top of page

Azhi Mazhai Kannā: திருப்பாவை நான்காம் பாசுரம் - வியக்க வைக்கும் உட்பொருள்

Updated: Dec 19, 2021

மார்கழியில் திருப்பாவையின் கொண்டாடம் (Margazhi Thiruppavai) என்ற தலைப்பில் திருப்பாவையின் ஒவ்வொரு பாசுரங்களையும் அதன் மூலமும் விளக்கத்தையும் வழங்குகிறோம். அந்த வகையில், திருப்பாவையின் நான்காம் பாசுரத்தை இங்குக் காணலாம்.




ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் * ஆழியுள்புக்கு முகந்து கொடார்த்தேறி * ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்து * பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில் * ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து * தாழாதே சார்ங்கமுதைத்த சரமழைபோல் * வாழவுலகினில் பெய்திடாய் * நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


இதற்கு முந்தைய மூன்றாம் பாசுரத்தின் ஆழ்பொருளை அறிய இங்கு கிளிக் செய்து படியுங்கள்.


விளக்கவுரை:


ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

கடல் போல கம்பீரமான குணத்தையுடைய மழைக்கு தலைவனான வருண தேவனே! நீ சிறிதும் ஒளித்துவைத்துக் கொள்ளாமல் (மிச்சமில்லாமல்)


ஆழியுள்புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி

மேலாக இல்லாமல், சமுத்திரத்தினுள் உள்ளே ஆழமாக புகுந்து, அங்குள்ள நீரை எடுத்துக் கொண்டு வந்து, இடி இடித்துக் கொண்டு (ஆர்த்து), மேலே ஆகாசத்தில் ஏறி


ஊழி முதல்வன் - காலத்திற்கும் தலைவனான எம்பெருமான்


உருவம் போல் மெய்கறுத்து - அந்த எம்பெருமானின் உருவம் போல் உனது (மழைக்கு தலைவனான வருணன்) உடம்பும் கறுமை பெற்று,


பாழி அம்தோள் உடைப் பற்பநாபன் கையில்

வலிமையும் அழகும் பொருந்திய தோள்களை உடையவனும், நாபீகமலமும் உடைய எம்பெருமான் கையில்


ஆழி போல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

பெருமாளின் வலது கையில் உள்ள திருவாழி யாழ்வானை (சக்கரம்) போல் ஒளி மின்னி, (இடப்பக்கத்திலுள்ள) பாஞ்சஜந்யாழ்வானைப் (சங்கு) போல் நிலை நின்று முழங்கி,


தாழாதே - கால தாமதம் செய்யாத


சார்ங்கம் உதைத்த சரமழை போல் - வில்லில் இருந்து விடப்பட்ட அம்பு மழைப் போல்


வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்து

உலகில் உள்ள அனைவருக்கும், நோன்பு நோற்கும் நாங்களும் மகிழும் வகையில் மார்கழி நீராட்டம் செய்வதற்கும், காலம் தாழ்த்திடாமல் (தாழாதே) சீக்கிரம் மழை பெய்வாயாக.


ஆழ் பொருளுரை


  • இந்தப் பாசுரத்தினால் அந்தர்யாமித்துவம் காட்டப்பட்டது. எம்பெருமான் இவ்வுலகை படைப்பதோடு மட்டுமில்லாமல் அனைத்து ஜீவராசிக்களின் உள்ளத்தின் உள்ளும் இருக்கிறான்.

  • எம்பெருமானின் வாக்குகளே தர்ம, சாஸ்திரங்களாகக் கருதப்படுகிறது.

  • அதில் சொல்லக்கூடிய, நித்யமும் (தினமும்) செய்ய வேண்டிய மற்றும் விசேஷ நாட்களில் செய்ய வேண்டிய காரியங்களை நம் பூர்வாச்சாரியர்கள் கடைபிடித்தபடி நாமும் பின்பற்ற வேண்டும். அவ்வாறு செய்யாதவன் எனது பக்தன் அல்லன், வைஷ்ணவன் இல்லை என எம்பெருமான தானே கூறியுள்ளான். இவ்வாறு நித்ய, நைமித்திக்க (விசேஷ நாட்களில்) அனுஷ்டானங்களைச் செய்வதால் பகவானுக்கும், அவனது அடியார்களுக்கும் சந்தோசமும் பிரீத்தியும் ஏற்படும்.


விசேஷமான அர்த்தம்

அர்த்தம் - 1

கோபிமார்கள் - பாகவதர்கள் (பகவானின் அடியார்கள்).

வருணன் எம்பெருமானது ஆணையிட்ட படி அவனது செயலை சரி வர செய்தான். அதைப் போல் பக்தர்களான கோபிமார்கள் நியமித்த படி மழை பெய்தது. இதனால் பகவானுக்கும், அவனது அடியார்களான கோபிமார்களுக்கும் அவனது செயல் சந்தோசத்தை உண்டாக்கியது.

கோபிமார் நியமித்த விதிகள்:

  • சமுத்திரத்தினுள் உள்ளே ஆழமாக புகுதல்

  • அங்குள்ள நீரை எடுத்துக் கொண்டு வருதல்

  • இடி இடித்துக் கொண்டு ஆகாசத்தின் மேலே ஏறுதல்

  • மேகம் கருமையாகுதல் (எம்பெருமானை போலே)

மேற்சொன்னவாறு செய்தபடியால் கோபிமாருக்கு வருணன் மிக இஷ்டம் உடையதாகி விட்டது.


அர்த்தம் - 2

ஆழி மழைக் கண்ணா

மழை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் பெய்வது போலே, ஆச்சாரியர்களும் ஞான அர்த்தங்களை பராபட்சமின்றி வழங்குவார்கள். மேலும் கடல் நீரை மேகம் பருகி பரிசுத்தமான மழை நீராக நமக்கு பொழிகிறது. அதே போலே


ஆழியுள்புக்கு

வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தம் ஆகிய பெருங்கடலில் ஆழ்ந்து


முகந்து கொடு

அவற்றின் தேர்ந்த பொருளையும், அர்த்தங்களையும் உணர்ந்து


ஆர்த்தேறி

கம்பீரமாக (உறுதியுடன்) எழுந்து பெருமானின் பகவத் குணங்களை எண்ணிக் கொண்டே இருப்பதால்


ஊழி முதல்வனுருவம் போல் மெய் கருத்து

பரமனை சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தியதால், ஆச்சார்யர்களும் பரமன் போலவே கருநிறமும் தயாள குணமும் பெற்றவராகி விடுகின்றனர்.


  • மேகம் - ஆசாரியர்கள்

  • கடல் - வேதம், உபநிஷத்

  • மழை நீர் - எம்பெருமான்

மேலும் கடல் நீரை மேகம் பருகி பரிசுத்தமான மழை நீராக நமக்கு பொழிகிறது.

இவ்வாறு தேர்ந்த ஞானத்தைக் தரவல்ல ஆச்சாரியர்களின் திருவடியை சரண் புகுவோம்.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!






2,298 views0 comments

Comments


bottom of page