top of page

பகல் பத்து 4 ஆம் நாள் உற்சவம்! கருந்தெய்வமும் ஸ்வாமி இராமானுஜரும்!!

வைகுண்ட ஏகாதசியின் நான்காம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று பகல்பத்து திருநாளையொட்டி, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம் ஆக மொத்தம் 245 பாசுங்ரங்கள் அரையர்களால் தாளத்துடன் பாடப்பெற்றன. குறிப்பாக கம்ச வதத்தினை அரையர்கள் நாடகமாக நடித்துக் காட்டுவார்கள்.

பகல் பத்து உற்சவத்தின் போது நம்பெருமாள் ஆழ்வார் ஆச்சாரியர்கள் புடைசூழ ரேவதி மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் அழகினையும், ஸ்வாமி இராமானுஜரது சூடிக்களைந்த மாலை மற்றும் மரியாதைகள் அரையருக்கு அணிவிக்கும் வைபவங்கள் குறித்து முந்தைய பதிவில் விவரிக்கப்பட்டது. அதை இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.


இன்று நம்பெருமாள் சாத்துப்படி (அலங்காரம்):


நம்பெருமாள் இன்று ,

"கண்ணன் என்னும் கருந்தெய்வம்"

என்ற நாச்சியார் திருமொழி பாசுரத்திற்காக, நாச்சியார் பதக்கத்தை சௌரிராஜ முடியில் சாற்றிக் கொண்டார்.

  • சவுரி தொப்பாரக் கொண்டையுடனான சிகை அலங்காரம்

  • மகரி

  • சந்திர பதக்கம்

  • தலை சாமான்கள்

  • நெற்றி சரம்

  • ரத்தின அபயஹஸ்தம்

  • மகர கர்ண பத்ரம்

  • அடுக்கு பதக்கங்கள்

  • நெல்லிக்காய் மாலை

  • முத்துச்சரம்

  • காசு மாலை

  • முதுகில் முத்து சட்டை

ஆகிய திருவாபரணங்களை அணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


அரையர் சேவை பற்றி...

தமிழ் மொழியின் இயல், இசை, நாடகம் என இம்மூன்றையும் சிறப்பிக்கும் விதமாக நாதமுனிகள் வம்சத்தவர்கள் (அரையர்கள்) இன்றளவும் ஆழ்வார் பாசுரங்களைத் தாளம் இசைக்க, பாடி அனுபவித்து அவற்றின் விளக்கங்களை அழகுற அபிநயம் செய்து முத்தமிழினாலும் அரங்கனை மகிழ்விக்கின்றனர்.

இன்று இரண்டு அரையர் சேவைகள்.


முதல் அரையர் சேவை

காலை 9.30 மணியிலிருந்து 12.30 வரை

இசைத்தமிழ்:

ஆண்டாள் அருளிச்செய்த "நாச்சியார் திருமொழி" பாசுரங்களில்,

"கண்ணன் என்னும் கருந்தெய்வம்" எனத் தொடங்கும் - 13 ஆம் பதிகம்

14-ஆம் பதிகத்தில் - முதல் 20 பாசுரங்கள்

குலசேகர ஆழ்வார் அருளிச்செய்த, "பெருமாள் திருமொழி" - 105 பாசுரங்கள்

திருமழிசையாழ்வார் அருளிச்செய்த, "திருச்சந்தவிருத்தம்" - 120 பாசுரங்கள்

ஆக மொத்தம் 245 பாசுரங்களைத் தாளத்துடன் பாடுவார்கள்.

இயற்தமிழ்:

நாச்சியார் திருமொழியின் "கண்ணன் என்னும் கருந்தெய்வம்",

பெருமாள் திருமொழியின் "இருளிரியச் சுடர்மணிகள்"

ஆகிய இந்த இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய, வியாக்கியானங்கள் செய்யப்படும்.

வியாக்கியான பாசுரங்களும் நம்பெருமாளும்:

"பீதக வண்ண ஆடை கொண்டு என்னை வாட்டம் தணிய வீசீரே" எனும் அமைய பெற்ற பாசுரத்தின் படி நம்பெருமாள் பீதக வண்ண ஆடை உடுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் "கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சிப் பழகிக் கிடப்பேனை" என்பதற்கேற்ப இன்று நம்பெருமாள் கண்ணனாக சேவை சாதிக்கிறார்.


இரண்டாம் அரையர் சேவை

மதியம் 1.30/2 மணிக்கு ஆரம்பித்து 3/3.30 வரை நடைபெறும்.

நாடகத்தமிழ்:

கஞ்சைக் காய்ந்த கருவில்லி கடைக்க ணென்னும் சிறைக்கோலால்

நெஞ்சூடுருவ வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை

அஞ்சேல் என்னானவன் ஒருவன் அவன்மார் வணிந்த வனமாலை

வஞ்சியாதே தருமாகில் மார்வில் கொணர்ந்து புரட்டீரே!!!

பாசுர விளக்கம்:

கம்ஸனைக் கொன்றொழித்தவனும் சார்ங்கவில் போன்ற திருப்புருவங்களை உடையவனுமான கண்ணபிரானுடைய கடாக்ஷங்களிலே நான் மிகவும் ஈடுபட்டு, நிலை தளரந்து போயினேன், "பயப்படாதே" என்றொரு வாய்ச்சொல்லாவது சொல்லலாமே எனில், அதுவும் சொல்லக் காணோம். நீங்களாவது அவனிடஞ்சென்று என் பரிதாப நிலைமையை விண்ணப்பஞ்செய்து அவனையே இங்கு அழைத்துவர முடியாமற் போனாலும், அவன் திருமார்பில் அணிந்த வனமாலையையாவது கொடுக்குமாறு கேளுங்கள். அவனும் அதனை வஞ்சியாமல் கொடுத்தருளினானாகில், அதைக் கொண்டு வந்து எனது நெஞ்சின் தாபம் ஆறும்படி மார்பிலே புரட்டுங்கள் என்கிறாள்.

இந்தப் பாசுரத்தில் "கஞ்சைக் காய்ந்த கருவில்லி" என்பதில் கம்ச வதம் குறித்து அழகாக பாடியுள்ளாள் ஆண்டாள். இந்த கம்சன் வதத்தைப் பற்றி "தம்பிரான்படி"வியாக்கியானங்கள் (அரையர்களின் முன்னோர் எழுதி வைத்த வ்யாக்யானம்) உரைப்பார்கள். அதன்பின், கம்ச வதத்தினை நாடகமாக நடித்துக் காட்டுவார்கள். இது போலவே, ஆழ்வார்கள் பாடிய சில வைபவங்களை, பகல்பத்து 7,8,9,10 ஆம் நாட்களில் இரண்டாம் அரையர் சேவையில் நடித்துக் காட்டுவார்கள்.

உடையவர் காலத்திலும், அதற்குப் பின்னால் பல நூறு ஆண்டுகள் கூட, அப்போது எழுந்தருளியிருந்த, ஆசார்ய ஸ்வாமிகள் நியமனப்படி பல பாசுரங்களுக்கு அபிநயம்/வியாக்யானம் நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும் வேறு,வேறு பல பாசுரங்களுக்கும் அபிநயம் காட்டப்படும். அரையர்கள் போட்டி போட்டிக் கொண்டு, தம் அனுபவத்தை விவரித்து அனைவரையும் பக்தி வெள்ளத்தில் ஆழ்த்திடுவார்கள்.

ராமாநுஜர், எம்பார், பட்டர், மணவாள மாமுனிகள் முதலான ஆசார்யர்கள், பாசுரங்களின் ஆழ்பொருளுக்குத் தக்கவாறு அரையர்களின் அபிநயத்தை மாற்றிய வைபவங்கள் பல உண்டு.

ஆனால், தற்போது ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட சில பாசுரங்களுக்கு மட்டுமே அபிநயமும், வியாக்யானமும் செய்கிறார்கள்.

இந்த அரையர் சேவையை வாழ்நாளில் ஒரு முறையாவது கண்டு அனுபவித்திட வேண்டும். நம்பெருமாளுடன் ஆழ்வார் ஆச்சாரியர்கள் புடைசூழ நாமும் இதை அனுபவிக்கும் போது சில மணிநேரங்கள் நலமந்தமில் நல்நாட்டில் (ஸ்ரீ வைகுண்டத்தில்) இருந்த அனுபவம் கிட்டும். மகிழ்ச்சியில் கண்களில் நீர் ததும்பும்..!


இவ்வாறு பெரிய திருநாளில் நான்காம் நாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!


148 views0 comments

Comments


bottom of page