பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாத ஸ்வாமி கோயிலில், பெரியபெருமாளுக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு நடக்கும் ஆனிமாத பெரிய திருமஞ்சனம், என்பது ஆண்டுக்கொருமுறை நடக்கும் திருமஞ்சனம் ஆகும்.
ஸ்ரீரங்கம் கோவில் உற்சவர் நம்பெருமாளுக்கு ஆண்டுதோறும் ஆணி மாதம், கேட்டை நக்க்ஷத்திர நாளில் மிக விசேஷமான அபிஷேகம் நடைபெறும். இதை பெரிய திருமஞ்சனம், ஜ்யேஷ்டாபிஷேகம் என்று கூறுவர்.
பச்சைமாமலைபோல்மேனி பவளவாய்கமலச்செங்கண் அச்சுதா! அமரரேறே! ஆயர்தம்கொழுந்தே! என்னும்* இச்சுவைதவிரயான்போய் இந்திரலோகமாளும்* அச்சுவைபெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே!
ஸ்ரீரங்கத்தில் மூலவர் ரெங்கநாதர், கல்லினாலோ, மரத்தினாலோ செய்யப்பட்ட சிலை அல்ல. அது முழுக்க முழுக்க சுதையினால் அதாவது சாளக்ராமங்கள் மற்றும் சுண்ணாம்பு, இன்னும் பிற படிமங்களை கொண்ட கலவைகளால் ஆன திருமேனி, இதனால் மூலவருக்கு திருமஞ்சனம் செய்யும் வழக்கம் இல்லை. திருமேனி மீது வஸ்திரம், திருவாபரணங்கள் தவிர மற்றவை சாதப்படுவதில்லை.
ஆண்டுக்கொரு முறை, அகில் , சந்தனம், சாம்பிராணி முதலிய வாசனாதி திரவியங்கள் பாரம்பரிய முறையில் காய்ச்சப்பட்டு, தைலம் தயாரிக்கப்பட்டு மூலவரின் திருமேனிக்கு தைலக்காப்பு இடப்படுகிறது. ஆனி மாதம், கேட்டை நக்ஷத்திர நாளில் பெரிய பெருமாளுக்கு திருமுடி முதல் திருவடி வரை தைலக்காப்பு சாற்றப்படும்.
ஆண்டில் 11 மாதங்கள், (ஐப்பசி தவிர) ஸ்ரீரங்கத்தின் வடக்குப் பகுதியில் ஓடும் வடதிரு காவேரியில் இருந்து யானை மீது தீர்த்தம் கொண்டு வரப்படும். ஆனால் இந்த பெரிய திருமஞ்சனதுக்கு மட்டும் காவேரி அம்மா மண்டபத்திலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி *
வடதிசைபின்புகாட்டித் தென்திசையிலங்கை நோக்கி *
கடல்நிறக்கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு *
உடலெனக்குருகுமாலோ? என்செய்கேன்? உலகத்தீரே!
ஆண்டாள் யானை மீது தங்ககுடத்திலும், வெள்ளிக் குண்டங்களிலும் காவேரித் தீர்த்தத்தை வேதகோஷங்கள், பாசுரங்கள் பாடி பெரியபெருமாளின் திருமஞ்சனதுக்காக, ஊர்வலமாக எடுத்து வருவார்கள்.
நம்பெருமாளுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம் போன்றவற்றால் திருமஞ்சனம் செய்யும் வழக்கம் இல்லை. இதுதவிர ஏகாதசி, அம்மாவாசை, ரேவதி, தெலுங்கு வருடப்பிறப்பு உள்ளிட்ட நாட்களில் நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் உண்டு.
திருமஞ்சனத்துக்கு அடுத்த நாள் "பெரிய திருபாவாடைத் தளிகை" பெரிய பெருமாள், சன்னதி வாசலில் சமர்பிப்பார்கள். முக்கனிகள், நெய் ஆகியவற்றை அதிகமாகக் கலந்திருப்பார்கள். அதை பெருமாளுக்கு அமுது செய்த பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
Comments