top of page

ஸ்வாமி மணவாளமாமுனிகளின் "ஸ்ரீசைலேஷ தயாபாத்திரம்" ஸ்லோகம் தோன்றிய வைபவம் மற்றும் வரலாறு

இன்று ஆனி மூலம் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சிஷ்யனாக தன்னை மாற்றிக்கொண்டு ஸ்வாமி மணவாளமாமுனிகளுக்காக "ஸ்ரீசைலேஷ தயாபாத்திரம்" என்ற ஸ்லோகத்தை இயற்றிய நாள்.


ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம் |

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம் ||



இடம் : பெரியபெருமாள் சன்னதி வாசல் கருட மண்டபம்

சேனைமுதண்மையார், ஆழ்வார், ஆசார்யர்கள் மற்றும் நிலத்தேவர்கள் குழாங்களுடன் நம்பெருமாள் திவ்ய ஸிம்மாசனத்தில் வீற்றிருந்து மணவாளமாமுனிகளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான். (இக்காலத்தில் நடைபெறும் அத்யன உற்சவத்தில் அரையர் வரவிற்க்காக காத்துயிருப்பது போல்)


ஸ்ரீரங்கநாராயண ஜீயர் தொடக்கமான ஸ்தலத்தார்கள் அவரை எதிர் கொண்டு வரவேற்றனர்.மணவாளமாமுனிகள் நேரே கருட மண்டபம் சென்று, தண்டனிட்டு நம்பெருமாளை பார்த்து அமர்ந்து கொண்டு தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையை மனதில் தியானித்து குருபரம்பரை தனியங்களை அருளிச்செய்ய தொடங்கினார்.


மணவாளமாமுனிகளுக்கு சம்பாவனை செய்யும் சமயம் வந்தது. என்ன ஒரு ஆச்சர்யம்! எங்கிருந்தோ வந்தான் சிறுவன் ஒருவன்! நான்கு வயது அவனுக்கு! வந்தவன் நேராக பெரியஜீயர் முன்பு நின்றான். தன்னுடைய பெயர் "அரங்கநாயகம்" என்றான். பெரியோர்கள் பலர் அவனை விளக்க முயன்றனர். அவர்களால் அவனை விலக்க முடியவில்லை. பிடிவாதமாக பெரிய ஜீயர் முன்பு நின்றான். இரு கரம் கூப்பினான். கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது! கம்பீரமான குரலில் பதம் பதமாக பிரித்து,


"ஸ்ரீஸைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்

யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"



( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.) என்று சொன்னான். கூடியிருந்த பெரியோர்கள் காண, அச்சிறுவன் அடுத்த நொடிகளில் ஓடிப்போக, அவனை அப்பெரியோர்கள் அன்புத் சொற்களால் கொஞ்சி அழைத்து மீண்டும் சொல்வாய் என்று வேண்டினர்.


"எனக்கு ஒன்றும் தெரியாது" என்று விரைந்து ஓடி, பெரியபெருமாள் சன்னிதிக்குள் சென்றவன் மறைந்து போனான். அங்கிருந்தவர்கள், பெரியபெருமாளே பாலனாய் தோன்றி தனியன் வெளியிட்டதை உணர்ந்தனர்.



(குறிப்பு: ஸ்ரீசைலேச வைபவம் 1433 நடைபெற்றதாக வரலாற்று ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி பார்த்தால் இவ்வைபவத்திற்கு வயது 588 ஆகிறது.)


மணவாளமாமுனிகளுக்கு நம்பெருமாள் சகல வரிசைகளும் சம்பாவனைகளும் சமர்ப்பித்து ஸ்ரீசடகோபன் ப்ரஸாதித்து சிறப்பித்தார்.

பிறகு ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனுக்கு அருளப்பாடு கூறி " மணவாளமாமுனிகள் விஷயமாக வாழிதிருநாமம் அருளிச்செய்யும்" என்று நம்பெருமாள் நியமித்தார்.


அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ

சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ மணவாள மாமுனியே!

இன்னுமொரு நூற்றாண்டிரும்!

என்று பாசுரங்களை அருளிச்செய்தார்.


நம்பெருமாள் ஸகல மரியாதைகளுடன் பெரிய ஜீயரை மடத்துக்கு அனுப்பப் திருவுள்ளம் கொண்டான். மேலும் மணவாளமாமுனிகளை சிறப்பிக்க எண்ணினான். தமக்கே உரியதான சேஷ வாகனத்தில் மணவாளமாமுனிகளுக்கு ப்ரஹ்மரதம் பண்ணி ஸகல வாத்ய கோஷங்கள் ஒலிக்க அனைத்துக் கொத்து பரிகரங்களுடன் மடத்துக்கு எழுந்தருள செய்தான். (அதனால் தான் இன்றளவும் மணவாளமாமுனிகள் சேஷ பீடத்தில் சேவை சாதிக்கின்றார்)



"ஜீயர் திருவடிகளே சரணம்"


426 views0 comments

Comments


bottom of page