இராப்பத்தின் 7 ஆம் நாள் உற்சவத்தில், இரண்யவதத்துக்கு அரையர்கள், தீர்த்தம், சடாரி சாத்தினர். "இரண்யவதம்"அருளப்பாடு ஆகி நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.
நம்பெருமாள் இன்று மாலை 3 மணிக்கு, மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, பரமபத வாசல் திறந்து, 5மணிக்குத் திருமாமணி மண்டபம் அடைந்தார்.
இன்று நம்மாழ்வாருக்குக் "திருக்கைத்தல சேவை" சாதிப்பதால்,
அதிக திருவாபரணங்கள் அணியாமல், 4/5 வஸ்திரங்களை சாற்றிக் கொண்டு, எழுந்தருளினார்.
மற்ற இராப்பத்து நாட்களைப் போல,இன்று நம்பெருமாள் போர்த்திக்கொண்டு புறப்படுவதும், பரமபத வாசலில் திரை போட்டு, மாலை சாற்றிக் கொள்வதும் கிடையாது.மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் திருக்கைத்தல சேவை சாதித்தார்.
அரையர் சேவை:
இன்று திருவாய்மொழி,7-1-1 பாசுரம்"உண்ணிலாவிய ஐவரால்" பதிகம் சேவிக்கப் பட்டு, அரையர் சேவை கைத்தல சேவைக்காக நிறுத்தப்படும். திருவாய்மொழியில் திருவரங்கத்திற்கு ஆழ்வார், மங்களாசாசனம் செய்தது
7ஆம் பத்து, 2ஆம் திருவாய்மொழி "கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்" என்று தொடங்கும் 11 பாசுரங்கள் கொண்ட பதிகமாகும்.
(பராசர பட்டர், தமது திருவாய்மொழித் தனியனில், "வான்திகழும் சோலை 'மதிளரங்கர்' வண்புகழ்மேல் ஆன்ற 'தமிழ்மறைகள் ஆயிரமும்' ஈன்ற முதல்தாய் சடகோபன்"என்று நம்மாழ்வார் பாடிய ஆயிரம் பாசுரங்களும் அரங்கனுக்கே என்று கூறிவிட்டார்). கைத்தல சேவை முடிந்ததும்,"கங்குலும் பகலும்" பாசுர வியாக்யானம், அபிநயம் ஆகும்.
தொடர்ந்து 7 ஆம் பத்தில் உள்ள மற்ற பாசுரங்கள் சேவிக்கப்படும்.
"இரண்யவதம்"அருளப்பாடு ஆகி நாடகமாக நடித்துக் காட்டப்படும்.
பராங்குச நாயகி:
ஆண்மகனான ஆழ்வார் 'பராங்குசன்', தன்னிலைமாறி, பெண்ணிலை அடைந்து (உருவகம்),'பராங்குச நாயகி'யாக மாறுகிறார். பராங்குச நாயகியாகிய தலைமகள், திருவரங்கனைக் கண்டு மனமுருகி,கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் நிலையை அவளுடைய தாயார் அரங்கனிடம் இவ்வாறு உரைக்கிறார்.
"கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்,
கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்,
தாமரைக் கண் என்றே தளரும்
எங்கனே தரிக்கேன் உன்னை விட்டு?என்னும்
இருநிலம் கைதுழா இருக்கும்,
செங்கயல் வாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயே?"
மற்ற 10 பாசரங்களும் இதே ரீதியில். அதனால் தான் இன்று பராங்குசனான, ஸ்வாமி நம்மாழ்வார், பராங்குச நாயகியாகக் காட்சியளிப்பார்.
இதற்காக, இன்று நடை கொட்டகையில் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்துக்குப் பதிலாக, ஸ்ரீரங்க நாச்சியாரைப் போற்றி, ஸ்ரீகூரத்தாழ்வான்அருளிச்செய்த,
"ஸ்ரீ ஸ்தவமும்" ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்த, "ஸ்ரீ குணரத்ன கோசமும்" சேவிக்கப்படும். இரண்டு கிரந்தங்களிலிருந்தும் ஒரு ஸ்லோகத்தை அனுபவிக்கலாம்:
ஸ்ரீஸ்தவம்: ஸ்லோகம் 3:
"ஸ்தோத்ரம் நாம கிமா மநந்தி கவயோ
யத்யந்யதீயான் குணாந்
அந்யத்ர த்வஸதோசதிரோப்ய பணிதி:
ஸா தர்ஹி வந்த்யா த்வயி ... !!!
ஸம்யக் ஸத்யகுணாபி வர்ணா நமதோ
ப்ரூயு: கதம் தாத்ருசீ
வாக்வாசஸ்பதி நாபி சக்யரசநா த்வத்ஸத் குணார்ணோநிதௌ ... !!!"
"இருக்கிறதை இருக்கு என்று பாடுவது ஒரு வகை ஸ்தோத்ரம்.. இல்லாததை இருக்கு எனபது ஏற்றி சொல்வது அடுத்த வகை. தேவி! உன் இடத்தில் எல்லாம் உள்ளன. பல நிதி முத்துக்கள் கடலில் உள்ளது போல உயர்ந்த கல்யாண குணங்கள் இருக்கும் போது எனது சின்ன வாக்கால் எப்படி பாட முடியும்? ஹயக்ரீவர் ஆக இருந்தாலும் முடியாது. ”
ஸ்ரீ குணரத்ன கோசம்-ஸ்லோகம் 58:
"ஐச்வர்யம் அக்ஷர கதிம் பரமம் பதம் வாகஸ்மைசித் அஞ்ஜலி பரம் வஹதே விதீர்யஅஸ்மை ந கிஞ்சித் உசிதம் க்ருதம் இதி அத அம்பத்வம் லஜ்ஜஸே கதய க: அயம் உதாரபாவ:"
"தாயே! ஸ்ரீரங்கநாயகீ! உனக்கு முன்னால் நின்று கொண்டு ஒருவன் தனது இரு கரங்களையும் தலைக்கு மேல் தூக்கி வணங்கினால் நீ துடித்துப் போகிறாய்! என்ன காரணம்? அவனது கைகள் நோகுமே என்றும், அந்தப் பாரத்தை அவன் தாங்குவானா என்றும் என்ணுகிறாய். இதனால் அவனுக்கு மிகுந்த செல்வமும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் வாய்ப்பையும், உயர்ந்த மோக்ஷத்தையும் அளிக்கிறாய்.
இத்தனை செய்த பின்னரும் உனது நிலை எப்படி உள்ளது? “ஐயோ! எதனை நினைத்து இந்தக் குழந்தை நம்மிடம் வந்தானோ? நாம் அளித்தது போதுமானதாக இருந்ததா? இதன் மூலம் இவனது வேண்டுதல் பலித்ததா? தெரியவில்லையே! நாம் குறைவாகக் கொடுத்து விட்டோமோ?”, என்று பலவாறு எண்ணியபடி, நீ வெட்கப்பட்டுத் தலையைச் சற்றே தாழ்த்தி அமர்ந்திருக் கிறாய்.
இத்தகைய உனது கொடைத்திறன் எத்தன்மை உடையது என்பதை நீயே கூறுவாயாக."
திருக்கைத்தல சேவை:
மாலை 5 மணிக்கு நம்பெருமாளை, மூன்று அர்ச்சகர்கள தங்கள் திருக்கைகளிலேயே, எழுந்தருளப் பண்ணி, திருமாமணி மண்டபத்தின் மேல்குறட்டுக்கு வந்து,மேலே தூக்கி, நம்மாழ்வாருக்குப் பிரத்யேக சேவை சாதித்து வைப்பார்கள். (செங்கோலும்,சடாரியும் இல்லாமல்.-- நம்பெருமாள் திருமாமணி மண்டபம் வந்ததும், திரை போடப்பட்ட பிறகு, தோளுக்கினியானில் இருந்து, கீழே இறங்கியதும், அர்ச்சகர்கள், திருமாமணி மண்டபத்தில், உள்ள சிம்மாசனத்தில், நம்பெருமாளின் ஸ்ரீசடாரியையும், செங்கோலையும், எழுந்தருளப் பண்ணுவார்கள்). இந்தக் கைத்தலச் சேவையின் போது,'கங்குலும் பகலும்' பாசுரங்களைச் சேவிப்பார்கள். திருக்கைத்தல சேவைக்காக, உத்தமநம்பி சமர்ப்பிக்கும், சர்க்கரைப் பொங்கல், நம்பெருமாளுக்கு நிவேதனம் ஆகும்.
முதல்நாள் 'உயர்வறஉயர்நலம்' வ்யாக்யானம் ஆன பின்னும்,7 ஆம்நாள் 'கங்குலும்பகலும்' வியாக்யானம், ஆனபின்னும்,நம்மாழ்வார் சந்நிதிக்காரர் மற்றும் அரையர்களுக்கு சாத்துப்படி,(சந்தனம்) வேளையம் (தாம்பூலம்) . சமர்ப்பிப்பார்கள்.
Comentários