தலையிலே அணியும் உயர்ந்த ரத்தினம் நம் கூரத்தாழ்வான் என்று ஸ்வாமி இராமாநுசர் கூறிய வைபவத்தை இங்குக் காணலாம்.
ஸ்வாமி இராமாநுசர் சரம ஸ்லோகத்தின் (பகவத் கீதையின் கடைசி ஸ்லோகம்) அர்த்தத்தைப் பெறுவதற்காக திருக்கோட்டியூருக்கு சென்று திருக்கோட்டியூர் நம்பியிடம் வேண்டினார்.
நம்பியோ யாரையும் ஆராய்ச்சி செய்யாமல் விஷயத்தை கொடுக்க மாட்டார். இராமாநுசரையும் சோதித்து பார்த்தார். பலதடவை திருக்கோட்டியூருக்கு வரச்செய்தார். இராமாநுசரும் 17 தடவை சென்றும் விஷயத்தை நம்பி சொல்லவில்லை. 18வது தடவை நம்பி இராமாநுசருக்கு சரமச்லோகத்தின் பொருளை உபதேசித்தார்.
திருக்கோட்டியூர் நம்பி இராமாநுசரைப் பார்த்து, “உம்மையே பல தடவை பரீட்சை செய்த பிறகே இந்த உயர்ந்த பொருளைச் சொன்னேன். நீர் இந்த ரகசியத்தை ஒருவர் காதிலும் படாதபடி காப்பாற்றிக்கொண்டிரும்” என உத்தரவிட்டார். அதற்கு எம்பெருமானார், “தலையிலே அணியும் உயர்ந்த ரத்தினம் போன்ற, பரம பாகவதரான கூரத்தாழ்வானுக்கு மட்டும் இந்த உயர்ந்த பொருளை வெளியிட முடியாமல் என்னால் இருக்க முடியாதே”, என்று சொன்னார்.
அதற்கு, திருக்கோட்டியூர் நம்பி, “ஆழ்வானுக்கு இவ்வர்த்தம் கேட்க தகுதி
இருந்தாலும், அவருடைய திடநம்பிக்கையை ஒருவருட காலம் அடிமை கொண்டு பரீட்சை செய்த பிறகு சொல்லவும்”, என கூறினார்.
இதை இராமநுசரும் ஆழ்வானிடம் கூறினார். இந்த உடல் ஒருவருட காலம் நிலையற்றது என்பதை அறிந்தவர் ஆழ்வான். மேலும், இந்த உயர்ந்த சரம ஸ்லோகத்தின் பொருளை அறிந்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பதை உணர்ந்தார்.
எனவே, அதன் பொருளை உடனே அறிய ஆசையுடன் இருந்தார். மேலும், சாஸ்த்ரங்களில் நுட்பமானதைக் கற்றுத் தெளிந்த ஆழ்வான், “ஆசார்யன் திருமாளிகை வாசலில் ஒரு மாத காலம் பட்டினி கிடந்தால், அதுவே ஒரு வருட காலம் ஆசார்யனுக்கு அடிமை செய்வதற்கு சமம்”, என்பதை அறிந்தவர் ஆழ்வான். அதன்படி, ஒரு மாத காலம் இராமாநுசரின் திருமாளிகை வாசலில் பட்டினி கிடந்து, அந்த உயர்ந்த பொருளை இராமாநுசரிடம் பெற்றார்.
Comments