top of page

Vaikuntha Ekadashi 2021: பகல்பத்து 7 ஆம் நாள் உற்சவம்! இப்போது தேவரீருக்கு என்ன திருவுள்ளம்!!

பகல்பத்து திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவத்தில், 2 அரையர் சேவை நடைபெறுகிறது. எந்த ஆசார்யருக்கும் கிடைக்காத ஒரு மாபெரும் பாக்கியம் நஞ்சீயருக்குக் கிடைத்தது. அது என்ன?

ஸ்ரீரங்கம் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் ஏழாம் நாள் பகல்பத்து உற்சவம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று பகல்பத்து திருநாளையொட்டி, திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் அரையர்களால் சேவிக்கப்படும். நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

நம்பெருமாளும் நம் திருமங்கை மன்னனும்

நம்பெருமாள் சாத்துப்படி(அலங்காரம்);

நம்பெருமாள் முத்து சாய்வு கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிக் கொண்டு சேவை சாதிக்கிறார். திருமங்கை ஆழ்வார் அழகு: திருமங்கை ஆழ்வார் ராஜமகுடம்,மார்புக் கவசத்துடன்,கால்செராய் அணிந்து,வேல்,கத்தி,கேடயம் ஏந்தி கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார்.


அரையர் சேவை:

நான்காம் நாள் திருநாளைப் போலவே, இன்றும் 2 அரையர் சேவைகள் நடைபெறும்.

இன்றைய பாசுரங்கள்:

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி - "தூவிரிய மலர் உழக்கி" (3-6) தொடங்கி - 210 பாசுரங்கள்

இன்றைய அரையர் அபிநயம் & வியாக்கியானம்:

(முதல் அரையர் சேவை)

தூவிரிய மலர் உழக்கி பாசுரம் (பெரிய திருமொழி 3-6-1)


வாமன அவதாரம்(நாடகம்): (2 ஆம் அரையர் சேவை)

வாளாய கண்பனிப்ப மென்முலைகள் பொன்னரும்ப

நாணாளும் நின்னினைந்து நைவேற்கு, ஓமண்ணளந்த

தாளாளா தண்குடந்தை நகராளா வரையெடுத்த

தோளாளா, என்றனக்கோர் துணையாள னாகாயே. (பெரிய திருமொழி 3-6-5)


"மண்ணளந்த தாளாளா" பாசுரத் தொடருக்கு ஏற்ப, எம்பெருமான் எடுத்த, வாமன அவதாரத்தை அரையர்கள் "தம்பிரான்படி" வியாக்கியானம் சேவித்து நாடகமாக நடித்துக் காட்டுவார்கள்.


நம்பெருமாளுக்கும், நஞ்ஜீயருக்கும் "தூவிரிய மலருழக்கி" எனும் பெரிய திருமொழி பதிகத்திற்கும் உள்ள தொரடர்பு:

பராசரபட்டருக்குப் பின் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைமைப் பீடத்தை, அவரால் திருத்திப்பணி கொள்ளப்பட்ட நஞ்சீயர் என்னும் ஆசார்யர் அலங்கரித்தார். நூறு திருநட்சத்திரம் எழுந்தருளியிருந்து, கைங்கர்யம் செய்து, அவர் தம் அந்திமக்காலத்தில் மிகவும் உடல் நலிவுற்றுக் கிடந்த போது, அவரைப் பார்க்க வந்த, அவருடைய சீடரான' பெற்றி'என்பவர், "இப்போது தேவரீருக்கு என்ன திருவுள்ளம் (என்ன வேண்டும்)எனக் கேட்க அதற்கு நஞ்சீயர், திருமங்கையாழ்வார் அருளிச்செய்த, "தூவிரிய மலருழக்கி " பதிகத்தினை காதாரக் கேட்க வேணும் என்றும், நம்பெருமாள் எழுந்தருளி அவரது பின்னழகும், முன்னழகும், சுற்றழகும் ஸர்வவஸ்வதாநமாக ஸ்வயம் திருமேனியாக சேவிக்க வேண்டும்" எனவும் தெரிவித்தார்.


பெற்றி, அப்போதிருந்த பெரிய கோவில் அரையர் ஸ்வாமி "வரந்தரும்பெருமாள் அரையர்" என்பவரை நஞ்சீயரிடம் அழைத்து வந்து" தூவிரிய மலருழக்கி துணையோடும் பிரியாதே" என்கிற திருமொழியை சேவிக்கச் செய்தார்.


அதைக் காதாரக் கேட்டுக் கொண்டு இருந்த நஞ்சீயர்,நான்காவது பாசுரமான "தானாக நினையாமல் தன்னினைந்து நைவேற்கு ஓர் மீனாய கொடி நெடுவேள் செய்ய மெலிவேனோ" ('எம்பெருமான் தானாகவே என்னை நினையாமல் போனாலும், அவனையே நினைத்துக் கொண்டு, மனம் தளர்ந்து இருக்கின்ற என்னை, மன்மதன் துன்பப்படுத்த நான் இப்படி இளைத்துப் போவேனோ' என்று பரகால நாயகி சொல்வது) என்று அரையர் பாடியபோது, உடல் நலிவதற்கு முன்பே,எம்பெருமான் வந்து உதவாமல் போனாலும், அந்த நோயை நீக்கவாவது வந்தாலாகாதோ? என்றருளிச் செய்து, மிகவும் தளர்ந்து வருந்தினாராம்.


அவர்கள் இவற்றை, நம்பெருமாளிடம் விண்ணப்பம்செய்ய, நம்பெருமாளும் உடனே புறப்பட்டருளி நஞ்சீயர் மடத்து வாசலிலே சென்று வஸ்திரம் கலைந்து சுயம் திருமேனியில் சீயரை அநுக்கிரகத்து அருள, சீயரும் பெருமாளை மனதார அநுபவித்தார். எந்த ஆசார்யருக்கும் கிடைக்காத இந்த மாபெரும் பாக்கியம் நஞ்சீயருக்குக் கிடைத்தது. வெகு திருப்தியடைந்த சீயர் தம் சிஷ்யர்களுக்குத் தகுந்த உபதேசம் செய்துவிட்டு திருநாட்டுக்கு எழுந்தருளினார்!!

திருவரங்கம் கோயிலில் நஞ்சீயர் சன்னதி:

திருவரங்கத்தில் ரங்கா! ரங்கா! கோபுரத்துள் நுழைந்தவுடன் வலதுபுறம் உள்ள, கூரத்தாழ்வான் சந்நிதி கருவறையில் கூரத்தாழ்வான், பராசரபட்டர், நஞ்சீயர் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள்.

அடுத்தமுறை கோயில் சென்றால் கூரத்தாழ்வார் சன்னதியில் நஞ்ஜீயரை சேவிக்கவும்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

85 views0 comments
bottom of page