top of page

Vaikunta Ekadasi 2021: பகல்பத்து 10 ஆம் திருநாள்! நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் !!

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல்பத்தின் 10 ஆம் திருநாளில், நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.



இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் ஆண்டாள் கொண்டை, பெரிய நெற்றிச் சுற்றி, கையில் தங்கக்கிளி, நீண்ட ஜடை, ஜடை பில்லைகள், கைகள் நிறைய அலங்கார வளையல்கள், மோதிரங்கள் அணிந்து வெண்பட்டுச் சேலையில், குத்திட்டு அமர்ந்த நிலையில் எழுந்தருளியுள்ளார்.


முன்னிலும் பின்னழகிய பெருமாள்


(ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் நாச்சியார் திருக்கோலம் என்றே சொல்வார்கள். மோகினி அலங்காரம் என்று சொல்வதில்லை.)


நம்பெருமாள் - நாச்சியார் திருக்கோலம் குறித்த சுவாரஸ்யமான அனுபவம்:


அனுபவம் - 1

ஆண்டாள் நாச்சியார்,

"உக்கமும் (விசிறி), தட்டொளியும் (கண்ணாடி) தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு" - திருப்பாவை 20

என்று பாடியதைக் கேட்ட நப்பின்னை தட்டொளியில் பார்த்த கண்ணனுக்கு இன்னும் அழகு சேர்க்க, அவன் ஆண் பிள்ளை என்பதையும் மறந்து தனது ஆடை, ஆபரணங்கள் எல்லாவற்றையும் அணிவித்து அனுப்பி விட்டாளோ!? என்றவாறு இருக்கும் நம்பெருமாளின் நாச்சியார் திருக்கோலம்


அனுபவம் - 2


சுவாமி இராமானுஜரின் பிரதான சீடர் - கூரத்தாழ்வான். அவரது திருமகனார் பராசர பட்டர். பெரிய பெருமாள் மற்றும் பெரிய பிராட்டியாரின் வளர்ப்பு மகனும் கூட. அவருக்கு பெரிய பெருமாளை காட்டிலும் பெரிய பிராட்டியாரிடமே அலாதியான அன்பு. பட்டரை பெருமாள் பக்கம் திருப்புவதற்காக அவர் செய்யும் லீலை.


ஒருமுறை நம்பெருமாளின் பகல்பத்து 10ஆம் திருநாள் உற்சவத்தின் போது, நம்பெருமாள் ஸ்ரீரங்க நாச்சியாரின் திருவாபரணங்களை அணிந்து நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். தம்மை காண வரும்படி, பராசர பட்டருக்கு அழைப்பு விடுத்தார்.


பட்டரும் எழுந்தருள, நம்பெருமாள் பட்டரைப் பார்த்து,

"பட்டரே! நம் அலங்காரம் எப்படி? பெரிய பிராட்டியாரை மிஞ்சம் அளவுக்கு இருக்கிறதா?" என்றார். பட்டர் பெருமாளைச் சுற்றி, சுற்றி வந்து அலங்காரங்களை, உற்று நோக்கி வந்து, பெருமாளிடம் கீழ் கூறியவாறு விண்ணப்பித்தார்.


"தேவரீர் அடியேனை ஷமிக்க வேணும். மிக அழகான, அற்புதமான அலங்காரம். ஆனால் எம் தாயாருக்கு மட்டற்ற அழகு சேர்க்கும் அந்த ஒரு அணிகலன் மட்டும் உம்மிடம் இல்லையே! அது என்னவெனில்,

"நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாது".

அதன் விளக்கம்

தாயாரின் கருணை ததும்பும் கடாக்ஷப் பார்வையானது தேவரீர் திருக் கண்களில் காணவில்லையே! எனவே எம் தாயாரின் அழகுக்கு ஈடாக மாட்டீர்கள்!" என்றாராம். பெருமாளும் இதைக்கேட்டு மிக உகந்தாராம்.


இன்றும் இரண்டு அரையர் சேவை நடைபெறும்.


முதல் அரையர் சேவை

இன்றைய பாசுரங்கள்:

  • பெரிய திருமொழி - 174 பாசுரங்கள்

  • திருக்குறுந்தாண்டகம் - 20 பாசுரங்கள்

  • திருநெடுந்தாண்டகம் - 30 பாசுரங்கள்

இந்தப் பாசுரங்கள் அனைத்தும் அரையர் சுவாமிகளால் தாளத்துடன் சேவிக்கப்படும்

இன்றைய அரையர் அபிநயம் & வியாக்கியானம்:

பெரிய திருமொழியில் "இரக்கமின்றி” பாசுரம்


இரக்கமின்றி எங்கோன் செய்த தீமை இம்மையே எமக்கெய்திற்றுக் காணீர் * பரக்கயாமின்றுரைத்து என்? இரவணன் பட்டனன் இனியவர்க்கு உரைக்கோம் * குரக்கு நாயகர்காள்! இளங்கோவே! கோலவல்விலி ராமபிரானே! *

இரண்டாம் அரையர் சேவை


இராவண வத நாடகம்

இரண்டாம் அரையர் சேவையின் போது "ராவண வதம்" நாடகமாக நடத்திக் காட்டப்படும். அரையர் ஸ்வாமிகளுக்கு அருளப்பாடு சாதித்து, அவர்களுக்கு மாலை, மரியாதை நடைபெறும். தம்பிரான்படி வியாக்கியானங்கள் சேவித்து,

ராமாவதாரத்தில் இருந்து, ராவண வதம் முடிய , அரையர் ஸ்வாமிகளால் நடித்துக் காட்டப்படும்.


அரையர்கள் கொண்டாட்டம்:

இன்று பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் சேவை சாதிப்பதால் அரையர்கள் கொண்டாட்டம் அனைத்தும் நாச்சியார் என்றே இருக்கும்.

நம்பெருமாளுக்கு,

"மாலாய் வந்தரங்கர் மணம் புணரும் நாச்சியார்" என்னும் இது போன்ற கொண்டாட்டங்களை படியேற்றத்தின் போது சேவிப்பார்கள்.


திருமங்கை ஆழ்வாருக்கு சாற்றுமறை:

பெரிய திருமொழியில், "குன்றமெடுத்து பாசுரமும், திருக்குறுந்தாண்டகத்தில்" "வானவர் தங்கள் கோனும்" என்ற பாசுரமும், திருநெடுந்தாண்டகத்தின், "மின்னும் மாமழை தவழும் மேகவண்ணா" என்ற கடைசிப் பாட்டும், சேவித்து திருமங்கை ஆழ்வாருக்கு சாற்றுமறை செய்வார்கள்.


இன்று திருமங்கை ஆழ்வார் வாழித் திருநாமத் தோடு, மங்களமும் பாடப்படும். பெரிய திருமொழியின் சாற்றுமறைக்காக, இன்றும், அரையர் ஸ்வாமிகள் தீர்த்தமும் ஸ்ரீசடாரியும் சாதிப்பார்.


ஆழ்வார், ஆசார்யர்களுக்கு நாச்சியார் மரியாதை:

இன்று மாலை ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் கருட மண்டபத்தின் கீழ்புறத்தில், வரிசையாக எழுந்தருளி இருப்பார்கள்.


பிறகு, நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் கிளிமாலை, சாற்றிக்கொண்டு, கருட மண்டபத்தில் எழுந்தருளிய பிறகு, ஆழ்வார்களுக்கும் ஆச்சார்யர்களுக்கும் அருளப்பாடு சாதிக்கப்படும்.



கிளி மாலையில் நம்பெருமாள்

இந்த பகல் பத்து உற்சவம் முழுவதும் கடந்த 9 நாட்களாக, நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து, மாலை 7 மணிக்குப் புறப்பட்டு உள் சுற்றாக ராஜமகேந்திரன் திருச்சுற்றுக்குள்ளேயே பக்தி உலாத்தல் கண்டு ஆஸ்தானம் சேர்வார். ஆனால், இன்று நாச்சியார் திருக்கோலம் என்பதால் , மாலை (பெரிய) கருடமண்டபம் வரை வந்து, ஆலிநாடன் திருச்சுற்றினைச் சுற்றி சேவை சாதிப்பார்.


அப்போது, கோயிலின் கணக்குப் பிள்ளை, "ஸர்வாங்க மோஹனக் கைலி ஒன்று" என்று நாச்சியார் கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கும் நம்பெருமாளின் முன்பு கணக்குப் படிப்பார். பிறகு ஆழ்வார்கள்,

ஆசார்யர்களுக்கு ,ஒரு"உத்தரீயம்"(வஸ்த்ரம்) போர்த்தப்பட்டு,சந்தனமும்,

ஸ்ரீ சடகோபமும் (ஸ்ரீசடாரி) சாதிக்கப்படும்.


இன்று "பெரிய திருமொழி" சாற்றுமறைக்காக, ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யார்கள் அனைவருக்கும் "பஹுமாணம்" செய்யப்படும். அரையர்களுக்கும் அருளப்பாடு சாதித்து, தீர்த்தம் சந்தனக் கரைசல், தொங்கல், பரியட்டம், சாதரா(வஸ்த்ரம்), ஸ்ரீசடாரி சாதிக்கப்படும். பிறகு "சுக்ரவார" பண்டாரிக்கு சேவையான பிறகு அரையர் ஸ்வாமிகள் இசையுடன், நம்பெருமாள் உள்ளே மூலஸ்தானத்தில் எழுந்தருள தயாராவார்.


ஆர்யபடாள் வாசல் தாண்டியதும், கதவுகள் சாற்றப்படும். வழக்கம் போல் மேலப்படியில், படியேற்றம் மற்றும் திருவந்திக்காப்பு கண்டருளி, நம்பெருமாள் கர்பக்ருஹத்திற்கு எழுந்தருளுவார்.


இந்த நாச்சியார் திருக்கோலம், ஆழ்வார், ஆசார்யர்கள்

முப்பத்து முக்கோடி தேவர்கள், அடியார்கள், அண்டசராசரங்களில் வாழ்கின்ற அனைவரின் மனதினையும் கொள்ளை கொள்ளும்!!


வைகுண்ட ஏகாதசியின் போது நிகழும் வைபங்களை நிச்சயம் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்து நேரில் தரிசிக்க வேணும். நிச்சயம் ஒவ்வொரு நிகழ்வுக்கு பின்னும் ஓரொரு வைபவங்கள் உண்டு. இங்கு நீங்கள் படித்தவை அனைத்தும் நேரில் சேவிக்கும் போது மனதில் ஆனந்தமும் ஆத்ம திருப்தியும் கிட்டும்.


இத்தோடு பகல்பத்து பத்து நாள் உற்சவம் இனிதே நிறைவுற்றது.


நாளை முதல் திருவாய்மொழி திருநாள் எனப்படும் இராப்பத்து உற்சவம் ஆரம்பமாகவுள்ளது.


திருவாய்மொழி திருநாள் பற்றிய விவரங்களை நாளைக் காணாலாம்


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!



164 views0 comments
bottom of page