இந்த உடல் எப்போது வீழும் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் எம்பெருமானை அடைந்து பக்தி செய்து அவனுக்கு ஆட்படுங்கள் என தொண்டரடிப் பொடியாழ்வார் நமக்கு உபதேசிக்கிறார். அவருடைய திருநக்ஷத்திர வைபவத்தில், ஆழ்வாரின் உபதேசங்களை இங்குப் பார்க்கலாம்.
பிறப்பு:
மார்கழி மாதம் - கேட்டை நக்ஷத்திரம்
அவதார ஸ்தலம் - மண்டங்குடி
பாடிய திவ்யபிரபந்தங்கள் - திருப்பள்ளியெழுச்சி, திருமாலை
இயற்பெயர் - விப்ர நாராயணர்
தொண்டரடிப்பொடி எனும் பெயர் காரணம்:
இவர் பெரிய பெருமாளுக்கு புஷ்ப கைங்கரியம் செய்து தினமும் பூமாலை சூட்டி திருமாலை எனும் திவ்ய பிரபந்தத்தை திருவரங்கனுக்கு மட்டுமே பாடினார். அரங்கனை தவிர வேறு ஏதும் அறியாதவர். எம்பெருமானுக்கு அடிமை எனவும் அவனது அடியாருக்கு அடிமை எனவும் சனாதன தர்ம (வைஷ்ணவ சித்தாந்தம்) மரபு. இவர் அதிலும் ஒருபடி மேல், தன்னை எம்பெருமானின் அடியார்களின் பாதத் தூளி என தன்னை பெருமையுடன் கூறிக் கொண்டுள்ளார். எனவே தொண்டர் அடி பொடி என அழைக்கப்படுகிறார்.
எம்பெருமான் ஆழ்வாரை தன்னுடன் ஆட்படுத்திக் கொண்டது:
இந்த சம்சார பிரக்ருதியானது விப்ர நாராயணனரையும் விடவில்லை. பல காலமாக மாதர் கையற்கண்ணில் ஆழ்ந்து கிடந்தார். மாதர் கண்ணில் அகப்பட்டு இருந்த அவருக்கு திருவரங்கத்தில் பெரிய பெருமாள் தனது கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்ட பெரிய கண்களை காட்டினார்.
லீலைக்கு விஷயமாக்கியவரை பெருமாளும் அவருக்கு மயர்வர மதி நலம் அருளி ஆழ்வாரை தனது கருணைக்கு விஷயமாக்கி உண்மை பொருளை உணரச் செய்தார். ஆழ்வாரின் பக்தியின் வெளிப்பாடாய் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி திவ்யபிரபந்தங்கள் பாடப்பட்டது.
திருமாலை ஒரு முன்னோட்டம்:
திருமாலை 45 பாசுரங்களைக் கொண்ட திவ்ய பிரபந்தமாகும். முன்பு ஐந்து புலன்களும் ஆழ்வாரை சிறை வைத்ததாம். எம்பெருமானின் திருநாம பலத்தால் ஆழ்வார் தனது ஐம்புலன்களையும் அடக்கி விட்டாராம்.
காவலிற் புலனை வைத்துக் கலிதன்னைக் கடக்கப்பாய்ந்து *
நாவலிட்டு உழிதருகின்றோம் நமன்தமர்தலைகள்மீதே *
மூவுல உண்டு உமிழ்ந்த முதல்வ! நின்நாமம் கற்ற *
ஆவலிப்புடைமை கண்டாய் அரங்கமாநகருளானே!
மனிதனின் வாழ்நாள் பொழுது வீணாக கழிகிறதே என வருத்தம் கொள்ளும் ஆழ்வார்,
வேதநூல் பிராயம்நூறு மனிசர்தாம் புகுவரேலும் *
பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு *
பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம் *
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமாநகருளானே!
மனிதரின் வாழ்நாள் நூறு வயது என கூறுகிறது. எப்படியேனும் ஒருவன் 100 வயது வரை வாழ்ந்தாலும் பாதி ஆண்டுகள் (50) தூங்கியே கழிகிறது. மீதம் உள்ள ஐம்பது வருடங்கள் - குழந்தை பருவத்திலும், உலக விஷயங்களால் ஈடுபாடு கொண்டு வாலிப பருவத்திலும், நோய்களால் துன்பப்படும் வயோதிக பருவத்திலும் வீணே கழிந்து விடுகிறது. ஆதலால் பிறவி வேண்டாம் என ஆழ்வார் பிராத்திக்கிறார்.
அரங்கனாருக்கு ஆட் செய்தல்
மறஞ்சுவர் மதிளெடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு *
புறஞ்சுவர் ஓட்டை மாடம் புரளும்போது அறிய மாட்டீர் *
அறஞ்சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆட் செய்யாதே *
புறஞ்சுவர் கோலஞ்செய்து புள்கவ்வக் கிடக்கின்றீரே.
எம்பெருமான் நமக்கு தந்த பிறவியை கொண்டு ஆத்மாவுக்கு உரிய நன்மைகளைத் தேடி கொள்ளாமல் மற்ற உலக விசயங்களை தேடி திரிகிறீர்களே என ஆழ்வார் நம்மை வசை பாடுகிறார். இந்த உடல் ஒரு ஓட்டை மாடம். அதனை அலங்கரித்து கொண்டு இவ்வுலக இன்பத்தை தேடிக் கொண்டு அலைகிறீர்கள். இந்த உடல் எப்போது வீழும் என்று தெரியாமல் இருக்கும் நிலையில் எம்பெருமானை அடைந்து பக்தி செய்து அவனுக்கு ஆட்படுங்கள் என ஆழ்வார் நமக்கு உபதேசிக்கிறார்.
திருப்பள்ளியெழுச்சி சிறப்பு:
அனைத்து திவ்ய தேசங்களிலும் அநத்யயந காலத்தில் (கார்த்திகை மாதம் கார்த்திகை நக்ஷத்திரம் - தை ஹஸ்தம்) நாலாயிர திவ்ய பிரபந்தம் அனுசந்தானம் செய்ய மாட்டார்கள். ஆனால், மார்கழி மாதத்தின் போது திருவரங்கத்தில் விஸ்வரூப சமயத்தில் திருப்பள்ளியெழுச்சி பாசுரங்களை வீணை கானத்துடன் பாடக் கேட்டு அரங்கன் திருக்கண் மலருகிறார். இதுவே மற்ற திவ்ய பிரபந்தங்களை காட்டிலும் திருப்பள்ளியெழுச்சியின் தன்னேற்றம் ஆகும்.
இவ்வாறு திருவரங்கனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆழ்வார் ஸ்ரீரங்கத்தில் நந்தவனம் அமைத்து வாழ்நாள் முழுவதும் புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். இவ்வாழ்வாருக்கு பல்லாண்டு பாடுவோம்.
தொண்டரடிப்பொடியாழ்வார் தனியன்
கோதண்டே ஜ்யேஷ்ட நக்ஷத்ரே மண்டங்குடி புரோத்பவம் |
சோனோர்வ்யாம் வனமாலாம்சம் பக்த பத்ரேணுமாச்ரயே ||
சோழ வளநாட்டில் திரு மண்டங்குடி எனப்படும் ஊரில், மார்கழி மாதம் கேட்டை நக்ஷத்திரத்தில் வைஜெயந்தி என்னும் திருமாலின் வனமாலையின் அம்சமாக, ஒரு முன்குடுமிச் சோழியப் பிராமணரது திருக்குமாரராய் (பிள்ளையாய்) இவ்வாழ்வார் அவதரித்தார். விப்ரநாராயணர் என்று தந்தையால் பெயரிடப்பட்டு அந்தணர் குலத்துக்கேற்ற நான்கு வேதங்களையும் அதன் ஆறு அங்கங்களையும் உரிய காலத்தில் கற்று வைணவ குலத்துக்கே பெருமை சேர்த்தவர்.
இவ்வாழ்வார் திருவவதரித்த நாள் பெருமை
மன்னியசீர் மார்கழியில் கேட்டை இன்று மாநிலத்தீர்
என்னிதனுக்கு ஏற்றம் எனில் உரைக்கேன் - துன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்
நான்மறையோர் கொண்டாடும் நாள்
தொண்டரடிப்பொடி ஆழ்வார் வாழித்திருநாமம்:
மண்டங்குடியதனில் வாழ வந்தோன் வாழியே
மார்கழியில் கேட்டை நாள் வந்துதித்தான் வாழியே
தென்டிரைசூழ் அரங்கரையே தெய்வம் என்றான் வாழியே
திருமாலை ஒன்பதஞ்சும் செப்பினான் வாழியே
பண்டு திருப்பளியெழுச்சி பத்தும் அருளினான் வாழியே
பாவையர்கள் கலவிதன்னைப் பழித்த செல்வன் வாழியே
தொண்டு செய்து துளவத்தால் துலங்கினான் வாழியே
தொண்டரடிப்பொடி ஆழ்வார் துணைப்பதங்கள் வாழியே.
コメント