top of page

இராப்பத்து 8 ஆம் நாள்! வானைப் பிளக்கும் கோஷம்!!

இன்று திருமங்கை ஆழ்வார் வேடுபறி (வேடர்பறி!) பெரிய கோவில் ஆலிநாடன் திருவீதி (ஆலிநாடனான திருமங்கை ஆழ்வார் அமைத்தது),உள் மணல்வெளியில் நடைபெறும்.


நம்பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு!

நம்பெருமாள் இன்று சந்தனு மண்டபத்தில், தங்கக்குதிரை வாகனத்தில், வலது திருக்கரத்தில் வாள்,கேடயம், அம்பு ஏந்திக்கொண்டு, இடது திருக்கரத்தில் குதிரையைக் கட்டிய கயிறைப் பிடித்தபடி,முத்துப் பாண்டியன் கொண்டை சூடி, கிழக்கு முகமாக,எழுந்தருளியிருப்பார்.

முறைக்கார பட்டர் எழுந்தருளி, "திருவரங்க வேதபாராயணத் தளிகை" அமுது செய்த பிறகு, திரை நீக்கப்படும்.


மற்ற நாட்களில், பரமபத வாசலின் முன்பு ,நடைபெறுகின்ற "வேதபாராயணம்" இன்று சந்தனு மண்டபத்திலேயே நடைபெறும்.

இன்று நம்பெருமாள் குதிரை வாகனத்தில்,புறப்படுவதால் 8ஆம் திருநாள், மட்டும், வழக்கம் போல் பரமபத வாசல் வழியாக செல்லாமல், 'ஆரிய பட்டாள்' வாசல் வழியே புறப்பட்டு (மாலை 5.மணிக்கு), மணல்வெளியை அடைவார்.

"கோண வையாளி"

அங்கே 'கோண வையாளி' என்னும் குதிரை ஓட்டம் செய்வார்.

தெற்கு,வடக்காக நூறு மீட்டர் தூரம், மூன்று முறை வேகமாக ஓடுவார்.பின்னர் ஒரு வட்டமாக 20/30 மீட்டர் தூரம் மூன்று முறை வேகமாகச் சுற்றி வருவார்.


இந்தக் கோண வையாளி சமயத்தில் நம்பெருமாளின் நிரந்தர ஸ்ரீபாதம் தாங்கிகள் தாங்காமல்,ஸ்ரீரங்கத்து ஸ்ரீவைஷ்ணவ இளைஞர்கள் கூட்டமாக வந்து மிகுந்த குதூகலத்துடன் தாங்கிக் கொண்டு ஓடுவார்கள்.இந்த வையாளியைக் காண்பதற்கு, மணல்வெளியின் நாற்புறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.


"ரங்கா,ரங்கா" கோஷம் வானைப் பிளக்கும். குதிரைக்கு (வாகனத்துக்கு) ' கடலைச்சுண்டலும்,நம்பெருமாளுக்குப்

பானகமும்,"விடாய்பருப்பும்"(ஊறவைத்த பாசிப்பருப்பு) நிவேதனம் செய்யப்படும். பெரிய கோவில் மிராசுக் காரர்கள் ( பரம்பரை பரம்பரையாக காவல் காப்பவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது அறநிலையத் துறையினர்(!)) நம்பெருமாளை வலம் வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா, என்று பார்த்துச் செல்வார்கள்.

வேடுபறி

திருமங்கை மன்னர் 'நீலன்' (ஆழ்வார்) ராஜ அலங்காரத்தில் கம்பீரமாக வருவார்.வலது கண்ணோரத்தின் கீழ் வைத்த பிடியும், தாழ்ந்த தோளும்,மடித்த இடக்காலும்,மண்டிபோட்ட வலக்காலும்,சக்கரமாய் வளைத்த வில்லுடன் வந்து, நம்பெருமாளும், கைங்கர்யபரர்களும் விழித்துக் கொண்டு

இருக்கிறார்களா? தூங்குகிறார்களா? என்று துப்பறிந்து போவார். அவருடைய பரிஜனங்களாக,திருமங்கையார் அவதரித்த கள்ளர்குலத்தினர் பலரும், சந்திரபுஷ்கரணி பக்கமிருந்து, கத்தி,வேல், நீண்ட தடிகள், தீப்பந்தங்கள் ஆகியவற்றைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து நம்பெருமாளைப் சுற்றி, சுற்றி வந்து செல்வார்கள்.


துப்பறிந்த கலியன் தம் பரிஜனங்க ளோடு வந்து, நம்பெருமாளுடைய திவ்ய ஆபரணங்களையும்/ பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடுவார்.


நம்பெருமாளின் காவலர்களும் ஓடிப்போய், அவர்களைப் பிடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள்.


பறித்த ஆபரணங்கள்/பொருட்கள்

என்னென்ன கொள்ளை போனது என்பதைப் பரிசோதிக்க, நம்பெருமாளின் முழு ஆபரணப்பட்டியலையும் கோவில் கணக்குப்பிள்ளை வாசிப்பார்! பரிசோதித்த பின் கொள்ளைபோன பொருட்கள் பட்டியலை வாசிப்பார்.

வருஷம், மாதம், நாள், கிழமை, திதி,நட்சத்திரம் முதலிய விவரங்களைச் சொல்லி,"நம்பெருமாள் திருவாய்மொழித் திருநாளில், குதிரைத் தம்பிரானில் (வாகனத்தில்) எழுந்தருளி, ஆலிநாடன் திருச்சுற்றில், மாறன் பாட்டு கேளா நிற்கையில், நம் கலியனான, திருமங்கையாழ்வார், வழிநடையாக வந்து, பறித்துக்கொண்டு போன, ஸ்ரீ பண்டார உடைமைகளின் விபவம்(விவரம்):"

1.ஸ்ரீ ரங்கநாராயண ஜீயர் காணிக்கை-

அஞ்சனக்காப்பு,தங்கச்சிமிழ் 1

2.வேதவ்யாச பட்டர் காணிக்கை-தங்கப்பதக்கம் 1,

3.பராசர பட்டர் பதக்கம் 1,

4.வாதூல தேசிகர் தாழி பதக்கம் 1,

5.உத்தம நம்பி காணிக்கை-ரத்ன தாழி பதக்கம் 1,

6.கந்தாடை ராமானுஜன் காணிக்கை- தங்க உத்தரிணி 1,

7.கம்பமய மஹாதேவ ராயர் காணிக்கை வெள்ளிக் கொப்பரை 1,

8.விஜய ரங்க சொக்கநாதர் காணிக்கை-திருப்படிகம் 1


என்று கொள்ளை போன பொருட்களைச் சொல்வார்.

பிறகு நம்பெருமாளின் காவலர்கள், திருடர்கள் போன பாதையிலேயே,

திருடர்களின் காலடிகளை பார்த்துப் போய்,'வழியில் அகப்பட்ட வெள்ளித் தடியை'ப்பார்த்து,"வெள்ளித்தடி மச்சம்"கிடைத்து விட்டது என்று சொல்லிக் கொண்டு வருவார்கள். அதை ஸ்தாநீகர் வாங்கி,உயரப் பிடித்து, நம்பெருமாளிடம் காட்டுவார். கலியன், 'ஆழ்வார்' ஆனார்!!

இதற்குள் திருமங்கையாழ்வார் காவல்காரர், கையிலகப்பட்டு விடுவார்.அவரைப் பிடித்துக் கொண்டுவரும்போது,முதலில் வந்த மிடுக்குக்கு, நேர் எதிராக,மிகுந்த பணிவுடன் அஞ்சலிஹஸ்தராய் (கைகூப்பிக்கொண்டு),ஆரவாரம் இல்லாமல் அமைதியாக நம்பெருமாளிடம் வருவார்.


அரையரும்,தாளத்தோடு திருமங்கையாழ்வாருடன் வருவார்.நம்பெருமாள்(ஸ்தானிகர்) "அருளப்பாடு கலியன்" என்று,தம்முடைய கோரா,குல்லா முதலியவற்றை, ஆழ்வாருக்கு சாதிப்பார்.


"திருமொழி விண்ணப்பம் செய்வார்" என்று அரையருக்கு அருளப்பாடு ஆகும். அரையர் "வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்" (பெரிய திருமொழி முதல் பாசுரம்) சேவிப்பார். ஆழ்வாரைத் தொடர்ந்து முதலில் ஆட்டம் போட்டுக் கொண்டு வந்த கள்ளர் பரிஜனங்கள் அனைவரும் வந்து நம்பெருமாளைச் சேவித்து பழம்/புஷ்பம் முதலியன சமர்ப்பிப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் பெருமாளின் சடாரி மரியாதை ஆகும்.

திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாள்:

பிறகு,நம்பெருமாள் புறப்பட்டு, அரையர்களுக்கு அருளப்பாடு சாதித்து, ஆயிரங்கால் மண்டபத்தில்,ஆழ்வார் ஆசார்யர்களுக்காக, குதிரை வாகனத்துடனேயே, ஒய்யார நடையில் போய், "திருவந்திக் காப்பு" கண்டருளி, "திருமாமணி" மண்டபத்திற்கு எழுந்தருள்வார்.


பிறகு ஆழ்வார் ஆசார்யர் களுக்கு,அருளப்பாடு இல்லாமல் ,

பரியட்டம்,மாலை முதலியன சாதிக்கப்படும்.

அரையர்சேவை:

இன்று 8 ஆம் பத்து,110 பாசுரங்களை சேவிப்பார்கள்.

8-10-1"நெடுமாற்கடிமை" பாசுரத்திற்கு, அபிநயம்/வியாக்கியானம் சேவிக்கப்படும்.


இரவு புறப்பாட்டில், வீணை ஏகாந்தம்:


இரவு 10 மணிக்கு நம்பெருமாள் திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு, நாழிகேட்டான் வாசலில் எழுந்தருளியவுடன், வீணை ஏகாந்தம் கண்டருள்வார்.


இன்று "வாடினேன்,வாடி,வருந்தினேன் மனத்தால்"பாசுரத்தைத் திருமங்கை ஆழ்வார் எத்தனை உருக்கமாகப் பாடியிருப்பாரோ,

அத்தனை உருக்கத்தையும் வீணையில் இசைத்து நெக்குருக வைத்து விடுவார்கள். திருமங்கை ஆழ்வாரின் வேறு சில பாசுரங்களையும் சேவிப்பார்கள்.


100 views0 comments

Comments


bottom of page