top of page

Vaikunda Ekadesi: Srirangam பகல் பத்து 5 ஆம் நாள் உற்சவம்! ரெங்க விமானமும் தாளமாகிய நம்பெருமாளும்!!

ஸ்ரீரங்கம் பெருமாள் திருக்கோவிலில் இன்று 5 ஆம் நாள் பகல்பத்து உற்சவம் நடைபெற்றது. திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

சென்ற பதிவில் அரையர் சேவை பற்றியும் அவர்கள் தமிழ் வேதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூலம் உலகோருக்கு முத்தமிழின் சிறப்பை விவரிக்கும் அழகினையும் முழுமையாக விளக்கப்பட்டது. மேலும் ராமாநுஜர் முதலான ஆசார்யர்கள், பாசுரங்களின் ஆழ்பொருளுக்குத் தக்கவாறு அரையர்களின் அபிநயத்தை மாற்றிய வைபவத்தையும் அறிய இதை இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.


இன்று நம்பெருமாள் சாத்துப்படி (அலங்காரம்):

  • ரத்தின பாண்டியன் கொண்டை

  • வைர அபய ஹஸ்தம்

  • வைர கைக் காப்பு

  • ப்ரணவாஹார விமானப் பதக்கம்

  • நெல்லிக்காய் மாலை

  • அடுக்கு பதக்கம்

  • முத்து சரம்

உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்

இன்றைய அரையர் சேவையின் சிறப்பு:

இன்று அரையர் சேவையில் திருவரங்கனை மட்டுமே பாடிய தொண்டரடிப்பொடியாழ்வார் மற்றும் திருப்பாணாழ்வார் பாசுரங்களை மட்டுமே அரையர்கள் விண்ணப்பம் செய்வர்.

அதற்கேற்ப நம்பெருமாள் திருமார்பில் ப்ரணவாஹார (ஸ்ரீரங்க) விமானம் போல் வடிவமைத்த பதக்கத்தை அணிந்து கொள்வார்.

ஸ்ரீரங்க விமான பதக்கத்தின் அழகு:

திருவரங்கம் பெரிய கோயிலின் விமானமானது பிரணவாகார விமானம் என அழைக்கப்படும். அந்த விமானத்தினை போன்றே இந்த பதக்கமும் வடிவமைக்கப்பட்டு இருக்கும். பதக்கத்துக்குள் பள்ளி கொண்டிருக்கும் பெரிய பெருமாள், நம்பெருமாள், உபய நாச்சிமார்கள், துவார பாலர்கள் ஆகியோரை சேவித்துக் கொள்ளலாம்.

இந்தப் பதக்கத்தை சுந்தர பாண்டியன் அரசன் சமர்பித்தார். இது போல் பல கைங்கரியங்களையும் திருவரங்கனுக்கு செய்தார். அது குறித்து மற்றொரு பதிவில் விரிவாகக் காணலாம்.

அரையர் சேவையில் - அரங்கனை மட்டுமே பாடிய ஆழ்வார்களின் பாசுரங்கள்: இன்றைய பாசுரங்கள்:

• திருமாலை - 45 பாசுரங்கள் (தொண்டரடிப்பொடியாழ்வார்)

• திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள் (தொண்டரடிப்பொடியாழ்வார்)

• அமலனாதிபிரான் - 10 பாசுரங்கள் (திருப்பாணாழ்வார்)

குறிப்பு:

இவர்கள் திருவரங்கத்தை மட்டுமே பாடியுள்ளார். வேறு எந்த திவ்யதேசத்தையும் பாடவில்லை. இவ்விரு ஆழ்வார்களின் 65 பாசுரங்கள் மட்டுமே இன்றைய அரையர் சேவையில் தாளத்துடன் பாடப்படும். (மற்றெல்லா நாட்களிலும் 200-240 பாசுரங்கள்).

"திருமாலையில்" " காவலிற் புலனை வைத்து"(முதல் பாசுரம்) என்ற பாசுரத்திற்கும், அமலனாதிபிரானில் "அமலன் ஆதி பிரான், அடியார்க்கு என்னை ஆட் படுத்த விமலன்"(முதல் பாசுரம்) என்ற பாசுரத்துக்கும் அபிநயம்/ வியாக்கியானங்கள் அரங்கேறும்.

இன்று அரையர் சேவை அபிநயம் சற்று அதிகமாகவே இருக்கும்.

அரையர் திருவாராதனம்:

ஐந்தாம் நாள் அரையர் சேவையின் சிறப்பு அம்சம், அரையர் திருவாராதனம் ஆகும். அரங்கன் நித்யமும் கண்டருளும் திருவாராதனம் வைபவங்களை அரையர் ஸ்வாமிகள் அற்புதமாக நடித்துக் காட்டுவார்கள்.

அரையர்களே மாறி,மாறி ஸ்தானீகர், அர்ச்சகர்(வேதாசார்யர்), கோவில் மணியம், விளக்கு/தூபம் எடுத்துக் கொடுப்போர், தீர்த்தம் சேர்ப்போர், வாத்தியம் இசைப்போர் எனப் பல்வேறு கதாப்பாத்திரங்களாக மாறி நடித்துக் காட்டுவர்கள். மேலும் அவர்கள் இசைக்கும் தாளங்களில் ஒன்றையே நம்பெருமாளாக உருவகித்துக் கொள்வார்கள். மற்ற தாளங்களை தீர்த்த வட்டில்களாகப் பாவித்து, திருத்துழாயையே தீர்த்தமாகக் கொண்டு, நம்பெருமாளுக்கு நடைபெறும், திருவாராதனத்தை நட(டி)த்துக் காட்டுவார்கள்.

திருவாராதனக் கட்டியங்களான

'திருக்கரகக்கைகரவேல்',

'திருவடி விளக்குவதேல்',

சுந்தர பாண்டியன்பிடித்தேல்','

திருமணி பரிமாறுவான்',

'மங்கள வாத்யம்'முதலானவையும் உரைக்கப்படும். இந்தத் திருவாரதன நிவேதனத்துக்காக பக்தர்கள் பலரும் பழங்கள், உலர்ந்த பழங்கள், கல்கண்டு ஆகியவற்றை பக்தியுடன் கொண்டுவந்து சமர்ப்பிப்பார்கள். அவை இந்தப் பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்படும்.

மேலும் புறப்பாடு, திருவாராதனம், அருளப்பாடு, வேத விண்ணப்பம் ஆகிய திருஅத்யயன உற்சவத்தின் போது நடைபெறும் வைபவங்கள் அனைத்தும் நடத்திக்காட்டப்படும். பெரிய கோயிலில் ஒரு நாள் முழுவதும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளையும், உற்சவ காலங்களில் நம்பெருமாள், புறப்பாடு கண்டருளுவதற்கு முன்பு நடைபெறும் நிகழ்ச்சிகளையும், அரையர்கள் நடத்திக் காட்டுவார்கள். நம்பெருமாளுக்கும் படியேற்றம், அரையர் கொண்டாட்டம், சதுர்கதிகளில் புறப்பாடு ஆகியவை நடைபெறும்.

வருடம் முழுவதும் காத்திருந்த அரசன்:

"கைசிக துவாதசியன்று காலை 5.45க்கு நடக்கும் கற்பூரப் படியேற்றத்தைச், சேவிக்க வந்த மன்னன் 'விஜயசொக்க ரங்கநாதர்' சில நிமிடங்கள் தாமதமாக வந்து சேவிக்க முடியாமல் போனது; மன்னன் தமக்காக இன்னொரு முறை அந்தச் சேவையைப் பிரார்த்தித்த போது நம்பெருமாள் "ஒச்சே ஏன்டிகி"(அடுத்த வருடம் தான்) என்றார்; மன்னன் தம் குடும்பத்துடன் கோவிலிலேயே ஒரு வருடம் இருந்து அடுத்த வருடம் மன நிறைவோடு சேவித்துச் சென்றனர். இந்த வைபவமும் தெலுங்கு மொழி வசனங்களுடன் நடித்துக் காட்டப்படும். (தெலுங்கைத்தாய் மொழியாகக் கொண்ட மன்னன்.) இந்த மன்னன் குடும்பத்தினரோடு இன்றவும் கற்சிலை வடிவில் இருப்பதை திருவரங்கம் கோயிலில் காணலாம்.

இறுதியாக அரையர் ஸ்வாமிகள் மற்ற திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான் பாசுரங்களையும் தாளத்துடன் பாடி முடிப்பார்கள். பிறகு, தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் சூடிக் களைந்த மாலை அரையர் ஸ்வாமிக்குச் சாத்தப்படும்!


இவ்வாறு பெரிய திருநாளில் ஐந்தாம் நாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!




73 views0 comments

Comments


bottom of page