீரங்கம் ராமானுஜரின் புரட்சிப் பயணம்
- Hari Vishnu Radhakrishnan
- May 3, 2025
- 3 min read
ஸ்ரீரங்கத்தின் அமைதியான தென்றலில் ராமானுஜரின் இளம் மனம் கரைந்தது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை அறியத் தாகம் நாளுக்கு நாள் அதிகரித்தது. அந்த தாகத்தைத் தீர்க்கும் ஞான தீபம் திருக்கோஷ்டியூரில் எரிவதாக அவர் கேட்டார். அங்கு வாழ்ந்த திருக்கோஷ்டியூர் நம்பி என்பவர் திருமந்திரத்தின் ரகசியங்களை அறிந்த மகான். உடனே புறப்பட்டார் ராமானுஜர், அந்த ஞான ஒளியை தரிசிக்க.

ஆனால், அந்த ஒளி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை. ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோஷ்டியூருக்குப் பல காத தூரம் நடந்தே சென்றார் ராமானுஜர். ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல... தொடர்ந்து பதினேழு முறை! ஒவ்வொரு முறையும் நம்பியின் வாசலில் பணிவோடு நின்றார். ஆனால் நம்பியோ, ராமானுஜரின் தீவிர பக்தியையும் விடாமுயற்சியையும் சோதித்தார்.
"உன் மனதில் குடிகொண்டிருக்கும் கோபம், பொறாமை, சுயநலம் போன்ற உலகியல் எண்ணங்களை விட்டொழி. முழுமையாக என்னைச் சரணடைந்து, அந்த மனப்பக்குவத்தை அடைந்தால்தான் திருமந்திரத்தை உபதேசிக்க முடியும்," என்று ஒவ்வொரு முறையும் கூறி அவரைத் திருப்பி அனுப்பினார்.
அந்த நீண்ட நெடிய பயணங்களில் ராமானுஜரின் மனம் பல்வேறு எண்ணங்களால் நிறைந்தது. வழியில் தன்னைக் கண்ட மக்கள் மரியாதையுடன் ஒதுங்கிப் போவதைக் கவனித்தார். சிலர் பயத்துடன் விலகி நின்றார்கள். 'ஏன் இந்த பாகுபாடு? நாமும் அவர்களைப் போல மனிதர்கள் தானே? ஏன் இந்த விலக்கம்?' என்று அவரது மனம் வேதனைப்பட்டது. இந்த தேசமெங்கும் இப்படிப்பட்ட ஒதுக்குதலும், தாழ்வு மனப்பான்மையும் பரவியிருப்பதை அவர் உணர்ந்தார்.

'நாராயணனின் படைப்பில் இப்படி ஒரு ஏற்றத்தாழ்வா? இது சரியில்லையே!' என்று அவரது புரட்சி மனம் கொதித்தது.
பதினெட்டாவது முறையாக அவர் திருக்கோஷ்டியூர் நம்பியின் திருவடிகளை அடைந்தார். களைப்பால் உடல் சோர்ந்திருந்தாலும், அவரது வைராக்கியம் மட்டும் குறையவில்லை. "அடியேன் ராமானுஜன் வந்திருக்கிறேன்," என்று பணிவோடு தெரிவித்தார். இந்த முறை நம்பியின் கனிவான பார்வை அவர் மீது விழுந்தது. குருவின் திருவருள் கிட்டியது.
இருப்பினும், நம்பியின் மனதில் ஒரு சிறு சந்தேகம் எஞ்சியிருந்தது. 'இத்தனை முறை முயன்று இந்த உபதேசத்தைப் பெற வருகிறானே, இதில் ஏதோ சுயநலம் இருக்கக்கூடும்' என்று அவர் எண்ணினார். அதனால்தான் உபதேசம் செய்த பிறகு, "இந்த மந்திரம் உனக்கு மட்டுமே சொந்தம். இதை நீ யாருக்கும் போதிக்கக் கூடாது. மீறினால் உனக்கு நரகம்தான்," என்று கண்டிப்புடன் கூறினார்.
ஆனால், அந்த கண்டிப்புக்கு பின்னால் ஒரு ஆழமான தந்திரம் ஒளிந்திருந்தது. வெறுமனே மந்திர உபதேசம் பெறுவது ராமானுஜரின் இலக்காக இருக்க முடியாது என்பதை நம்பி அறிந்திருந்தார். பதினேழு முறை புறக்கணிக்கப்பட்டும் மீண்டும் வந்து மன்றாடும் இந்த மனவுறுதி ஏதோ பெரிய திட்டத்தை மனதில் வைத்திருக்கிறது என்பதை அவர் யூகித்தார். அந்தத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படி பயமுறுத்தினார். குருவும் சிஷ்யனும் ஒருவரை ஒருவர் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளாவிட்டாலும், அவர்களின் பொது நோக்கம் ஒன்றாகவே இருந்தது - திருமந்திரத்தின் மகத்துவத்தை உலகெங்கும் பரப்புவது.

நம்பியின் எண்ணம் ஒரு சிறிய நீரோடை போல இருந்தது - ஒரு தலைமுறையில் ஒருவருக்கு உபதேசம் செய்வது என்ற மரபு. ஆனால் ராமானுஜரின் visionவோ பரந்து விரிந்த ஆலமரம் போலிருந்தது - தான் ஒருவன் பெற்ற ஞானம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்குக் கிளைவிட்டுப் பரவ வேண்டும் என்பது அவரது ஆசை.
அதனால் தான் குருவின் கடுமையான எச்சரிக்கையையும் மீறி, ஒரு தனி மனிதனின் இழப்பால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நன்மையடைய முடியும் என்றால், அந்த இழப்பைச் சந்திப்பவன் தானாகவே இருக்கட்டும் என்று ராமானுஜர் உறுதியாக நம்பினார். அமைதியாக குருவின் உபதேசத்தைக் கேட்டார். திருமந்திரத்தையும் அதன் ஆழ்ந்த பொருளையும் தனது இதயத்தில் ஆழமாகப் பதித்துக்கொண்டார். தனது இதயக் கோயிலில் வீற்றிருக்கும் திருமலை அந்த மந்திரத்தால் பலமுறை அர்ச்சித்தார்.
பிறகு, திருக்கோஷ்டியூர் சௌம்ய நாராயணப் பெருமாள் கோயிலின் உயர்ந்த கோபுரத்தின் மீது ஏறினார் ராமானுஜர். அங்கிருந்து ஊர் மக்களை உரத்த குரலில் அழைத்தார். ராமானுஜர் கோபுரத்தின் உச்சியில் இருந்து கூப்பிடுவதைக் கேட்டதும், நூற்றுக்கணக்கான மக்கள் பதறியடித்துக் கோயிலை நோக்கி ஓடி வந்தனர். 'என்ன விபரீதம் நடக்கப் போகிறதோ?' என்ற பயத்துடன் அவர்கள் வானத்தை நோக்கிப் பார்த்தார்கள். அப்போது, ராமானுஜரின் உதடுகளில் இருந்து "ஓம் நமோ நாராயணாய" என்ற அஷ்டாக்ஷர திருமந்திரம் ஒரு மழைத்துளியாக அவர்கள் மீது விழுந்தது. அந்த ஒரு துளியே அவர்களை சிலிர்க்க வைத்தது.
அதுவே மழையாகப் பொழியத் தொடங்கியதும் அவர்கள் பரவசத்தில் ஆழ்ந்தார்கள். இரு கரம் கூப்பி, கோபுரத்தில் நின்றிருந்த ராமானுஜரைத் தொழுதார்கள். நம்பிகள் எதிர்பார்த்தது போலவே கோபம் கொண்டார். "என் நம்பிக்கையை நீ மீறிவிட்டாய். உனக்கு நரகம்தான்," என்று சபிப்பது போல் நடித்தார். இதன் மூலம், தன்னுடன் இருந்த மற்ற சீடர்களுக்கு, ராமானுஜருக்கு மட்டும் தான் தனிச்சலுகை அளிக்கவில்லை என்பதை உணர்த்தினார். ஆனால் காலப்போக்கில், நம்பியே உணர்ச்சிவசப்பட்டு, "நீர்தான் எம்பெருமானாரோ!" என்று கூறி ராமானுஜரை ஆரத் தழுவிக் கொண்டார்.

அந்த நொடியில் அவர் மனதார நாராயணனிடம் வேண்டிக் கொண்டிருந்திருப்பார்: "பகவானே, இந்தப் பிள்ளைக்கு நீண்ட ஆயுளைக் கொடு." குருவின் சாபம் பெற்றும், ராமானுஜர் ஒரு முழுமையான மனித ஆயுளான 120 ஆண்டுகளை பூர்த்தி செய்து, சமூகத்திற்கும் இறைவனுக்கும் தன்னால் இயன்ற சேவைகளைச் செய்தார். இந்த மகத்தான பெருமை ஸ்ரீராமானுஜருக்கே உரியது. அவரது புரட்சி வெறும் மந்திரத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, அனைவரையும் சமமாக நேசிக்கும் ஒரு புதிய பார்வையையும் உலகுக்கு அளித்தது.
திருக்கோஷ்டியூரில் நடந்த அந்த ரகசிய உபதேசம், பாரத தேசத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட அத்தியாயமானது.
பாகம் 1 - ராமானுஜாச்சாரியார் திருகோஷ்டியூர் திவ்யதேசத்தில் ஒரு மந்திரத்திற்காக 18 முறை பயணம் செய்தது.
பாகம் 2 - ராமானுஜாச்சாரியார் திருகோஷ்டியூர் திவ்யதேசத்தில் ஒரு மந்திரத்திற்காக 18 முறை பயணம் செய்தது.
ஜெய் ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீ மதே ராமானுஜாய நம:


Comments