கூரத்தாழ்வானின் வைபவத்தை ஒட்டி, அவரைப் பற்றியஅரிய பல விஷயங்களைத் தொகுப்புகளாக வழங்கி வருகிறோம். அந்த வகையில்,
இன்று 4 ஆம் நாளாக, ஆழ்வான் என்ற திருநாமம் பெற்ற காரணத்தை இங்குக் காணலாம்.
ஒருமுறை, ஸ்வாமி இராமானுஜர் கூரத்தாழ்வானிடத்தில் திருவாய்மொழி அர்த்தத்தைக் கேட்க விரும்பினார். ஆனால், கூரத்தாழ்வானோ ஆசார்யன் (இராமானுஜர்) திருவடிகளே உறுதுணை என்று இருப்பவர். அவர் சேஷத்வத்தின் (அடிமைத்தனத்தின்) எல்லையிலே நிற்பவர். அவர் தனது ஆசார்யனான இராமானுஜருக்கு, தானே ஆசிரியராக இருக்க நேரிடுமே என எண்ணி, அது போன்று பொருளுரைக்க ஒப்புக் கொள்ளமாட்டார்.
ஆகையால், மற்றொரு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது முதலியாண்டான் போன்றவர்களுக்கு ஆழ்வான் திருவாய்மொழியின் பொருளைச் சொல்ல வேண்டும் என்றும், அதை அவர்கள் கேட்டுக் கொண்டு அப்படியே எம்பெருமானாரிடம் சொல்ல வேண்டும் என்றும், ஏற்பாடு ஆகியது.
அவ்வாறே அவர்களுக்கு, திருவாய்மொழியின் முதல் பாசுரமான
“உயர்வற வுயர்நலமுடையவன்" எனும் திருவாய்மொழிக்கு அர்த்தம் கூறத் தொடங்கினார். உடனே, அவர் மோஹித்து (மயங்கி) விழுந்து விட்டார். பிற சமயவாதிகள் (மற்ற சமயங்களைப் பின்பற்றி வாதிடுபவர்கள்) “ப்ரஹ்மத்திற்கு (திருமாலுக்கு) குணம் என்பதே கிடையாது, அது நிர்குணம் என்று உளறுகிறார்களே. அவ்வாறு பிதற்றுபவர்களின் கழுத்தை நெறித்து போலே, நம்மாழ்வார் முதல் வரியிலேயே “உயர்வறவுயர் நல முடையவன்” என்று கூறியுள்ளார்.
இதன் பொருளை நம்மாழ்வார் எவ்வளவு அழகாக கூறியுள்ளார் என்பதில் ஆழ்ந்து, கூரத்தாழ்வான் அதனுடைய அர்த்தத்தை மற்றவர்களுக்கு சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே மயங்கி விழுந்துவிட்டார்.
இந்நிலையை சுவாமி இராமனுஜரிடம் கூற, அவரும் விரைந்து வந்து பார்த்தார்.
“நம்மாழ்வார் திருவாய்மொழி அருளிச்செய்யும் பொழுது, 'எத்திற முரலினோடிணைந்திருந்தேங்கிய யெளிவே (திருவாய்மொழி 1-3-1) என்று ஆறு மாதம் மயங்கி கிடந்தார்.
நமக்கு அதை சேவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. இன்று, அதே நம்மாழ்வாரைப் போல் இவர் மயங்கிக் கிடப்பதை நம் கண்ணாரக் காணும் பாக்கியம் பெற்றோமே” என்று குரல் தழுதழுக்கப் பேசினார்.
தான் அருகில் நின்றிருப்பதை உணருகிறாரா என்று பார்த்தார். நம்மாழ்வாரின் அருளிச்செயலில் உருகி, ஆழ்ந்து மயங்கிக் கிடப்பதால், ஸ்வாமி இராமாநுசர் வந்திருப்பதைக் கூட உணரவில்லை .
உடனே இராமாநுசர் ஸ்ரீவத்ஸாங்கரிடம் அருகில் சென்று, “ஆழ்வான்! ஆழ்வான்!! ஆழ்வான்!!!” என்று கூவி, அவருடைய திருமுதுகைத் தட்டி உணர்த்தினர்.
உடனே சட்டென்று விழித்து எழும்பொழுதே "உயர்வற உயர்நல முடையவனென்பதே!” என்று சொல்லிக்கொண்டே துடுக்கென்றெழுந்தார்.
குறிப்பு:
இதுவரையில் கூரத்தாழ்வானுக்கு "ஸ்ரீவத்ஸாங்கர்” என்ற பெயர்தான் இருந்து வந்தது. அன்று திருமாலின் திருக்கல்யாண குணங்களில் ஆழ்வாரைப் (நம்மாழ்வாரை) போல் உருக்கத்திலே ஆழ்ந்து இருந்ததால், இவரை இராமாநுசர், “ஆழ்வான்” என்று அழைத்ததால், அன்று முதலாக இவருக்கு "ஆழ்வான்”
என திருநாமம் ஏற்பட்டது. மேலும் இவர் அவதரித்த இடம் "கூரம்” என்பதால், அதனுடன் சேர்த்து இவருக்கு “கூரத்தாழ்வான்” என்ற பெயர் ஏற்பட்டது.
Comments