மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் தினமும் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் ஏழாம் பாசுரத்தை இங்குக் காணலாம்.
இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தின் ஆழ்பொருளை அறிய இங்கு கிளிக் செய்து படியுங்கள்.
கீசுகீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் * கலந்து
பேசினபேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! *
காசும் பிறப்பும் கலகலப்பக்கைபேர்த்து *
வாசநறுங்குழலாய்ச்சியர் * மத்தினால்
ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ? *
நாயகப்பெண்பிள்ளாய்! நாராயணன்மூர்த்தி *
கேசவனைப் பாடவும் நீகேட்டேகிடத்தியோ? *
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்.
விளக்கவுரை:
பேய் பெண்ணே! - மதி கெட்ட பெண்ணே!
பகவானை பற்றி கேட்க கூடிய விஷயம் மிகவும் ரசம் மிக்கது என அறிந்தும் மறந்து கிடக்கிற மதி கெட்ட பெண்ணே
கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
மதி கெட்ட பெண்ணே! பரத்வாஜ பக்ஷிகள் (ஆனைச்சாத்தன்) ஒன்றோடொன்று கீச்சுகீச்சென்று பேசும் ஒலியை கேட்கவில்லையா?
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிரரவம்கேட்டிலையோ?
பரிமளம் மிகுந்த கூந்தலையுடைய ஆயர் பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள அச்சுத்தாலியும் முளை தாலியும் கலகலவென்று ஓசை எழுப்பும்படி கைகளை அசைத்து கொண்டு தயிரைக் கடையும் ஓசை கேட்கவில்லையா?
நாயகப் பெண் பிள்ளாய்!
பெண்களுக்கு எல்லாம் தலைவியாய் இருப்பவளே!
நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
ஸ்ரீமந் நாராயணனின் அவதாரமான கண்ணனை நாங்கள் பாடுவத்தைக் கேட்டுக் கொண்டும் இன்னும் உறங்குவாயோ?
தேசமுடையாய்! திற
மிகுந்த தேஜஸை உடையவளே! கதவை திற
சிறப்பு அர்த்தம்:
இந்த பாசுரத்தில் பேய் பெண்ணே எனும் சொல்லால் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது.
குலசேகர ஆழ்வாரே தனது பெருமாள் திருமொழி திவ்யபிரபந்தத்தில் தன்னை "பேயன்" என்று கூறிக் கொள்வதை நோக்குதல் அவசியம்
பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்-
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே.* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே
ஆழ் பொருளுரை
ஆனைச்சாத்தன் கீசுகீசென்று கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ?
ஆனை - யானை- எம்பெருமான் எனும் யானை
சாத்தன் - நியமிக்கக்கூடியவர்
ஆனைச்சாத்தன் - யானையாகிய எம்பெருமானை நியமிக்கக்கூடிய ஆச்சாரியர்கள்
கீசுகீசென்று கலந்து பேசின பேச்சரவம்
கீசுகீசு - பொருள் இல்லாத வார்த்தை - அர்த்தம் புரியாத வார்த்தை
ஆச்சாரியர்கள் எம்பெருமானின் குணங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறபடியால் கண்ணீர் பெருகி குரல் தழுதழுப்பதால் தெளிவில்லாமல் பேசும் வார்த்தைகள் கேட்கவில்லையா?
2. காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாசநறுங்குழலாய்ச்சியர் மத்தினால் ஓசைபடுத்த தயிரரவம் கேட்டிலையோ?
காசும் பிறப்பும் - இந்த ஆபரணங்களானவை திருமந்திரம், த்வயம், சரம சுலோகம் ஆகும்
இந்த மூன்றினுடைய அர்த்தங்கள் ஒன்று சேர்ந்து கூறும் அர்த்தங்களைப் ஆழப் புரிந்து கொண்டு ஞானம் மேலோங்கி இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள் (அ) பாகவதர்கள் (அ) எம்பெருமான் அடியார்கள்
இவை கூறும் அர்த்தங்களாவன:
வாசநறுங்குழலாய்ச்சியர்
இங்கு வாச நறுங்குழல் என்பது அநந்யார்ஹத்வத்தை குறிக்கிறது
*அநந்யார்ஹத்வம் – முற்றிலும் பகவானைத் தவிர வேறு ஒருவர்க்கும் உரியவனாய் இல்லாதிருத்தல்
அதாவது எம்பெருமான் ஒருவனுக்கே உரியவர்களாக இருப்பது.
இந்த ஆத்ம குணம் பரிபூர்ணமாக நிரம்பிய ஸ்ரீவைஷ்ணவர்கள் கருணையினாலே மக்களுக்கு திவ்ய பிரபந்தங்களை உபதேசிக்கிறார்கள். அந்த ஒலியும் கேட்கவில்லையா?
3. நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
எல்லாருக்கும் ஸ்வாமியான நாராயணனின் அவதாரமான கேசவனை பற்றி பாடியும் கேட்டுக் கொண்டு உறங்குகிறையே? இவ்வாறு திவ்ய பிரபந்தங்களை உபதேசிக்கும் தலைவியான நீயே எழுந்திராமல் இருக்கலாமா?
4. தேசமுடையாய்! திற
பகவானின் குண அனுபவங்களை பண்ணிக் கொண்டு இருப்பதால் ஏற்பட்ட மிகுந்த தேஜஸ் உடையவளே! நாங்களும் எம்பெருமானை அனுபவிப்பதற்கு ஏற்றபடி எங்களது அறிவின்மையை நீக்குவாயாக
செவிக்கினிமையான ஓசைகள்:
ஆனைச்சாத்தன் குருவி
காசும் பிறப்பும் எனும் ஆபரணங்களின் கலகலப்பு ஒலி
ஆய்ச்சியர் தயிர் கடையும் ஒலி
எம்பெருமானின் திருநாம சங்கீர்த்தனம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Σχόλια