top of page

Vaikunta Ekadasi 2021: பகல் பத்து எட்டாம் நாள் உற்சவம்! அரங்க மாநகர் அமர்ந்தானே!!

Updated: Dec 12, 2021

ஸ்ரீரங்கம் பெருமாள் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் எட்டாம் நாள் பகல்பத்து உற்சவம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று பகல்பத்து திருநாளையொட்டி, திருமங்கை ஆழ்வார் பாசுரங்கள் அரையர்களால் சேவிக்கப்படும். நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


நம்பெருமாள் முத்து கிரீடம் அணிந்து, ரத்தின மகர ஹண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சேவை சாதித்து வருகிறார்.


தொடர்ந்து 3 வது நாளான இன்றும் திருமங்கையாழ்வாரின் பாசுரங்களுக்கு அரையர் சேவை நடைபெற்றது. பெரிய திருமொழியில் 5-7-1 "பண்டை நான் மறையும்" பாசுரத்தில் தொடங்கி 250 பாசுரங்கள் விண்ணப்பம் செய்யப்படும்.


இன்றைய அரையர் அபிநயம் & வியாக்கியானம்:


முதல் அரையர் சேவை

பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப்

பதங்களும் பதங்களின் பொருளும்

பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்

பெருகிய புனலொடு நிலனும்

கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்

ஏழு மா மலைகளும் விசும்பும்

அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்-

அரங்க மா நகர் அமர்ந்தானே


அரங்கனுக்கான திருமங்கையாழ்வார் பாசுரம். அதனால் இந்த பாசுரம் அபிநயம் நடக்கும் போது சில சிறப்பு வைபவங்களும் நடைபெறும்:


சிறப்பான விஷயங்கள்:

  1. பாசுரத்தை பல முறை சேவிப்பார்கள் (திரும்பத் திரும்பப் உணர்ச்சிகரமாகப் பாடுவார்கள்)

  2. தசாவதார காட்சிகள் உண்டு, (குறிப்பாகக் கிருஷ்ணாவதாரம் பல நிகழ்வுகளை அரையர் அழகாக அபிநயம் பிடிப்பார்)

  3. ஶ்ரீரங்க விமானம் விபீஷணன் கொண்டு வந்த வைபவம், காவிரி, ஆதிசேஷன்

வியாக்கியான முடிவில் நீண்ட கட்டியம் சேவிப்பார்கள்

உதரணமாக:

  • ஆராமம் சூழ்ந்த அரங்கம்!

  • அணி பொழில் சூழ்ந்த அரங்கம் !

  • அண்டர்கோன் அமரும் சோலை அணி திருவரங்கம் !

  • அந்திபோலும் நிறத்தார் வயல்சூழ் தென் அரங்கம் !

  • செய்ய சாந்தும் கலந்திழி புனல்சூழ் தென அரங்கம் !

  • காவிரி சூழ் தென் அரங்கம் !

  • அழகனூர் அரங்கம் !

  • பாயுநீர் அரங்கம் !

  • அணிநீர்த் தென்னரங்கம் !

  • அல்லிமுத்து அமரும் திருமாவளவன் அரங்கம் !

  • தேனும் பாலும் கலந்தன்னவர் சேர் திருவரங்கம் !

இரண்டாம் அரையர் சேவை: அம்ருதமதனம்

இன்று ஏன் அம்ருதமதனம்?


பெரிய திருமொழியின் 5-7-4 பாசுரம்:

மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக

மாசுணம் அதனொடும் அளவி

பா இரும் பௌவம் பகடு விண்டு அலற

படு திரை விசும்பிடைப் படர

சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும்

தேவரும் தாம் உடன் திசைப்ப

ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்-

அரங்க மா நகர் அமர்ந்தானே

திருவரங்க பெருமானே திருப்பாற்கடல் கடைந்தான் என்று உணர்த்த இன்று அம்ருதமதன நாடகம்.


திருவரங்கனின் பரத்துவம்:


திருவரங்கத்தில் பள்ளி கொண்ட மூலவர் பெரியபெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார். உற்சவர் நம்பெருமாள் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.


ஆனால் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி 5-7 ஆம் பதிகம் முழுதும் "அரங்க மாநகர் அமர்ந்தானே" என்று ஆராதிக்கிறார்.இப்பதிகம் முழுதும், ஆழ்வார் அரங்கனின் பரத்துவத்தை, அற்புதமாகக் கொண்டாடியுள்ளார்.


பரமபதத்தில், பரவாசுதேவர் அமர்ந்த நிலையில் சேவை சாதிப்பதால், அரங்கனிடம் பரமபதநாதனைக் கண்ட ஆழ்வார் "அமர்ந்தானே" என்று பாடி விட்டார் போலும்!


இவ்வைபவத்தைக் காணவும், கேட்கவும், கண்கள் ஆயிரம், காதுகள் ஆயிரம் வேண்டும்!


இவ்வாறாக பெரிய திருநாளில் எட்டாம் திருநாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!


97 views0 comments

Comments


bottom of page