top of page

பகல்பத்து 3 ஆம் நாள் உற்சவம்! பூலோக வைகுண்டமும் அந்தமில் பேரின்ப மோக்ஷமும்!!

பகல்பத்து திருமொழி திருநாளில், ஸ்ரீரங்கநாதர் உயர்ந்த மேடையில் தங்க ஆசனத்தில் தென்திசை நோக்கி எழுந்தருள, எதிரில் உள்ள ரேவதி மண்டபத்தில் ஆழ்வார், ஆசார்யர்கள் 'ப' வரிசையில் எழுந்தருளினர்.


நாலாயிரம் திவ்யப்பிரபந்தக் பாசுரங்களை, நம்மாழ்வார் கொடுக்க நாதமுனிகள் வாங்கிக்கொண்ட வைபவத்தையும், நம்மாழ்வார் நாதமுனிகளின் தாளங்கள் பற்றியும் முந்தைய பதிவில் வெளியானது. அதை இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம்.


ஸ்ரீவைகுண்ட வர்ணனை:

ஸ்ரீமந்நாராயணன் ஆழ்வார்கள், ஆசார்யர்கள், முக்தர்கள், நித்யசூரிகள் புடைசூழ, வட மொழி வேதமும் தமிழ் வேதம் எனக் கொண்டாடப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தினையும் ஸ்ரீவைகுண்டமான லீலா விபூதியில் கேட்டு மகிழ்வார்.



ஸ்ரீரங்கம் எனும் பூலோக வைகுண்ட வர்ணனை:

அவ்வாறே, பூலோக வைகுண்டமான திருவரங்கத்திலும், இந்தப் பகல்பத்து விழா நடைபெறும் அர்ஜுன மண்டபத்தில், நம்பெருமாளாகிய ஸ்ரீரங்கநாதர் உயர்ந்த மேடையில் தங்க ஆசனத்தில் தென்திசை நோக்கி எழுந்தருளியிருப்பார். எதிரில் உள்ள ரேவதி மண்டபத்தில் ஆழ்வார், ஆசார்யர்கள் 'ப' வரிசையில் எழுந்தருளியிருப்பார்கள்.


ரேவதி மண்டபத்தில் ஆழ்வார் ஆச்சாரியர்கள் புடைசூழ நம்பெருமாள்

மண்டபத்தின் இடதுபுறத்தில் எழுந்தருளி இருப்பவர்கள்:

1 . திருக்கச்சி நம்பிகள்:

தேவ பெருமாளுக்கு ஆலவட்ட கைங்கர்ய செய்தவர். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்திற்காக அருளாளனிடம் இருந்து ஆறு வார்த்தைகளைப் பெற்று தந்தவர்

2) திருமழிசைஆழ்வார் - திருச்சந்த விருத்தம் பாடிய மிடுக்குடன்

3) தொண்டரடிப்பொடி ஆழ்வார்:

பூக்குடலையுடன் அரங்கன் திருமேனி அழகு "என்னும் இச்சுவை தவிர, யான்போய் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே !" என்று அறுதியிட்ட ஆழ்வார் அதே நிஷ்டையுடன் சேவித்து நிற்கிறார்.

4)திருப்பாணாழ்வார்:

பண்ணிசைக்கும் தாளத்துடன் - அரங்கன் எனும் "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே" என்று, அன்று கண்ட அமுதினை இன்றும் அநுபவித்து.

5) குலசேகராழ்வார் ராஜமுடியுடன்-

'ரங்கயாத்ரா தினே! தினே!!' (தினமும் ரங்கனை சேவிக்க ஸ்ரீரங்கம் செல்ல வேண்டும்) என்று ஏங்கியவர் இன்று "இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி...கருமணியைக்,கோமளத்தை" இமைக்காமல் சேவித்துக்கொண்டு. 6) மதுரகவியாழ்வார்:

தேவுமற்றறியாமல், ஆசார்யர் நம்மாழ்வாரை சேவித்துக் கொண்டு.

நம்பெருமாளுக்கு நேர் எதிரில் 7) ஸ்வாமி ராமாநுஜர்:

அவர் நெறிப்படுத்திய அத்யயன உற்சவம் ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருவதை உகக்கும் கம்பீரத்துடன்.



8)நம்மாழ்வார்:

நம்பெருமாளுக்கு எதிரில், ரங்கநாதர் பதக்கம் அணிந்து,

"கங்குலும், பகலும், கண் துயிலறியாது, கண்ண நீர் கைகளால் இறைத்து, சங்கு, சக்கரங்கள் என்றே கைகூப்பி, தாமரைக்கண் என்று தளர்ந்து....."



9)திருமங்கை ஆழ்வார்:

இந்த விழாவை முதன்முதலில் அரங்கத்தில் அரங்கேற்றிய பெருமை பொங்க, வேல், கத்தி, கேடயம் ஏந்தி ராஜ அலங்காரத்தில்,



திருமங்கை ஆழ்வார் பாடிய,


மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய்* விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,*

பின்னுருவாய் முன்னுருவில் பிணி மூப்பில்லாப்* பிறப்பிலியாய் இறப்பதற்கே எது,* எண்ணும்-


பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப்* புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி*

தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை* தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.


என்னும் திருநெடுந்தாண்டகப் பாசுரமே இந்த 22 நாட்கள் நடைபெறும் விழாவின் தொடக்க நாள் அன்று அரையர்கள் பாடும் முதல் பாசுரம்.

10)பெரியாழ்வார்:

இன்று அரங்கேறும் பெரியாழ்வார் திருமொழி சாற்றுமறையில் "திருப்பொலிந்த சேவடி என் சென்னியில் பொறிப்பதை" ஆர்த்தியுடன் எதிர்நோக்கி, "செங்கண்மால் கொண்டு போன ஒரு மகளான" ஆண்டாள் பாடிய திருப்பாவை/நாச்சியார் திருமொழி கேட்கும் ஆனந்தத்தில்.


மண்டபத்தின் வலதுபுறத்தில் எழுந்தருளி இருப்பவர்கள்:


முதலாழ்வார்கள்:

பொய்கை யாழ்வார், பூத்தத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரும் முதலாழ்வார்கள் எனப்படுவர்

மூவரும் தங்கக் காசுமாலைகள் அணிந்து 11)பொய்கையாழ்வார்:

சுடராழியான்அடிக்கே,சொல்மாலை சூட்டிக்கொண்டு. 12)பூதத்தாழ்வார்:

இன்புறுகு சிந்தையை இடுதிரியாக்கி. 13)பேயாழ்வார்:

அன்று கண்டதிரு,பொன்முடி, அணிநிறம்,பொன்ஆழி,புரிசங்கம் ஆகியவற்றை இன்றும் ஆழிவண்ணன் அரங்கனிடம் கண்டு அடிதொழுது நிற்கிறார்கள்.

14)கூரத்தாழ்வான்:

ஆச்சார்ய சம்பந்தம் இல்லாத அரங்கன் சேவை வேண்டாம் என்று சொன்ன எழில் கூரத்தாழ்வான் ராஜமுடியுடன்,

தம் ஆசார்யரான சுவாமி ராமானுஜரை சேவித்தப்படியே ஆழ்வார் கோஷ்டியுடன் சேர்ந்து அரங்கனையும் சேவித்து கொண்டு.

15) பிள்ளை லோகாசார்யர்:

அரங்கன் 18 அத்யாயங்களில் சொன்ன, ஆழ்வார்கள் 4000த்தில் பாடிய,உடையவர் 18 முறை நடந்து பெற்ற-- ஆழ்பொருள் எல்லாம் 18 கிரந்தங்களில் எழுதி வைத்தவர் லோகாசார்யர். துலுக்கர் படைகளிலிருந்து நம்பெருமாளைக் காப்பாற்றி எடுத்துச்சென்ற அருளாளர்.

இந்த வரிசையிலேயே பகல்பத்து திருநாட்களில் சேவை சாதித்தபடி எழுந்தருளி இருப்பர்கள்.


நம்பெருமாள் அலங்காரம்:


 • பனிக்குல்லாவில் புஜகீர்த்தி

 • திருமுடியில் சந்திர வில்லை

 • மார்பில் தாயார் பதங்கங்கள்

 • அழகிய மணவாளன் பதக்கம்

 • முத்துச்சரம்

 • மகரி

 • கல் இழைத்த ஒட்டியாணம்

 • வைர அபய ஹஸ்தம்

 • அடுக்கு பதக்கங்கள்

 • வைர ஒட்டியானம்

 • காசு மாலை

 • ரத்தின திருவடி

உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிக் கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.



அரையர் சேவை:

இன்று அரையர் சேவையில் ,

பெரியாழ்வார் திருமொழி இறுதிப்பதிகமான, "சென்னியோங்கு" பதிகம் மற்றும்"நாச்சியார் திருமொழியில்" 12 ம் பதிகம் வரை சேவிக்கப்படும்.

அபிநய பாசுரங்கள்

"சென்னியோங்கு" மற்றும் "மார்கழித் திங்கள்" (திருப்பாவை) ஆக, இரண்டு பாசுரங்களுக்கும், அபிநய வியாக்கியானங்கள் நடைபெறும்.


"சென்னியோங்கு"பதிகத்தில்,

முதல் 7 பாசுரங்களுக்கும், முதலில் அபிநயம் பின்பு அந்த பாசுரம் எனத் ஒவ்வொரு பாசுரங்களும் சேவிக்கப்படும்.

"சென்னியோங்கு" 7 வது பாசுரத்தில், "திருப்பொலிந்த சேவடி என்சென்னியின் மேல் பொறித்தாய்" என அரையர் ஸ்வாமிகள் மூன்று முறை தாளம் இசைக்க சேவித்து நிறுத்துவார்கள். அபிநயமும் அது வரையே சேவிக்கப்படும்.

நம்பெருமாள் திருவடிகள், தம் தலைமேல் ஏந்திய (பொறித்த), பெரியாழ்வார் பெற்ற பேறு அடியார்கள் எல்லோருக்கும் கிடைக்குமாறு செய்ய அரங்கனைப் பிரார்த்தித்து, அரையர் ஸ்வாமிகள், நம்பெருமாளின் ஸ்ரீசடாரி திருவடிகளைத் தம்முடைய சிரஸில் தரித்து வந்து, ஆழ்வார் ஆச்சாரியர்கள், ஸ்தலத்தார்,மற்றும் உள்ள பாகவத, பக்தர்கள் கோஷ்டியில் அனைவருக்கும், சாதிப்பார்கள். எப்போதும் நமக்கு சடாரி சாதிக்கும் அர்ச்சகர்களும் இன்று அரையரிடம் சடாரி பெறுவார்கள். இந்த திருப்பொலிந்த சேவடியை, இன்று சென்னியில் பொறிப்பது வைணவர்களுக்கு ஒரு பெரிய பேறு. இதற்காகவே அவர்கள் இந்த நேரத்தில் மிக அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள்.


மார்கழித் திங்கள், மதிநிறைந்த நன்நாள்:

பிறகு, மார்கழித்திங்கள் பாசுரத்தின் வியாக்கியானம் பூர்த்தியானதும்

,ஆண்டாள் நாச்சியாரின் மனோரதத்தினைப்பூர்த்தி செய்ததால், "கோயில்அண்ணா" என்று ஆண்டாளே போற்றிய, "திருப்பாவைஜீயர்" ஆகப் பிரசித்தி பெற்ற, ஸ்வாமி ராமானுஜர் திருமுன்பு நின்று அரையர்கள் மார்கழித் திங்கள் பாசுரத்தை மீண்டும் பாடுவார்கள். ஸ்வாமி ராமானுஜரது சூடிக்களைந்த மாலை மற்றும் மரியாதைகள் அரையருக்கு அணிவிக்கப்படும்.

இன்று 8 பாசுரங்கள் (சென்னியோங்கு முதல்-7 பாசுரம்+திருப்பாவை முதல் பாசுரம்) அபிநயம் என்பதால் , அரையர்கள் மாறி,மாறி அபிநயம் செய்வார்கள்.


இவ்வாறு பெரிய திருநாளில் மூன்றாம் நாள் இனிதே நடைபெற்றது!!



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

113 views0 comments

Comentarios


bottom of page