மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி (Vaikunda Ekadesi) அன்று தொடங்கி சுக்ல பக்ஷம் (வளர்பிறை) ஏகாதசி தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா இராப்பத்து என்று அழைக்கப்படும். இம்முறை இது விலக்கு, 19 வருடங்களுக்கு ஒரு முறை இது நிகழும். திருவாய் மொழித்திருநாள், வேதத்திற்கும், திருவாய்மொழிக்கும் ஏற்றம் அளித்திடும் திருநாளாகும்.
நம்பெருமாள் புறப்பாடு/சேவை நேரங்கள்:
இராப்பத்து முதல்நாள் தவிர, மற்ற நாட்களில் பகல் 12 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து, புறப்பட்டு, 2.30 மணிக்கு ஆயிரம்கால் மண்டபம் (திருமாமணி மண்டபம்) அடைவார். இரவு 9.30 வரை அங்கு எழுந்தருளியிருந்து, பின்னர் புறப்பாடு கண்டருளி 10.30க்கு மூலஸ்தானம் அடைவார்.
இராப்பத்து முதல்நாளான இன்று வைகுண்ட ஏகாதசி, ஆதலால் அதிகாலை 3.30 மணிக்கு, விருச்சிக லக்னத்தில், நம்பெருமாள் ரத்ன அங்கி அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சரியாக 4.45க்குப் பரமபத வாசல் வழியே வந்து 5 மணியிலிருந்து, திருக்கொட்ட்டார மணல் வெளியில் பக்தி உலாத்தல் கண்டருளுவார்.
காலை 7.15க்கு திருமாமணிமண்டபம் / ஆயிரம்கால் மண்டபம் அடைவார். இரவு 12 மணி வரை அங்கு எழுந்தருளியிருந்து, பின் புறப்பட்டு நள்ளிரவு 1.15க்கு மூலஸ்தானம் சேர்வார்.
இராப்பத்து நாட்களில் ஆழ்வார்/ஆசார்யர்கள்:
இன்று பரமபத வாசலின் வெளியே நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், ராமாநுஜர் ஆகியோர் நம்பெருமாளை எதிர்கொண்டு வரவேற்பார்கள். மற்ற நாட்களில் இவர்கள் உள்மணல் வெளியில் தவிட்டறை வாசலுக்கு எதிரே எழுந்தருளியிருந்து நம்பெருமாளை வரவேற்று நம்பெருமாளைப் பின் தொடர்ந்து செல்வார்கள். மற்ற ஆழ்வார், ஆசார்யர்கள் ஆயிரம் கால் மண்டபம் முன்னால் உள்ள கொட்டகையில் எழுந்தருளியிருந்து பின்னர் ஆயிரம்கால் மண்டபத்துக்குச் செல்வார்கள்.
நம்பெருமாள் ரத்னங்கி:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் ஜொலிக்கும்
நம்பெருமாள் இன்று "ரத்னங்கி" என்னும் தங்கத்தில் ரத்தினக் கற்களையும், வைர, வைடூரிய, மாணிக்க, மரகத கற்களும் பதிக்கப்பட்ட, விலைமதிப்பற்ற அங்கியை அணிந்து கொண்டும், பாண்டியன் கொண்டை அணிந்தும் சேவை சாதிப்பார். (மூலவர் பெரியபெருமாள் 20 நாட்களிலும் முத்தங்கியில் சேவை சாதிப்பார்)
இன்றைய பாசுரங்கள்:
அரையர் சேவை ஆகக்கூடிய பாசுரங்கள்:
திருவாய்மொழி முதல் பத்து - 110 பாசுரங்கள்
அரையர் அபிநயம் & வியாக்யானம்: திருவாய்மொழி முதல் பத்து முதல் பாசுரம் (1-1-1)
உயர்வறவுயர்நலம் உடையவன் யவனவன் *
மயர்வற மதிநலம் அருளினன்யவனவன் *
அயர்வறுவமரர்கள் அதிபதியவனவன் *
துயரறுசுடரடி தொழுதெழென்மனனே!
அத்யயன உத்சவம் (சுருக்கமாக): இராப்பத்தில் தினமும் வடமொழி வேதமும், தமிழ் வேதமும் அரங்கனுக்கு சேவிக்கப்படும்.
வடமொழி வேதம்: க்ருஷ்ணயஜுர் வேதம் - பராசர பட்டர் /வேதவ்யாச பட்டர் விண்ணப்பம் செய்வார் தமிழ் வேதம்: திருவாய்மொழி - அரையர்கள் விண்ணப்பம் செய்வார்கள்
இன்று மூலஸ்தானத்தில் வடமொழி வேதம், த்ராவிட வேதத்தின் தொடக்கம் நடைபெறும். அதன் பின்னர் பெருமாள் புறப்பாடு நடைபெறும்.
பரமபத வாசல் திறப்பவர்: வடமொழி வேதம் விண்ணப்பம் செய்யும் பராசர/வேதவ்யாச பட்டர் இராப்பத்து விழா நடைபெறும் நாட்களில் தினமும் பரமபத வாசலை திறப்பார்.
வைகுண்ட ஏகாதசி (இராப்பத்து) சிறப்பு வைபவங்கள்:
வைகுண்ட ஏகாதசி அன்று, அரங்கனுக்கு வழக்கம் போல், அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி, ஆன பிறகு, அன்றைய பெரிய கோயில் முறைக்கார அர்ச்சகர் ஸ்வாமிகள், அவர்களின் திருமாளிகையில், (வீட்டில்) இருந்து, கோவில் கைங்கர்யபரர்களால், கோவில் மரியாதைகளுடன், அழைத்து வரப்படுவார். அர்ச்சகர் ஆலயத்தின் உள்ளே எழுந்தருளியவுடன், 'ஆரியபட்டாள்'வாசல் கதவுகள் மூடப்படும்.
நம்பெருமாள் பரமபத வாசலைக் கடந்த பிறகே, மீண்டும் ஆரியபட்டாள்' வாசல்கதவுகள் திறக்கப்படும்.
முறைக்கார அர்ச்சகர், சந்தனு மண்டபத்தின் அருகில் அமர்ந்து இருப்பார். உடனே "ஸ்தாநீகர்" கர்ப க்ருஹத்தில் இருந்து, அர்ச்சகர் ஸ்வாமிக்கு, அருளப்பாடு சாதிப்பார். முறைக்காரபட்டர் உள்ளே சென்று, யஜூர்வேத முதல் பஞ்சாதியை (பத்தி) சேவிப்பார்.
அதன்பிறகு, ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், சந்தஸ் சாமம், அதர்வண வேதம், சுக்ல யஜூர்வேதம், ஏகாயன சாகை, ஆகியவற்றிற்குத் தனித்தனியாக அருளப்பாடு ஆகும்.
பிறகு அரையர்கள், கர்ப க்ருஹத்தின் முன்னால் சென்று, "திருவாய்மொழி" முதல் பாசுரமான, "உயர்வற உயர்நலம் உடையவன்" என்னும் பாசுரத்தினைச் சேவிப்பார்கள்.
பிறகு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து, அதிகாலையில் புறப்பாடு கண்டருளி, சந்நிதிக்கு வெளியில் வந்து, சிம்ம கதி, ஒய்யார நடை ஆன பிறகு, ஸ்தலத்தார் மற்றும் தீர்த்தகாரர்களுக்கான மரியாதைகள் நடைபெறும்.
அதன்பிறகு மேலப்படிக்கு கீழே நிற்கும், உத்தமநம்பி ஆலய ஸ்தாநீகரால் அழைக்கப் படுவார். அவர் நம்பெருமாள் பக்கத்தில் சென்றதும், பட்டுத்தொங்கு பரியட்டம் கட்டி, நம்பெருமாளுடைய பட்டிலிருந்து, எடுக்கப்பட்ட ஒரு சிறிய பட்டுத்துண்டு அவர் தலையில் வைக்கப்படும்.
இதன்பிறகு நம்பெருமாள், மேலைப்படியில் இருந்து,கீழே எழுந்தருளி நாலடி இட்டபிறகு, கைகளில் தங்கத்தடி ஏந்திக்கொண்டு வரும், அரங்கனின் வேத்ர பாணிகளாகிய, சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள், தலையிலும், பட்டுத்துண்டுகள் வைக்கப்படும்
மேலுலக பயணம்:
இந்தத் திருவிழா, ஆழ்வார்கள் அருளிச் செய்த, நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், எம்பெருமானை எவ்வாறு சரணடைவது என்பதையும்,இந்த உடலை விட்டு ஜீவன் மேலுலகம் நோக்கி போகும்போது, ஒரு ஜீவன் எவ்வாறு ,எம்பெருமானை அடைகிறது, அந்த ஜீவன் செல்லும் பாதை, அந்த ஜீவனை பரமபதத்தின் அருகில் அழைத்துச் செல்பவர்கள், பரமபதத்தில் எம்பெருமானோடு இருப்பவர்கள், அங்கே நடைபெறும் நிகழ்வுகள், ஜீவன் முக்தி பெரும்விதம் என இயல் இசை நாடகம் என்ற தமிழ் மொழியின் முத்தமிழ் மூலம், நம் கண்முன்னே நடத்திக்காட்டும் ஒரு மேடைநாடகம் போல் நடக்கும் வைபவம் இந்த வைகுண்ட ஏகாதசி.
இதில் பரமபதம் தந்தருளும் பரமபத நாதனே நம்பெருமாள் என்பதை உணர்த்தவே இந்த 20 நாட்கள் திருவிழா. பிறகு நம்பெருமாள்,புறப்பட்டு சிறிது தூரம் சென்று, யாகசாலையின் அருகில், கிழக்கு நோக்கி திரும்பி சேவை சாதிப்பார். அங்கே "திருப்பணி செய்வார்" என்பவர்கள்,( கோயிலின் தீர்த்த கைங்கர்யம் செய்பவர்கள்) ஒரு பாத்திரத்தில் தீர்த்தத்தை கொண்டு வந்து, நம்பெருமாள் முன்பு சேர்ப்பார்கள்.
நம்பெருமாளுக்கு திருவடி விலக்கம் ஆகும்.
நம்மாழ்வார் இதைப்பற்றி, தன்னுடைய திருவாய் மொழியில்" பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்" என்று பாடியுள்ளார். சேனை முதலியாருக்கு மாலை சாற்றி, அங்கிருந்து, ஒய்யார நடையுடன், "நாழிகேட்டான்" வாசலைச் சென்றடைவார்.
அங்கே கோயிலின் மணியகாரர் ஆணையிட்டவுடன், "நாழிகேட்டான்" வாசல் கதவுகள் திறக்கப்படும். நம்பெருமாள் ஒய்யார நடையிட்டுக் கொண்டே,"பரமபத வாசல்" செல்லும் வழியான, துரைப்பிரதக்ஷிணத்தில், உள்ள துரை மண்டபம் சென்றடைவார்.
அங்கு முறைக்கார பட்டருக்கு, அருளப்பாடு ஆகி, "கிருஷ்ண யஜூர்" வேதம் 8 ஆம் பிரஸ்னம் சாற்றுமறை ஆகும். இன்றிலிருந்து, இந்த இராப்பத்து உற்சவத்தின் அனைத்து நாட்களிலும், முறைக்கார பட்டருக்கு மட்டுமே, துரை மண்டபத்தில் "பரியட்டம்" கட்டப்படும்.
மற்ற வேதங்களை சாற்றுமறை செய்வோருக்கு, பரியட்டம் கட்டப்படுவது இல்லை. அனைவருக்கும் தீர்த்தம், சந்தனம், விடாய்ப்பருப்பு வழங்கப்படும்.
பரமபதத்துக்கு முன், எப்படி 'விரஜை' என்னும் பெயரில் ஒரு நதி இருக்கிறதோ, அதேபோல் இங்கு அரங்கத்திலும், இந்த பரமபத வாசலின் அருகில் விரஜாநதியின் ஸ்தானத்தில், ஒரு கிணறு இருக்கிறது.
இங்கே இருக்கும் நாலுகால் மண்டபத்தில், நம்பெருமாளுக்கு வேத விண்ணப்பங்கள் ஆகி, நம்பெருமாள், பரமபத வாசலுக்குப் போனவுடன் ,நம்பெருமாள் அதுவரையில், தான் சாற்றிக்கொண்டு வந்த போர்வை போன்ற வஸ்த்ரம், களையப்பட்டு, புதிய மாலைகள், நம்பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும்.
அரங்கத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபமே பரமபதம். ஆயிரங்கால் மண்டபத்தின் முன்னே உள்ள கொட்டகையே, பரம பதத்துக்கு வெளியே உள்ள விண்வெளி. அரங்கன் ஆலயத்தில் உள்ள துரைமண்டபம், பரமபதத்திற்கும், பிரக்ருதி மண்டலத்தி ற்கும் இடையே உள்ள, விரஜா நதி மண்டலம் போன்றது ஆகும்.
துரைமண்டபத்தில், வேதசாற்றுமறை ஆகி, நம்பெருமாள் புறப்பட்டு,பரமபத வாசலுக்கு எதிரில் (உள்புறம்) சென்று, வடக்கு முகமாய் நின்று, அந்த"பரமபதவாசல்" கதவுகளைத் திறக்கும் படி, நியமித்தவுடன், பரமபதவாசல் கதவுகள் திறக்கப்படும்.
நம்பெருமாள் பரமபதவாசல்,திறந்து ,
கடந்து வருவதைக் காணவே அரங்கன் அடியார்கள் "ரங்கா" "ரங்கா" கோஷத்துடன் விடிய விடியக் காத்திருப்பார்கள்
அசுரர்களை வடக்கு திசை வழியாக, பரமபதத்திற்கு சேர்த்ததால் இந்த வாசலுக்கு "பரமபத வாசல்" என்ற பெயர் வழங்கப்படுகிறது.
தேவர்களை எதிர்க்கும் அசுரர்களையே, வடக்கு திசை வழியாக, தன்னுடைய பரமபதத்தில்,சேர்த்துக் கொண்டு, தன்னருகிலேயே வைத்துக் கொண்ட எம்பெருமான், தமது அடியார்களை
நிச்சயம் பரமபதத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடுவானா என்ன!!
அசுரர்களுக்கு நம்பெருமாள், ரத்னமயமானவன் என்பதைக் காட்டவே, இன்று தம்முடைய திவ்யமங்கள விக்ரஹத்ததில் நம்பெருமாள், "ரத்னங்கி"யோடு, நமக்கும் சேவை சாதிக்கிறார்.
திருமாமணி மண்டபத்தில் இருந்து இரவுப் புறப்பாடு:
அரையர் சேவை முடிந்தவுடன் அரங்கனுக்கு "வெள்ளிச்சம்பா" நிவேதனம் செய்யப்படும். பிறகு நம்பெருமாள் மூலஸ்தானம் செல்வதற்கு, புறப்பாடு கண்டருளுவார்.
இரவு நேரத்தில்,பனிக்காக (குளிருக்காக) போர்வை சாற்றிக் கொண்டு,'விளாமிச்சி வேர்"சப்பரத்தில் எழுந்தருளுவார்.மணல்வெளி கொட்டகையில்"மல்லாரி"என்னும் வாத்திய கோஷத்துடன் "ஒய்யார நடை" நடைந்து சேவை சாதிப்பார்.
அப்பொழுது பலவித வாத்தியங்கள் வாசிக்கப்படும்.
ஆரியபட்டாள் வாசல் முன்பு எழுந்தருளும்போது,கோவில் ஸ்தாநீகர்,"திறோ" என்று, வேகமாகக் குரல் கொடுக்க, ஆரிய பட்டாள் வாசல்திறக்கப் பட்டு, நம்பெருமாள் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் ஆரிய பட்டாள்" வாசலில் நுழைந்ததும்,அந்த ஆரிய பட்டாள் வாசலின் கதவுகள் மூடப்படும். பிறகு அடுத்த வாசலான,'நாழி கேட்டான் வாசல்' முன்பும் இதே போன்று ஸ்தாநீகர்,"திறோ" என்று, வேகமாகக் குரல் கொடுக்க, அங்கேயும் கதவுகள்திறக்கப்பட்டு, நம்பெருமாள் படியேற்றம் கண்டருளி,நாழிகேட்டான் வாசலின் உள்ளே நுழைந்ததும், அந்த வாசல் கதவுகளும்சாற்றப்படும்.
அங்கிருந்து வீணா கானம் (வீணை ஏகாந்தம்) கேட்டுக்கொண்டே,வழக்கம்போல்,ஸர்ப்ப கதியில் படியேற்றம் கண்டருளி ,மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளுவார்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!
Comentarios