top of page

திருக்கோவலூர் ஆயனை மீட்டு கொண்டு வந்த ஜீயர்!

Updated: Jan 15, 2022

சைவ சோழ மன்னனால் திருகோவலூர் உட்பட பல திவ்யதேசங்கள் அபகரிக்கபட்டு சிவ லிங்கம், சிவ சின்னங்களால் சிவ ஆலயமாக மாற்றப்பட்டது. இந்த நிலையில், திருக்கோவலூர் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் அவதரித்தார். இது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.





பிறப்பு:

  • தை மாதம் - மிருகசீர்ஷ நக்ஷத்திரம்

  • திருநாமம் - இராமானுஜன்

  • அவதார ஸ்தலம் - திருமலை அருகே முல்குதிர் கிராமம்

  • திருவனந்தாழ்வான் அம்சம்

  • ஆச்சாரியர் - ஏட்டூர் அத்தங்கி சிங்கராச்சாரியார் ஸ்வாமி


  1. மணவாளமாமுனிகள் பரமபதித்த பிறகு 9 வருடங்களுக்கு பிறகு இவர் திருவதாரம் செய்தார்.

  2. அவதரித்த காரணம்: சைவ சோழ மன்னனால் திருகோவலூர் உட்பட பல திவ்யதேசங்கள் அபகரிக்கபட்டு சிவ லிங்கம் மற்றும் சிவ சின்னங்களால் சிவ ஆலயமாக மாற்றப்பட்டன. கோயில் கைங்கரியம் இழந்த பட்டர் எம்பெருமானிடம் முறையிட, அவரது கனவில் தோன்றி ஜீயர் அவதரிக்க போகிறார். அவரால் இந்த திவ்ய தேசங்கள் மீண்டும் புனரமைக்கப்படும் என திருவாய் மலர்ந்தருளினார்.

  3. திருவேங்கடவனின் திருவருளால் அந்த பாலனுக்குத் தந்தையார் தக்க காலங்களில் ஜாதகர்மம், அன்னப்பிராசனம், சௌளம் முதலிய சடங்குகளைச் செய்து வைத்தார்.

  4. ஆச்சாரியரை ஆஸ்ரயித்தல்: ஏழாவது வயதில் திருமலையில் உபநயநத்தை செய்விப்பதாக அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். அவர்களுடைய பிரயாணத்திற்கு முன்னாள் இரவில் அத்தங்கி ஏட்டூர் சிங்கராசாரியர் (இவரின் ஆசார்யர்) கனவில் திருவேங்கடமுடையான் தோன்றி நம் குழந்தை நாளைக்கு சந்நிதிக்கு வருகின்றான். அவனுக்குப் பெரும் சிறப்புடன் உபநயநத்தை நடத்தி வையுங்கோள். சிங்கராசாரியரே! நீர் அவனுக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து, வித்தையும் அதிகரிப்பித்து வையும் என்று நியமித்தருளினான். அவர்கள் தாம் கண்ட கனவை வியந்து, புகழ்ந்து, ஆனந்தத்துடன் அப்பாலகனின் வரவை எதிர்பார்த்திருந்தனர். நல்ல முகூர்த்தத்தில் உபநயனம் நடைபெற்றது. சிங்கராசாரியர் திருவடிகளில் ஆஸ்ரய்த்து சொற்ப காலத்துள் சகல வேத சாஸ்திர இதிகாசபுராண தர்க்க மீமாம்சாதிகளையும் ஓதி உணர்ந்து வல்லவரானார். மேலும் ஆழ்வார் அருளிச்செயல்களையும் பூர்வாச்சாரியர்களின் இரகசிய கிரந்தங்களையும் மிக குறுகிய காலத்தில் ஓதி உணர்ந்தார்.

  5. ஜீயர் எனும் திருநாமம் பெறுதல்: இவ்வண்ணம் 3 ஆண்டுகள் கழிந்தன. திடீரென திருவேங்கடமுடையான் சந்நிதியில் எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் கேள்வியப்பன் பெரிய ஜீயர் திருநாடு அலங்கரித்தனர். திருவேங்கடத்து அப்பனும் அர்ச்சக முகேன நமக்கு அந்தரங்கரான லஷ்மணாரியரான இராமனுஜரை சந்யஸிக்கச் செய்து பெரிய ஜீயர் பீடத்தை அலங்கரிக்கச் செய்யவும் நியமித்து அருளினான். சில காலம் ஜீயர் திருமலை கைங்கரியங்களை குறையற நிர்வகித்து வந்தார்.

  6. ஜீயர் திருக்கோவலூருக்கு எழுந்தருளல்: 17 ஆண்டுகள் ஜீயராக திருமலையில் கைங்கரியம் செய்தார். அவரது 47வது வயதில் சகல பரிவாரங்களும் புடைசூழத் திவ்யதேசப் புநருத்தாரணத்திற்காகப் புறப்பட்டார். முதலில் திருக்கோவலூருக்கு எழுந்தருளி ஆயனாரின் நிலையை அவ்வூர் மன்னனுக்கு தெளிவுப்பெற எடுத்துக்கூறினான்.


சைவர்கள் எதிர்ப்பு:

இது வைணவ திவ்யதேசம் என ஆழ்வார் அருளிச்செயல்களை கொண்டும் புராண வரலாறு கொண்டும் தெளிவூட்டினார். ஆனால் சைவர்கள் செவி மடுக்கவில்லை. ஜீயரை சுண்ணாம்பு காளவாயில் நின்று நிரூபித்து காட்ட சொன்னார்கள் சைவர்கள். ஜீயரும் சைவர்களுக்கு கோரிக்கை வைத்தார். தாம் ஜெயித்தால் தன்னை எதிர்த்த சைவர்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை ஆஸ்ரயிக்க வேண்டும் என கூறினார். அவர்களும் அதன் படி ஒப்புக் கொண்டனர்.


ஜீயரும் தாமதமின்றிச் சுண்ணாம்புக் காளவாய் அமைக்கச் செய்யும்படி அரசனைக் கோரினார். அரசன் அவ்வண்ணமே ஏவ, உடனே சுண்ணாம்பு காளவாய் ஒன்று அமைத்து அதில் படுக்கும்படி ஜீயரைக் கோரினர். ஜீயர் பெருமானும் குளிர் அருவி வேங்கடக்கோன் திரு ஆனையைச் சிந்தை செய்து இடைகழி எந்தையன் இன்னருளே அரணாகக் கொண்டு, ஆயனார் திருவடிகளில் விண்ணப்பித்துக் கொண்டே அக்காளவாயின் இடையே சாய்ந்தருளனார். சூழ்ச்சியாளர்கள் தீ மூட்டினர்.


ஆயனார் திருவருளால் காளவாயின் வெந்தீ, ஜீயர் பெருமானுக்குச் சிறு வெப்பமும் தரவில்லை. மெல்லிய பூங்காற்றினிடை பூம்படுக்கையில் இருந்து எழுவது போல் திருமேனி கோலமழியாமல், வாடாமல், அப்பொழுதே பூத்த செந்தாரை ஒத்த திருமுகம் செவ்வியுற்று ஒளிர, செந்துவராடை மின்ன எழுந்து ஆயனார் எழுந்தருளியுள்ள திக்கு நோக்கி இருகரங்களையும் கூப்பித் தொழுத வண்ணம் காளவாய் எரிந்து தணியும் வரையில் நின்று கொண்டிருந்தார். ஜீயர் புன்சிரிப்புடன் காளவாயில் இருந்து வெளியேறி ஆயனார் சன்னிதிக்கு விரைந்தார்.


ஆயனார் காட்சி தருதல்:

அவர்களைக் கர்ப்ப மண்டபத்து வாயிலை மூடியிருந்த கல்திரையின் முன் நிறுத்தி, அந்தச் சுவற்றில் ஜீயர் தமது முக்கோலால் (த்ருதண்டத்தால்) ஓர் அளவு காண்பித்துத் திறக்கும்படி பணித்தார். மன்னனும் அவ்வாறே செய்தான். நீள்வாள் குறளுருவாய் நின்றிரந்து மாவலி மண் ஒங்கி அளந்த உத்தமன் காட்சியளித்ததை மன்னனும் மற்றவரும் கண்டனர், திடுக்கிட்டனர். ஜீயர் பெருமானின் அருள் சக்தியைப் புகழ்ந்து கொண்டாடினார்கள். ஆயனார் சேவையைக் கண்ட ஜீயர் பேரானந்தப் பெருங்கடலுள் ஆழ்ந்து, தம்மை மறந்து, பின்பு தெளிந்து, அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி (திருப்பாவை 24ஆம் பாசுரம்) என்று மங்களாசானம் செய்து, மஞ்சாடு வரையேழும் கடல்களேழும் (பெரியதிருமொழி 2-10-1) என்னும் பாசுரத்தை அநுசந்தித்து தொழுது ஏத்தி நின்றார்.


ஜீயர் நியமித்த படியே எதிர்ப்பு தெரிவித்த சைவர்களும் அவரது திருவடியை ஆஸ்ரய்த்தனர்.


ஆயனாரைத் திருவடி தொழுது மங்களாசாசனம் செய்து வருகையில், எம்பெருமான் மிக்க மகிழ்ச்சியுடன் ஜீயரைக் குளிர கடாசஷித்து வாரீர் எம்பெருமானாரே? என்று அழைத்தருளினன். அது முதல் ஜீயர், எம்பெருமானார் ஜீயர் என அழைக்கப்பெற்றார். அவ்வூர் மன்னனைக் கொண்டு கைங்கர்யங்களும் திருவிழாக்கள் முதலானவைகளும் பெரும் சிறப்பாக நடந்து வருகைக்கு ஆவனவற்றை நியமித்து வைத்தார் ஜீயர்.


ஜீயர் மற்ற திவ்யதேசங்களுக்கு எழுந்தருளல்:


ஸ்ரீமுஷ்ணம், திருகண்ணமங்கை, ஸ்ரீவைகுண்டம் முதலான நவ திருப்பதி திவ்ய தேசங்களில் பலகாலம் எழுந்தருளி திவ்யதேசங்களை புனரமைத்து கைங்கரியங்களை நியமித்து அருளினார். பெரும்பாலான மக்கள் ஜீயர் திருவடி பணிந்து சிஷ்யர்கள் ஆனார்கள்.


ஜீயர் திருவரங்கத்துக்கு எழுந்தருளல்:

ஜீயர் ஸ்ரீவைகுண்டம் பெருமானுக்கு மங்களாசனம் செய்து இருக்கும் சமயத்தில், நம்மாழ்வார் அவரது கனவில் தோன்றி, “ஜீயரே! நீர் திருவரங்கத்திற்குச் சென்று அங்கு நம் கூரத்தாழ்வான் சந்நிதியை பிரதிஷ்டை செய்யவும்” என்று நியமித்தார். நவதிருப்பதி கைங்கர்யங்கள் குறையற நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, தமது 66வது வயதில் திருவரங்கத்துக்கு எழுந்தருளினார். வேதவ்யாச பட்டர் ஜீயர் ஏகாந்தத்தில் இருக்கும் சமயத்தில், கோயிலில் முக்கியமாக நடைபெற வேண்டிய கூரத்தாழ்வான் சந்நதி பிரதிஷ்டைக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு, கைசிக புராண படன அருளப்பாடுகளின் குறைவு, அதிகார வர்க்கத்தாரால் நேர்ந்துள்ள இடுக்கண்கள் முதவானவற்றை ஜீயரிடம் பெரும் துக்கத்துடன் விண்ணப்பித்துக் கொண்டார். ஜீயரும், திருவரங்கன் திருவருளால் அனைத்தையும் சீர் படுத்துவோம் எனப்பணித்து, அவரைத் தேற்றித் தம் காரிய சித்திக்கு அநுகூலமான சமயத்தை எதிர் பார்த்திருந்தார்.


திருவரங்கத்தில் அனைத்து கைங்கரியங்களையும் சரிவர நடத்த ஏற்பாடு செய்தல் :

வேதவ்யாஸ பட்டரின் விருப்பத்தை நிறைவேற்றினார். கூரத்தாழ்வான் சந்நிதி ப்ரதிஷ்டைக்கு இடையூறு செய்தவர்களை ஜீயர் திருத்திப்பணி கொண்டார். அதன் மூலம் தடைப்பட்டிருந்த கூரத்தாழ்வான் சந்நிதிப் ப்ரதிஷ்டையும் நடைபெற்றது. பட்டருக்குச் சாஸனம் செய்து கொடுத்தார். பின்பு ஸ்ரீகைசிக புராண படனம், ப்ரஹ்மரத அருளப்பாடுகள் ஆகியவற்றைத் தாமே நடத்திக் கொண்டு, ப்ரஹ்மரதத்திற்கு தடையாக இருந்து வந்த பிரம்மராசஷசை அடக்கி விரட்டியோட்டினார். பட்டருக்கு அதிகார வர்க்கத்தாரால் நேர்ந்திருந்த இடுக்கண்களையும் நலமாக்கிக் கொடுத்தார். பட்டரும், தமது மனக்குறைகள் முற்றும் ஒழியப் பெற்று ஜீயர் திறத்தில் மிக்க க்ருதஜ்ஞராய் இருக்கலுற்றார்.


ஜீயர் திருநாடு அலங்கரித்தல்:

ஜீயர் மீண்டும் திருக்கோவலூருக்கு எழுந்தருளினார். அப்போது அந்த ஊர் திருக்கோவலூரில் மடம் அமைக்கப்பட்டது. அந்த மடத்தில் இருந்தப்படி, ஜீயரும் பலகாலம் தாம் புரனமைத்த திவ்யதேசங்களில் சரிவர நடைபெறும் காரியங்களை விசாரித்துக் கொண்டும். ஆயனை மங்களாஸாஷனம் செய்து கொண்டும் எழுந்தருளி இருந்தார்.

பிறகு, தமது திருவடிகளில் தொண்டு செய்து வந்த சிஷ்யர்களுள் சிறந்து விளங்கிய திருமலை நம்பி என்பவரை சந்யஸிக்கச் செய்து திரிதண்ட, காஷாயாதிகளைக் கொடுத்து திருமலை நம்பி எம்பெருமானார் ஜீயர் என்கிற திருநாமத்தைச் சார்த்தி தமது பீடத்தை அலங்கரிக்கச்செய்தார். தம்முடைய சகல உரிமைகளையும் அவருக்கு ஆக்கி வைத்தார். ஜீயர் தமது 116-வது வயதில் திருநாட்டை அலங்கரித்தார்!


திருக்கோவலூர் ஒன்றான எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!


330 views0 comments

Comments


bottom of page