top of page

Pullum Silambina kaan: திருப்பாவை ஆறாம் பாசுரம் - வியக்க வைக்கும் உட்பொருள்

Updated: Dec 21, 2021

மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் ஆறாம் பாசுரத்தை இங்குக் காணலாம்.


இதற்கு முந்தைய ஐந்தாம் பாசுரத்தின் ஆழ்பொருளை அறிய இங்கு கிளிக் செய்து படியுங்கள்.


புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயில் *

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? *

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு *

கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி *

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை *

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் *

மெள்ள வெழுந்து அரியென்ற பேரரவம் *

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்


விளக்கவுரை:


புள்ளும் சிலம்பினகாண்

பறவைகள் இரை தேடுவதற்காக எழுந்து ஆராவரங்கள் செய்கின்றன


புள்ளரையன் கோயில்

புள் - அரையன் - கோ- இலில்

பறவைகளுக்கு அரசன் கருடாழ்வான், அவருக்கு ஸ்வாமி - எம்பெருமான்

அவனது சன்னதியில்


வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

வெண்மை நிறமுடைய, எல்லாரையும் அழைக்கும் சங்கினுடைய பெரிய ஒலியை கேட்கவில்லையா?


பிள்ளாய்! எழுந்திராய் - குழந்தாய் எழுந்திரு

எம்பெருமானைப் பற்றி இப்பொழுது தான் புதிதாய் அறியக்கூடிய பெண்ணை சீக்கிரமாக எழுந்திரு என இப் பாசுரத்தில் எழுப்புகிறாள்.


பேய்முலை நஞ்சுண்டு கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி

பூதனையின் உயிரைக் குடித்தவனை, வண்டி சக்கரத்தின் வடிவில் வந்த அரக்கனை காலால் உதைத்தவனை


வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது யோக நித்திரை செய்யும் இவ்வுலகிற்கு காரண கர்த்தாவான எம்பெருமானை

வித்து - விதை (காரணம்)


உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

அந்த எம்பெருமானை உள்ளத்தில் கொண்டிருக்கும் மநநசீலரான ரிஷிகளும் யோகப்பயிற்சியில் ஊன்றினவர்களும் (இதனுடைய ஆழ்பொருளை கீழே காணலாம்)


மெள்ள வெழுந்து

உள்ளத்தில் அந்த எம்பெருமானை வைத்திருப்பதால் மெதுவாக எழுந்து

அழகான உதாரணம்: கர்ப்பிணி பெண்கள் சிசுவுக்கு ஒன்றும் நேராமல் எழுந்திருப்பது போலே.


அரியென்ற பேரரவம்

முனிவர்களும் யோகிகளும் தூங்கி எழுந்தவுடன் ஹரி ஹரி ஹரி என கூறும் பேரொலி


உள்ளம் புகுந்து குளிர்ந்து

இந்த ஒலியானது உள்ளம் புகுந்து குளிர்விக்கிறது.


ஆழ் பொருளுரை

  • இந்த பாசுரம் தொடங்கி "எல்லே இளங்கிளியே" எனும் 15 ஆம் பாசுரம் வரை (10 பாசுரங்கள்) ஆண்டாள் தன்னை போலே பகவத் அனுபவம் பண்ணுகிறவர்களை எழுப்புகிறாள். 10 பாசுரங்களால் பத்து ஆழ்வார்களை துயில் எழுப்புவது என நம் பூர்வர்கள் கூறும் உள்ளர்த்தம்.

  • எம்பெருமானை புதிதாக அறிய வந்த ஒருவனுக்கு ஆச்சாரியர்கள் கிருபையுடன் உபதேசம் செய்வதாக அமைந்த்துள்ளது இந்த பாசுரம்.

ஆண்டாள் பத்து பேரை எழுப்பக் காரணம்:

  1. எம்பெருமானை குண அனுபவம் செய்யும் போதோ கைங்கரியம் செய்யும் போதோ தனியே இருந்து செய்யக் கூடாது. அடியவர்களுடன் சேர்ந்து தான் அனுபவிக்க வேண்டும். ஏனெனில் பகவானின் குணங்கள் காட்டாற்று வெள்ளம் போலே, தனியே போனால் நம்மால் சமாளிக்க இயலாது.

  2. மேலும், நாம் பகவானின் அடியார்களோடு அவனிடம் சென்றால் நம் பாவங்கள் பெருமான் கண்ணில் படாது.

புள்ளரையன்

  1. பறவைகளின் தலைவன் கருடன் - அந்த கருடனின் அம்சமாகவே அவதரித்தவர் பெரியாழ்வார்

  2. ஆண்டாளின் தந்தையாகவும் குருவாகவும் இருந்தவர் பெரியாழ்வார்

எனவே பெரியாழ்வாரையே முதலில் எழுப்புகிறாள் ஆண்டாள்.


முனிவர்களும் யோகிகளும்

  • முனிவர்கள் - எம்பெருமானின் குணங்களை அனுபவிப்பவர்கள்

  • யோகிகள் - பகவானுக்கு கைங்கரியம் செய்பவர்கள்

நம் பூர்வாச்சாரியர்கள் கூறும் தத்வார்த்தம்

இதன் மூலம் நாம் அறிய பெறுவது:

எம்பெருமானின் பக்தர்கள் மற்றும் ஆச்சாரியார்களை அடைந்து அவர்களிடம் ஜ்ஞானத்தையும் அதனை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளையும் அறிந்து கொண்டு, எம்பெருமானின் துணைக் கொண்டு மேற்சொன்னவையை கைவிட்டு, வைராக்கியத்துடன் அவனது திருவடியை பற்றி கைங்கரியம் செய்வதே நமது இலக்காக இருக்க வேண்டும்.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

672 views0 comments

Comments


bottom of page