top of page

இராப்பத்து 9 ஆம் நாள்: நான் தொழும் நம்பெருமாள் என்பர் இவர்தான் ஞாலத்துள்ளே!!

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து ஒன்பதாம் நாள் திருவிழா முன்னிட்டு, நம்பெருமாள் இன்று ஹஸ்தத்தில் சுட்டிப்பூ தொங்கல் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.



நம்பெருமாள் இன்று பனிக்குல்லாயில் புஜகீர்த்தியுடன், மகர கர்ண பத்திரம், வைர அபய ஹஸ்தம், பங்குனி உத்திர பதக்கம், பெரிய பிராட்டி பதக்கம், ரங்கூன் அட்டிகை, பவழ மாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8வட முத்து சரம், அடுக்கு பதக்கங்கள், ஹஸ்தத்தில் சுட்டிப்பூ தொங்கல் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.


திருவரங்கக் கூட்டத்தார் பாட்டு! இன்று 'திருவரங்கக் கூட்டத்தார்' அரங்கனைப் போற்றிச் சிறப்பாகப் பாடுவார்கள். முதலில் ராஜமகேந்திரன் சுற்றிலும், பின்னர் துரைப்பிரதட்சிண த்திலும் பாடுவார்கள்.


ஸ்தாநீகர், அருளப்பாடு- "திருவரங்க ப்ரம்மராயர்", "திருவரங்க மாயனார்",

திருவரங்கமேயனார்", "திருவரங்கவெள்ளனார்", "திருவரங்க அமுதனார்"

,"மங்களாரத்தி பட்டர்", அருளப்பாடு "திருவரங்கக் கூட்டத்தார்" என்று,

அருளப்பாடு சாதித்தவுடன், அரையர்கள் கீழ்க்கண்ட பாசுரங்களை,

நம்பெருமாளுக்கு முன்பு சேவித்துக் கொண்டு செல்வர்.


"மாலை அசையும் திருவாழும்

மார்பில்,இழையும் புரிநூலும்,

வட்ட மதிபோல் திருமுகமும்,

விட்டகாதும் மலர்க் கண்ணும்!


கோல நகையும்,கனிவாயும்,

கொண்டல் அனைய தனிவடிவும்,கூறை உடையும் எழுதறியகோயில் உடைய பெருமாளே!!


பிறையில் சிறந்த நுதலழகி,

இருகண் புணர்ப்ப, இரவுபகல்

சிறையில் கரையும் உருகும் நிலைகண்டும் இவளை நினையீரோ!!


கூடல் தமிழ்மணம் கொண்டுள தென்றல் கொழுந்துடனே,

ஆடற் சிலை கொண்டு அரங்கன் வரவும், தனி அமரர்

தேடற்கு அறிய பெருமாள் அரங்கர்தன் சேனை என்ன

மாடத் தெருவிற்கு முன்னே புகுந்தது வான் நிலவே!!"


இந்தப் பாடல்கள் ,நாழி கேட்டான் வாசல்- சுவற்றில் திருவேங்கடவர் படம் இருக்கும் இடம்வரை தொடர்ந்து சேவிக்கப்படும்.


பிறகு மீண்டும் துரைப் பிரதட்சிணத்தில், தொடங்கு வதற்கு, ஸ்தாநீகரால் "திருவரங்கக் கூட்டத்தார்" என்று அருளப்பாடு சாதிக்கப்படும்.அந்த பாடல் இவ்வாறாக:


"நாடியே வரும் அடியார் துயிலும் கொள்ளார்,

நச்சரவில் நன்துயிலான் நண்ணிக் கொண்டு,

ஓடியே வரும்பொன்னி நடுவே வாழார்,உடுத்தமுடித் திசையுடனே உலா வரையோ!


தோடுசேர் குழல்மடவார், உலகில் தேவர் தந்தநேர்

நன்மொழிக்கும் அடங்க மாட்டார்,

பாடுவார் இசை அறிவார், அரங்கனாராம்,பாவிப்

பார், அப்படியே பாவிப்பாரே!!


தேன்பொதித் தாமரைத் திருத்தோள் அழகினிலே,

செஞ்சொல்மறை

தான்தமிழ் செய்த சடகோபன் சொல்லில் எந்தன் சொல்மிகவே!!


மான்திகழ் மார்பன், அழகிய மணவாளன் வண்மைகண்டு,

நான்தொழும் நம்பெருமாள் என்பர் இவர்தான்

ஞாலத்துள்ளே!! "


பிறகு வழக்கம் போல் நம்பெருமாள் ,

பரமபத வாசல் கடந்து,கொட்டகை வழியாக, திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளுவார்.இன்று வெளிமணல்வெளிக் கொட்ட கையில் ஸ்ரீரங்கராஜஸ்தவம் சேவிப்பார்கள்.


திருவாய்மொழி

அரையர் சேவை:

இன்று,9-1-1"கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,

கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,

எண்டிசையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,

தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே"


பாசுரத்துடன் தொடங்குவார்கள்.

9 -10-11,"பாடு சாரா வினை பற்ற வேண்டுவீர்" பாசுரத்துடன் பொருத்தமாக,

"பாடி ஆடிப் பணிமின் அவன் தாள்களே" என்று சேவித்து முடிப்பார்கள் (110பாசுரங்கள்).


"மாலைநண்ணித் தொழுதெழு மினோவினைகெட

காலைமலை கமலமலரிட்டுநீர்

வேலைமோதும்மதிள்சூழ் திருக்கண்ணபுரத்து

ஆலின்மேலாலமர்ந்தான் அடியிணைகளே."


பாசுரத்திற்கு, அபிநயமும், வியாக்கியானங்களும் நடைபெறும்.


நாளை இராப்பத்து கடைசிநாள் நம்மாழ்வார் மோட்சத்துக்காக,

இரவு முழுதும் நம்பெருமாள், திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளியிருப்பதால்,

நாளை வீணை ஏகாந்தம் கிடையாது. எனவே இன்று இரவே வீணை இசைக் கலைஞர்களுக்கு கோவில் மரியாதை செய்யப்படும்.


(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

படங்கள்:

1,2,3: மாலை அசையும் திருவாழும்

மார்பில்,இழையும் புரிநூலும்,

வட்ட மதிபோல் திருமுகமும்,

விட்டகாதும் மலர்க் கண்ணும்!!!

4.கொட்டகையில் எழுந்தருளியிருக்கும்

பராங்குச,பரகால,யதிராசர்கள்.

5.அரையர் சேவையில் உகந்த ஆழ்வார்,

எம்பெருமானார்.

6.அரையர் அபிநயம்.

7."அவன் தாள்களைப் பாடி,ஆடி பணியச்" சொன்ன நம்மாழ்வார்


49 views0 comments

תגובות


bottom of page