top of page

இராபத்து நான்காம் நாள் உற்சவம்! நம்பெருமாள் பெயர்க்காரணமும், முக்கியமான அந்த 48 ஆண்டுகளும்

நம்பெருமாள் ரத்தின நீள் முடி,ரத்தின அபயஹஸ்தம் மற்றும் திருஆபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்

மூலஸ்தானத்தில் இருந்து, சிம்ஹ கதியில், புறப்பட்டு,ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் திருச்செவி சாத்தியருளி (ஏற்கனவே பதிவிட்ட முறைப்படி)

திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள் கிறார்.இராப்பத்து 2 ஆம் நாளிலிருந்து 6 ஆம் நாள் வரையும்,9 ஆம் நாளும் ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் சேவிக்கப்படும்.அரையர் சேவை:


திருவாய்மொழி 4 ம் பத்து, முதல் பாசுரம்"ஒருநாயகமாய்" பதிகம்தொடங்கி,

4 ம் பத்து,10ம் திருவாய்மொழி, "ஒன்றும் தேவும்"பதிகம் ஈறாக, தாளத்தோடு சேவிக்கப்படும். "ஒன்றும் தேவும்"பாசுரத்திற்கு மட்டும் அபிநயமும்,ஈடு வியாக்கியானங்களும் சேவிக்கப்படும். கலாப காலத்தில் அத்யயன உற்சவம்!!

துலுக்கர்களின் படையெடுப்பின்போது,(கி.பி.1323 ம்ஆண்டு) அரங்கன்,பள்ளி

கொண்டு இருக்கும் கருவறைக்கும், மூலவருக்கும் "கல்திரை" போடப்பட்டு இருந்தது. உற்சவரான அழகிய மணவாளனை (கஸ்தூரிரங்கன்), அன்றைய வைணவப் பிரதம ஆசார்யர் ஸ்ரீபிள்ளை லோகாசார்யர் பல்லக்கில் எழுந்தருளச் செய்து மதுரைப்பக்கம் எடுத்துச் சென்று விட்டார்.


பல ஊர்களிலும் சஞ்சரித்த பெருமாள், 48 ஆண்டுகளுக்குப் பின் (கி.பி.1371) மீண்டும் அரங்கத்திற்குத் திரும்பினார்; அவர்தான் அழகிய மணவாளன் என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாத போது, ஒரு ஈரங்கொல்லி (சலவைத் தொழிலாளி), பெருமாள் திருமஞ்சன தீர்த்தத்தின் வாசனை நுகர்ந்து, இவர் தான் 'நம்பெருமாள்', 'நம்பெருமாள்' என்று கொண்டாடிக் குதித்தார். அந்தப் பெயரே பெருமாள் திருநாமமாகி விட்டது. திருவரங்கம் பெரியகோயில், இந்த 48 ஆண்டுகள் முகம்மதியர்களால் பல இன்னல்களைச் சந்தித்தது. அவர்கள் கோயிலில் இருந்த, நகைகளையும், பொருட்களையும் கொள்ளையடித்தும், கோயிலின் அழகான சிற்பங்களை உடைத்தும், சேதப்படுத்தி இருந்தார்கள். அந்த 48 ஆண்டுகளும், திருஅத்யயன/பகல்பத்து, இராப்பத்து உற்சவம் இப்போது நடைபெறுவதில், 5 சதவிகிதத்துக்கும், குறைவான அளவிலேயே நடந்தது எனலாம்.


தாளம் இசையாத அரையர் சேவை!!

அந்த இக்கட்டான சூழ்நிலையில் கூட, அரையர் ஸ்வாமிகள், மூலவரான,

ஸ்ரீரங்கதாதப் பெருமாள் சந்நிதியின் முன்பு நின்று கொண்டு, தாளங்கள் கொண்டு ஓசை எழுப்பாமல், தங்களுடைய கைகளைத்தட்டித் தாளம்போட்டு

48 வருடங்களும், சில குறிப்பிட்ட திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைச் (பெரிய திருமொழி மற்றும் திருவாய்மொழியில்) சேவித்து அரையர் சேவையை, சப்தமில்லாமல்,அமைதியாக, மிகச்சிறந்த அர்ப்பணிப்புடன் நடத்தினார்கள். (தாளமிட்டால் எதிரிகளால் இன்னல் விளையும் என்று).


நம்பெருமாள் 48 ஆண்டுகள், இந்த உற்சவம் கண்டருள வில்லை என்றாலும் ,மூலவர் ஸ்ரீரங்கநாதர், இந்த உற்சவத்தினை, அரையர்கள் மூலம் நடத்திக் கொண்டார்.


மிகவும் ஆபத்தான கலாபகால கட்டத்திலும்,இந்தக்கலையைக்

காப்பாற்றிய பெருமையும், அதோடு கைகளாலேயே தாளம் இசைத்து,சில பாசுரங்களை மட்டும் சேவித்து, அபிநயமும்,ஈடுவியாக்கியானங்களும், சேவித்து, இந்த உற்சவத்தை நடத்தியதோடு இல்லாமல், அவர்களின் முன்னோர்கள்'ஓலைச்சுவடிகளில்'எழுதி வைத்த விரிவுரைகளையும் , வியாக்கியானங்களையும், காப்பாற்றியது பெரியகோவில் அரையர்களின் மாபெரும் கைங்கர்யமாகும்!!

கோயில் திருவாய்மொழி!

அரையர்கள் கைகளாலேயே தாளமிட்டு,பெரியபெருமாளின் கல்திரை போடப்பட்ட மூலஸ்தானத்தின் முன்பு சேவித்த , பாசுரங்களே,

"கோயில் திருமொழி" மற்றும் "கோயில் திருவாய்மொழி" என்று அழைக்கப்படுகின்றன.


திருவாய்மொழி பாசுரங்களில்,

(1) "உயர்வற",

(2)"வீடுமின் முற்றவும்

(3) "கிளரொளி இளமை",

(4) "ஒழிவில் காலமெல்லாம்"

(5) "ஒன்றும் தேவும்",

(6)"ஆரா அமுதே",

(7)"உலகமுண்ட பெருவாயா",("கங்குலும் பகலும்"

(9)"நெடுமாற்கடிமை"

(10)"மாலைநண்ணித் தொழுதெழுமினோ",

(11)"சூழ்விசும்பு அணிமுகில்"

(12)"முனியே,முக்கண்ணப்பா"

ஆகிய பதிகங்கள்"கோயில் திருவாய்மொழி" என்று அழைக்கப்படுகின்றன.

செந்தமிழ் வேதியர் வீதி:

திருவரங்கத்தில் இப்போதுள்ள கீழ உத்திர(உள் திரு) வீதிக்கு ஸ்வாமி இராமாநுஜர்"செந்தமிழ்(வேதியர்/)பாடுவார் திருவீதி" என்று பெயரிட்டு அழைத்தார்.செந்தமிழ் பாடுவார், என்றால், செந்தமிழ் பாசுரங்களான,

நாலாயிர திவ்ய பிரபந்தங்களைப் பாடுகின்ற அரையர்களைக் குறிக்கும்.


உடையவர் காலத்தில், இந்த வீதியில் 700 அரையர்கள் வசித்து வந்ததாக, "ராமாநுஜார்ய திவ்யசரிதை",என்னும் நூலில்,பிள்ளை லோகம் ஜீயர் ஸ்வாமிகுறிப்பிட்டுள்ளார். இப்போது 12 அரையர்களே (இரு குடும்பங்களாக நாதமுனி அரையர்கள், திருவரங்கப் பெருமாள் அரையர்கள் என்று) உள்ளனர்!!


சிறிய தாளமும்,பெரிய மணியும்


அரையர்களின் எண்ணிக்கை, குறைந்து வந்த காலகட்ட த்தில், அவர்கள் உபயோகித்து வந்த தாளங்கள் உருக்கப் பட்டு,ஒரு பெரிய திருமணியாக வார்க்கப்பட்டது.அந்தப் பெரியமணி அர்ச்சுன மண்டபத்துக்குச் செல்லும் வழியில் நின்று, ப்ரணவாகார (தங்க)விமானம் சேவிக்கும் இடத்தில் தொங்க விடப்பட்டுள்ளது.அந்தப் "பெரியமணியின்"ஓசையைக் கேட்டுக்கொண்டே, இரவில், கோயிலின் நடை சாற்றப்படுமுன், பெரிய பெருமாள் 'அரவணைத் தளிகை' கண்டருளுகிறார்.


( இரவு சுமார் 10 மணிக்கு இந்த மணி

(அரவணை மணி சேவிக்கப்படுகிறது.)


65 views0 comments

Comentarios


bottom of page