பெரிய திருநாள் பகல் பத்து உற்சவத்தில் நம்பெருமாளுக்கு சாற்றப்படும் ரத்தின திருவடியானது பெரியாழ்வாரின் பாசுரத்திற்காக வருடத்திற்கு இன்று ஒருநாள் மட்டுமே சாற்றப்படும்.
"திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்து.." . என்று இந்த பாசுரத்தில் தான் பெரியாழ்வார் எம்பெருமானிடம் சரணாகதி செய்வதாக ஐதிஹ்யம். இதனை அரையர்கள் அழகாக அபிநயம் செய்து காட்டுவார்கள்.
இதன் மூலம் சரணாகதி தத்துவத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறார் பெரியாழ்வார்
அரையர் அபிநயம் மற்றும் வியாக்யான விளக்கவுரை:
பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல் * திருப்பொலிந்தசேவடி என் சென்னியின்மேல்பொறித்தாய் * மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்றுஉன்வாசகமே * உருப்பொலிந்த நாவினேனை உனக்குஉரித்தாகினையே.
- ஐந்தாம்பத்து, பெரியாழ்வார் திருமொழி
"சென்னியோங்கு" 7 வது பாசுரத்தில், "திருப்பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய்" என்பது வரை, அரையர் ஸ்வாமிகள் மூன்று முறை சேவித்து, நிறுத்துவார்கள். அபிநயமும் அது வரையே. நம்பெருமாள் திருவடிகள், தம் தலைமேல் ஏந்திய (பொறித்த), பெரியாழ்வார் பெற்ற பேறு அடியார்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு, அரங்கனைப் பிரார்த்தித்து, அரையர் ஸ்வாமிகள், நம்பெருமாளின் ஸ்ரீசடாரி திருவடிகளை அவரது திருமுடியில் தரித்து வந்து, ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தலத்தார் மற்றும் உள்ள பாகவத, பக்தர்கள் கோஷ்டியில் அனைவருக்கும், சாதிப்பார்கள். எப்போதும் நமக்கு சடாரி சாதிக்கும் அர்ச்சகர்களும் இன்று அரையரிடம் சடாரி பெறுவார்கள். இந்தத் திருப்பொலிந்த சேவடியை, இன்று சென்னியில் பொறிப்பது வைணவர்களுக்கு ஒரு அரியதொரு பேறு. இதற்காகவே அவர்கள் இந்த நேரத்தில் மிக அதிக அளவில் வருவார்கள். பக்தர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இதை வாழ்நாளில் ஒருமுறையாவது சேவித்து எம்பெருமானின் திருபொலிந்த சேவடியானது சிரஸில் பெற்றிட பிராத்திக்கிறேன்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Commentaires