top of page

ஸ்ரீ எம்பெருமானாரும் - அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும்

Updated: Nov 18, 2021

ஸ்ரீ வைஷ்ணவ சம்ரதாயத்தில் மிக முக்கியமான ஆசாரியரும், ஆசாரியர்களுள் தலைவருமான ஸ்ரீ எம்பெருமானாரின் மிக முக்கியமான சிஷ்யர்களில் ஒருவருமான அருளாளப் பெருமாள் எம்பெருமானாரின் சரித்திரத்தை காண்போம்...


அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருநக்ஷத்திரம் - கார்த்திகை பரணி.

விஞ்சிமூர் (தற்போது ஆந்திராவில்) என்னும் ஊரில் அவதரித்த இந்த ஸ்வாமியின் இயற்பெயர் யக்ஞமூர்த்தி. மிகப் பிரபலமான அத்வைத பண்டிதரான இவர் பிற்காலத்தில் ராமாநுஜரை ஆஸ்ரயித்து அவர் சீடராகி, அவராலே "அருளாளப் பெருமாள் எம்பெருமானார்" என்று திருநாமம் சூட்டப் பெற்றார்.



ஸ்வாமி தனியன்:


ராமானுஜார்யா ஸச்சிஸ்யம் வேத ஸாஸ்ரார்த்த ஸம்பதம் | சதுர்த்தாச்ரம ஸம்பந்தம், தேவராஜ முநிம் பஜே ||


"எம்பெருமானாரின் ப்ரியசிஷ்யர், வேதங்கள், சாஸ்த்ரங்களை உட்பொருள் உணர்ந்து கற்றவர். ஸந்யாச்ரமம் மேற்கொண்டவரான ஸ்ரீதேவராஜ முனிவர் என்னும் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரை அடியேன் சரண் புகுகிறேன்"



எம்பெருமானார் வகுத்த வழியில், அருளாளப் பெருமாள் எம்பெருமானார் எப்படி வாழ்ந்தார் என்று பார்ப்போம்:



*வாதில் வென்று, திருத்திப் பணிகொண்ட எம்பெருமானார்:

யக்ஞமூர்த்தி காசி சென்று பல பண்டிதர்களுடன் வாதிட்டு, வென்று பெரும் பேரும்/புகழும் பெற்றார்.அவரிடம் பலர் சீடர்களாகச் சேர்ந்தனர். அங்கிருந்து திரும்பும் வழியில் பல ஊர்களிலும் பல பண்டிதர்களுடன் வாதிட்டு வென்றார்.அந்தக் கால கட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் ராமாநுஜர் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் தலைவராக, விசிஷ்டாத்வைத மதத்தின் வித்தகராக விளங்குகிறார், என்று கேள்விப்பட்டு அவருடன் வாதிட ஸ்ரீரங்கம் வந்தார்.


ராமாநுஜர் அவரை வரவேற்று தகுந்த மரியாதைகள் செய்தார்.வாதப்போர் ஆரம்பம் ஆயிற்று. யக்ஞமூர்த்தி தாம் வாதில் தோற்றால், எம்பெருமானாரின் சீடராகி,அவர்தம் பாதுகைகளைத் தம் சிரசால் தாங்கிக் கொள்வதாகவும்,தம் பெயருடன் எம்பெருமானார் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்வதாகவும் கூறினார். எம்பெருமானார் தாம் தோற்றால் கிரந்த சந்யாசம் வாங்கிக் கொள்வதாக(எந்தக் கிரந்தத்தையும் தொடப் போவதில்லை என்று) கூறினார்.


16 நாட்கள் தொடர்ந்து வாதம் செய்தனர். இரண்டு வேழங்கள் மோதுவது போல் வாதம் நடந்தது.17 ஆம் நாள் மாலை யக்ஞமூர்த்தி வாதங்களை முடித்தார்.எம்பெருமானாரின் பதில் மறுநாள் காலை என்று சென்றனர். அன்றிரவு ராமாநுஜர் மிகுந்த மனக் கிலேசத்துடன் இருந்தார்.தம் திருவாராதனைப் பெருமாள் பேரருளாளரிடம் நெஞ்சுருக விண்ணப்

பித்தார்; நம்மாழ்வார் முதல் ஆளவந்தார் வரை, அனைத்து ஆசார்யர்களும் போற்றிப் பாதுகாத்த ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்குத் தம் காலத்தில் அபச்சாரம் ஏற்பட்டு விடுமோ (வாதத்தில் தோற்றால்) என்று அஞ்சினார். பேரருளாளர் அவர் கனவில் தோன்றி, "அஞ்சேல்!உம் ஆசார்யர் ஆளவந்தாரின் ஸித்திதிரயம் கிரந்தத்திலிருந்து, மாயாவாத கண்டன ஸ்லோகங்களைப் பதிலாகச் சொல்லும்.மேலும் இது நாம் உமக்கு ஒரு நல்ல சீடரை உருவாக்கித் தர நடத்தும் லீலையே" என்று அருளினார்.


மறுநாள் காலை பேரருளாளர் கிருபையோடு,எம்பெருமானார் கம்பீரமாக வாத மண்டபத்துக்கு எழுந்தருளினார்.அவரது தேஜஸையும்,பொலிவையும் கண்ட யக்ஞமூர்த்தி இனி இவரிடம் வாதிட ஒன்றுமில்லை என்றுணர்ந்து, ''நான் தோற்றேன்'' என்று எம்பெருமானாரின் திருவடிகளில் தண்டம் சமர்ப்பித்து, அவருடைய பாதுகைகளைத் தம் சிரசில் தாங்கினார்.


"பெரியபெருமாளுக்கும் தேவரீருக்கும் வேறுபாடில்லை;இனிஎதற்குவாதம்?"

என்று விண்ணப்பித்து,தம்மைச் சீடராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். ஆனாலும் உடையவர் கிருபையுடன், எம்பெருமானின் ஸகுணத்வத்தைத் தக்க பிரமாணத்தைக் கொண்டு விளக்கி, யக்ஞமூர்த்தியைத் தெளிவாக்கினார்.


*பேரருளாளரின் பொங்கும் பரிவு:


ராமாநுஜருக்கு, ஒவ்வொரு கட்டத்திலும் கூடவே இருந்து--ஆறுவார்த்தை அருளியது, துறவறம் நல்கியது,எதிராஜர் என்று அழைத்தது, ஆளவந்தாரின் பிரார்த்தனையை ஏற்றது, ஸ்ரீரங்கநாதருக்கு எதிராஜரைத் தந்தருளியது, திருவாராதனைப் பெருமாளாக எழுந்தருளி நல்கியது, கூரத்தாழ்வானுக்குக் கண்பார்வை அருளியது--வழிகாட்டினார் வரம் தரும் வரதர்.


யக்ஞமூர்த்தியை எம்பெருமானாரிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்காக, தேவப்பெருமாளே இப்படி ஒரு வாதத்தை ஏற்பாடு செய்து, எம்பெருமானாருக்கு தகுந்த வழி சொன்னார். வாதப்போட்டியின்விதிப்படி, யக்ஞமூர்த்திக்கு தம் பெயரைச் சூட்ட விழைந்த ராமாநுஜர் பேரருளாளரின் பெருங்கருணையைப் போற்றும் வண்ணம் "அருளாளப்பெருமாள் எம்பெருமானார்" என்று திருநாமம் சூட்டினார்.தம் திருவாராதனை மூர்த்தி

யான தேவப்பெருமாளுக்கு,நித்ய திருவாராதனை செய்யும் கைங்கர்யத்தையும் ராமாநுஜர் அரு.பெரு.எம்பெருமானாருக்கு வழங்கினார்.



*எம்பெருமானார் அருளிய சிஷ்ய ஸம்பத்து:

அரு.பெரு.எம்பெருமானாருக்கு சிஷ்ய சம்பத்து உண்டாக வேண்டி,

எம்பெருமானார் தம்மிடம் ஆஸ்ரயிக்க வந்த சிறந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் அனந்தாழ்வான்,எச்சான் முதலானோரை அவரை ஆசார்யராக ஏற்கும்படி நியமித்தார்.அவர் அதற்கு குருவி தலையில் பனங்காயை வைத்த மாதிரி இவ்வளவு பெரிய பொறுப்பை தம்மிடம் கொடுக்கிறாரே உடையவர் என்று நினைத்தார்.இருந்தாலும் ஆசார்ய நியமனப்படி அவர்களுக்குப் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து வைத்தார்.ஆனால் அவர்களிடம் எம்பெருமானாரே உபாயம் என்று எப்போதும் இருக்கும்படி அறிவுறுத்தினார். அரு.பெரு.எம்பெருமானாருக்காக,ராமாநுஜர் ஒரு மடத்தையும் நிறுவிக் கொடுத்தார்.


*மடத்தை இடித்து, நெஞ்சில் இடம் கொண்ட மகான்:

ஒரு முறை வெளியூரிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த சில ஸ்ரீவைஷ்ணவர்கள், அங்கிருந்த சிலரிடம், எம்பெருமானார் மடம் எங்கிருக்கிறது என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள் எந்த எம்பெருமானார் மடம் என்றனர்.அதற்கு வந்தவர்கள் நம் சம்பிரதாயத்தில் இரண்டு எம்பெருமானார் இருக்கிறார்களா என்று ஆச்சர்யப்பட்டனர். பின்னர் உடையவர் மடம் என்று சொல்லிக் கேட்டுச்

சென்றனர். இதைப் பற்றிக் கேள்விப்பட்ட அரு.பெரு. எம்பெருமானார்,'இது என்ன அபச்சாரமாகி விட்டதே? இரண்டு மடங்கள் இருந்தால் தானே பிரச்சனை' என்று நினைத்து உடனே தம் மடத்தை இடித்துத் தள்ளி விட்டார்.


உடனே எம்பெருமானார் மடத்துக்குச் சென்று, தாம் அங்கேயே தங்கி அவரிட்ட கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருப்பதாகக்கூறினார். எம்பெருமானார் அவர் கோரிக்கையை ஏற்றார். பேரருளாளருக்கு நித்ய திருவாராதனை, கைங்கர்யத்தை, அருளிய உடையவர் அவருக்கு திவ்யபிரபந்தங்களின் ஆழ்பொருள், மற்றும் ரஹஸ்யார்த்த

ங்களையும் எடுத்துரைத்தார்.


* அருளாளப் பெருமாள் எம்பெருமானார் அற்புதக் கிரந்தங்கள்:

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் 'ஞானஸாரம்', 'ப்ரமேய ஸாரம்' என்னும் இரண்டு அற்புதக் கிரந்தங்களை இயற்றினார். அவர் எம்பெருமானாரிடம் கேட்டுத் தெரிந்த சத்விஷ்யங்களின் ஸாரமாகவே இவை அமைந்தன. 40 பாசுரங்கள் கொண்ட ஞானஸாரம் ஒவ்வொரு ஜீவாத்மாவும் எம்பெருமானை அடைய வேண்டிய ஞானத்தையும், ஆசார்ய அபிமானம் என்னும் ஞானத்தையும் உரைக்கிறது. 10 பாசுரங்கள் கொண்ட ப்ரமேயஸாரம்,திருமந்திரத்தின் ப்ரமேயங்களை உரைக்கிறது.

இந்த பிரபந்தங்களின் அடிப்படையில் பிள்ளை லோகாசார்யர், ஸ்ரீவசனபூஷண சூரணைகளை அமைத்துள்ளார்.

மணவாள மாமுனிகள் இந்த இரு கிரந்தங்களுக்கும் வ்யாக்யானம் செய்துள்ளார்.


அருளாளப் பெருமாள் எம்பெருமானார் வாழித்திருநாமம்:


திருவாழுந் தென்னரங்கஞ் சிறக்க வந்தோன் வாழியே தென்னருளாளர் அன்பால் திருந்தினான் வாழியே தருவாழும் எதிராசன் தாளடைந்தோன் வாழியே தமிழ் ஞானப்பிரமேயஸாரம் தமர்க்குரைப்போன் வாழியே தெருளாரும் மதுரகவி நிலை தெளிந்தோன் வாழியே தேசுபொலி மடந்தன்னைச் சிதைத்திட்டான் வாழியே

அருளாளமாமுனியாம் ஆரியன்தாள் வாழியே அருள் கார்த்திகைப் பரணியோன் அனைத்தூழி வாழியே!!!



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


346 views0 comments

Comments


bottom of page