top of page

பகல்பத்து 9 ஆம் நாள் உற்சவம்: வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய முக்கிய நிகழ்வு

பகல்பத்தின் ஒன்பதாம் நாள் உற்சவத்தில், இன்று குறத்தி குறிசொல்லுதல் சுபாவம் நிகழ்கிறது.

இன்று முத்துக்குறி வைபவத்தையொட்டி, நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம் (விஜயரங்க சொக்கநாதர் சமர்ப்பித்தது) , முத்து காதுகாப்பு, முத்தங்கி, முத்து ஆபரணங்கள் அணிந்து சேவை சாதிக்கிறார்.


ஆழ்வார், ஆசார்யர்களும் முத்துக்கிரீடம் தரித்து எழுந்தருளி இருப்பார்கள்.




இன்றும் இரண்டு அரையர் சேவை நடைபெறும்


முதல் அரையர் சேவை

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி - 200 பாசுரங்கள்

இன்றைய அபிநயம் & வியாக்கியானம் பெரிய திருமொழி பாசுரம் தெள்ளியீர்! தேவர்க்கும்* தேவர் திருத்தக்கீர்!*

வெள்ளியீர் வெய்ய* விழுநிதி வண்ணர்* ஓ!

துள்ளுநீர்க்* கண்ணபுரம் தொழுதாள் இவள்-

கள்வியோ,* கைவளை கொள்வது தக்கதே?


இந்தப் பாசுரம் தொடங்கி 200 பாசுரங்கள் அரையர் தாளத்துடன் பெருமாள் திருமுன்பு சேவிப்பார்கள்.


பின்பு நம்பெருமாளுக்கு அலங்காரம் அமுது செய்யப்படும்.


இரண்டாம் அரையர் சேவை:


இரண்டாம் அரையர் சேவையில் "முத்துக்குறி" நடைபெறும்.


முத்துக்குறி என்றால் என்ன?


ஆழ்வார் (பெண் பாவனை ஏற்று) நாயகியாக பெருமானை அடைய வேண்டி துடித்துக் கொண்டிருக்கிறார், அதைப் போக்க ஆழ்வாரின் தாயார் கட்டுவிச்சி எனும் குறத்தியின் மூலம் முத்துக்களை பரப்பி குறி கேட்கும் வைபவம். இதற்கு முத்துக்குறி என கூறப்படுகிறது.


இந்த குறி பார்ப்பது இரு வகை உண்டு.


1) கண்ணை மூடிக்கொண்டு தன் கை விரல் கொண்டு மணலில் வட்ட வடிவமாக வரைய வேண்டும். அது ஆரம்பித்த இடத்திலேயே சேரவேண்டும்.

2) தரையில் நிறைய வட்டங்கள் வரைந்து அதன் மேல் சோழிகளை பரப்பி விட வேண்டும். எந்த வட்டத்தினை நினைக்கிறார்களோ அந்த வட்டத்திற்குள் சோழி விழவேண்டும். அப்படி விழுந்தது எனில், தன் மனதில் இருப்பவருடன் ஒன்று சேர்வார்கள் என்பது வழக்கம்.

ஆழ்வாரும் முத்துக்குறி வைபவமும்

ஆழ்வார்கள் நாயிகா பாவம் எடுத்து பாசுரங்கள் பாடுவது வழக்கம். அதேபோல் திருமங்கையாழ்வாரும் நாயிகா பாவத்தில் (பரகால நாயகி) பாடியிருக்கும் சில பாசுரங்களைக் கொண்ட பிரபந்தமே திருநெடுந்தாண்டகம் ஆகும்.


திருநெடுந்தாண்டகம் பத்தாம் பாசுரம்:

பொன்னானாய்! பொழிலேழும்காவல்பூண்ட 
புகழானாய்! இகழ்வாயதொண்டனேன்நான் * 
என்னானாய்! என்னானாய்! என்னலல்லால் 
என்னறிவன்ஏழையேன் * உலகமேத்தும் 
தென்னானாய்! வடவானாய்! குடபாலானாய்! 
குணபாலமதாயனாய்! இமையோர்க்குஎன்றும் 
முன்னானாய்! * பின்னானார்வணங்கும்சோதி! 
திருமூழிக்களத்தானாய்! முதலானாயே! 
  • பொன்னானாய்,...

  • புகழானாய்,..

  • என்னானாய், என்னானாய்....

  • தென்னானாய்,..

  • வடவானாய்,...

  • குடபாலமதயானாய்,...

  • குணபாலமதயானாய்!...

  • முன்னானாய்...

  • திருமூழிக்களத்தானாய்..

  • முதலானாயே

என ஆற்றாமையால் அல்லல் படும் ஆழ்வார் அந்த உள்ள வெக்கையால் ஆணாக இருந்தவர், பரகால நாயகி எனும் பெண்நிலையை (தலைவி) அடைந்தார்.


அதன் பின்,

11 - ஆம் பாசுரம்

பட்டு உடுக்கும் அயர்த்து இரங்கும் பாவை பேணாள்*  
பனிநெடுங் கண்நீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,* 
எள்துணைப்போது என்குடங்கால் இருக்ககில்லாள்*  
எம்பெருமான் திருவரங்கம் எங்கே?' என்னும்* 

மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல்*  
மடமானை இதுசெய்தார் தம்மை,*  மெய்யே- 
கட்டுவிச்சி சொல்', என்னச் சொன்னாள் 'நங்காய்!- கடல்வண்ணர் இதுசெய்தார் காப்பார் ஆரே?'

இந்தப் பாசுரத்தின் படி, "கட்டுவிச்சி சொல்லச் சொன்னால்" என்ற குறி பார்த்த வைபவத்தை, நாடகம் மற்றும் வியாக்கியானமாக அரையர் சுவாமிகள் நாடகமாக நமக்கு இன்று அருளுவார்கள்.


ஆழ்வாரின் தாயார் தன்னுடைய மகள் ஏன் இப்படி இருக்கிறாள்? என கட்டுவிச்சியிடம் கேட்பார். அதற்கு முத்துக்களை பரப்பி கட்டுவிச்சி குறி சொல்லுவாள். நாயகியாக இருக்கும் ஆழ்வாரை பெருமான் முன்பு கொண்டு நிறுத்துவது மட்டுமே இந்த துடிப்புக்கு மருந்து.

அரையர் ஆழ்வாரின் தாயாராகவும் குறி சொல்லும் கட்டுவிச்சியாகவும் தன் குரலை மாற்றி மாற்றி நம்பெருமாள் முன்பு விண்ணப்பம் செய்வார்.


கடைசியாக, அரையர் நாயகியான திருமங்கையாழ்வாரை நம்பெருமாள் முன்பு நிறுத்துவதாக முத்துக்குறி வைபவத்தை நிறைவு செய்வார். இதன்மூலம் திருமங்கையாழ்வார் சரணாகதி அனுஷ்டித்ததாக கூற்று உண்டு.

அரையர் குறி சொல்லி திருமங்கையாழ்வாரை நம்பெருமாளிடம் அடைய வைத்ததற்காக தீர்த்தம் மற்றும் ஸ்ரீசடகோபம் பெற்று, அதன்பிறகு பக்தர்கள் அனைவருக்கும் இன்று தீர்த்தம் சடகோபம் அரையர் சாதிப்பார்.


இந்த "கட்டுவிச்சி (குறத்தி) குறிசொல்லுதல்" என்னும் நிகழ்வு, வாழ்வில் ஒருமுறையாவது, நாம் கேட்க வேண்டிய, கண்ணால் கண்டு இன்பமாய் கழிக்க வேண்டிய முக்கிய நிகழ்ச்சியாகும்.


இவ்வாறாக பெரிய திருநாளில் ஒன்பதாம் திருநாள் இனிதே நடைபெற்றது!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!




128 views0 comments

Comments


bottom of page