top of page

Vaikuntha Ekadashi: பகல்பத்து முதல் நாள் உற்சவம்: அழகிய திருவாபரணங்களுடன் நம்பெருமாள்

பகல்பத்து முதல் நாளான இன்று (4-12-2021), நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை , தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம் , கலிங்கதுரா , பவளமாலை , நெல்லிக்காய் மாலை ,காசு மாலை , புஜ கீர்த்தி , பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோவிலில் 22 நாட்கள் நடைபெறும் பெரிய திருநாள் நேற்று மாலை இனிதே தொடங்கியது. இவ்விழாவின் வரலாறும், சிறப்பம்சங்களும் முந்தைய பதிவில் வெளியானது. அதை இங்கு க்ளிக் செய்து பார்க்கலாம். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான இன்று (4-12-2021) நடைபெற உள்ள வைபவங்களையும், சிறப்புகளையும் பார்க்கலாம். அறிமுகம்:

முன்னொரு காலகட்டத்தில் திருமங்கையாழ்வார் காலத்திற்குப்பிறகு,

நாதமுனிகள் காலம் வரை இராப்பத்து திருநாளாகிய "திருவாய்மொழித் திருநாள்" மட்டுமே நடைபெற்று வந்தது.

அதுவும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நின்றுவிட்டது. சில சமூக/சமுதாய விபரீதங்களால் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் பாடுவார்/ அறிந்தவர் யாருமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது!

திருமொழி திருநாள் தோற்றம்:

ஸ்ரீமந்நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று நம்மாழ்வார் திருமுன் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பாசுரங்களை 'பன்னீராயிரம்' முறை நிஷ்டையுடன் சேவித்தபோது, ஆழ்வார் ப்ரத்யட்சமாக எழுந்தருளி, நாதமுனிகளுக்கு தாம் பாடிய திருவாய்மொழி ஆயிரம் மட்டுமன்றி, மற்ற பிரபந்தங்களையும்,ஏனைய ஆழ்வார்கள் பாடியவற்றையும் சேர்த்து நாலாயிரத்தையும் தந்தருளினார். நாதமுனிகள் அவற்றை, ஆழ்வார் வரிசையாக, முறையாகத் தொகுத்து,1/2/3/4 ஆயிரமாக முறையே வகைப்படுத்தினார். அனைத்து பாசுரங்களுக்கும், பண் (மெட்டு) அமைத்து இசைக்கச் செய்தார்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழிக்கு அமைந்து உள்ள, ஏற்றம் போலே, மற்றைய ஆழ்வார்கள் அருளிச்செய்த, திவ்யபிரபந்தங்களுக்கும், ஏற்றம் (மரியாதை) அளித்திடும் வகையில், நாதமுனிகள் பிரார்த்தனைக்கு இணங்க அரங்கர் திருவுள்ளம் பற்றினார். அப்போதைய காலம்தொடங்கி,"பகல்பத்து" திருநாளாகவும் திருமொழி திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

பகல்பத்து கொண்டாட்டம்:


இந்த பகல் பத்து உற்சவம் நடைபெறக்கூடிய பத்து நாட்களும், நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் (மூலஸ்தானத்துக்கு இடப்புறம் அமைந்துள்ள மண்டபம்), ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் புடைசூழ, நாலாயிரம் திவ்ய பிரபந்தங்களில், முதலாயிரம் மற்றும் இரண்டமாயிரம் ஆகியவற்றில்


அமைந்து உள்ள, 947+1134=2081 பாசுரங்களை, அரையர்கள் தாளம் இசைத்திட பாடக்கேட்டு மகிழ்வார்.


பரத்துவத்தைக் காட்டும் பெருமாள்:

காலை,பெரியபெருமாளின் திருமுன்பு, மூலஸ்தானத்தில் திருப்பல்லாண்டு, அரையர்களால், தாளத்துடன் இசைக்கப்படும். நம்பெருமாள் பல்வேறு அற்புதமான திருவாபரணங்களை, சாற்றிக் கொண்டு, சிம்ம கதியில் கருவறையில் (காயத்ரி மண்டபத்தில்) இருந்து புறப்பாடு கண்டருள்வார்.


அவ்வாறு புறப்பாடு கண்டு, வெளியில் வரும் சமயம், சந்தன மண்டபத்திற்கு, எழுந்தருளியவாறே, இரண்டடி ஒய்யார நடையிட்டு, தன்னுடைய பரத்துவத்தைத் தெரிவிக்கிறார்.

ஸ்ரீரங்கநாதரான தானே, வராஹ மற்றும் வாமன, திரிவிக்கிரம அவதாரங்களை எடுத்தவர் என்பதை இந்தப்புறப்பாட்டின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

கைங்கரியபரர்களுக்கு மாலை, பிரசாத மரியாதை

மேலப்படியில் கோயிலின் ஸ்தலத்தார்களுக்கும்,தீர்த்த மரியாதை உரிமை உடையவர்களுக்கும் மரியாதைகள் நடைபெறும். மேலப்படியை விட்டு நம்பெருமாள் இறங்கிய பிறகு, உத்தமநம்பிக்கும்,தேவஸ்தானஅதிகாரிகளுக்கும்,சந்தன உருண்டை சாதிக்கப் படும். இந்தச் செயல்கள் மூலம், இவர்கள் அனைவரும் ஸ்ரீ ரங்கநாதருடைய கைங்கர்யங்களை, சரிவர செய்வதாகப் பிரமாணம் (உறுதி) செய்து கொள்கிறார்கள்

ஆழ்வார் நம்பெருமாளை எதிர்கொண்டு வரவேற்றல்:



நம்பெருமாளை எதிர்கொண்டு வரவேற்க, நம்மாழ்வார்,திருமங்கை ஆழ்வார், ராமாநுஜர் ஆகியோர் மேலப்படிக்குக் கீழ் காத்திருப்பார்கள்.

அவர் எழுந்தருளிப் புறப்பட்ட பின், இவர்கள் மூவரும் அவரைப் பின் தொடர்வர். எதிரில் இருக்கும் கண்ணாடியில் சேவை சாதித்து, சேனைமுதலியார் (விஷ்வக்க்ஷேனர்) சந்நிதியின் முன்புறம் எழுந்தருளி, சேனை முதலியாருக்கு மரியாதைகள் நடைபெறும். பிறகு பகல்பத்து (அர்ஜுன) மண்டபத்தின் முன்பகுதியில் உள்ள, கிளிமண்டபத்தில் நம்பெருமாள் படியேற்ற சேவை ஆகும்.

அப்போது அரையர்கள் தாளமிசைப்பர்.

இந்தப் படியேற்றம் ஸுஷும்நா நாடியில் குண்டலினி சக்தி ஆறு ஆதாரங்களையும் கடந்து, ஸஹஸ்ரார சக்ரத்தினை அடைவதைக் குறிக்கிறது. ஆறாவது மற்றும் ஏழாவது படிகளில், நம்பெருமாள் ஒருபுறம் இருந்து, மற்றொரு புறம்திரும்பி, சேவைசாதிப்பதால்,

திருமங்கையாழ்வார் பாசுரமாகிய, "நீணிலா முற்றத்து நின்றிவள் நோக்கினாள், காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்" என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

அரையர் கொண்டாட்டம்:

அதன்பிறகு நம்பெருமாள் "சுரதானி" என்னும் துலுக்க நாச்சியார் சந்நிதிக்கு எதிரில், படியேற்றசேவை சாதித்து,

அரையர்கள் கொண்டாட்டம்--அரையர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் நம்பெருமாளைப் போற்றிச் சொல்லும் வாக்கியக் கோவைகள். இவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் முன்னோர்கள் சொன்னவை. சுமார் 400 வாக்கியங்கள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் சிலவற்றை உரைப்பார்கள்- ஆனபிறகு, பகல்பத்து உற்சவம் நடைபெறும் அர்ஜுன மண்டபத்திற்கு, நம்பெருமாள் எழுந்தருள்வார். மற்ற ஆழ்வார்கள்/ஆசார்யர்கள் ஏற்கனவே அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி இருப்பார்கள். ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மரியாதைகள் நடைபெறும்.

நம்பெருமாள் சாத்துப்படி

பகல் பத்து முதல் நாள் நம்பெருமாள் சாத்தியருளி சேவை சாதித்த திருவாபரணங்கள்

  • கவரிமான் தொப்பாரைக் கொண்டை

  • தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம்

  • கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை, காசு மாலை

  • புஜ கீர்த்தி , பருத்திக்காய் காப்பு


ஆகிய திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு நம்பெருமாள் சேவை சாதிக்கிறார்.

பகல்பத்து முதல்நாள்


அரையர்கள் திருப்பல்லாண்டு பாசுரங்களின் முதல் இரண்டு பாசுரங்களான,"பல்லாண்டுபல்லாண்டு" மற்றும்"அடியோமோடும்" ஆகிய இரண்டு பாசுரங்களுக்கு, அபிநயங்கள் (நாட்டிய/நாடகத் தமிழ்) வ்யாக்யானம் (இயல் தமிழ்) செய்வார்கள்.



அதன் பிறகு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து, பாசுரங்கள் சேவிக்கப்பட்டு, (இசைத்தமிழ்)

"வெண்ணெய்விழுங்கி" பதிகம் ஈறாக, மொத்தம் அன்றைய தினம்

(பகல்பத்து உற்சவத்தின் முதல்நாள் ) 224 பாசுரங்கள் அரையர் ஸ்வாமிகளால் அரங்கனின் முன் சேவிக்கப்படும். (காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் அரையர் சேவை மதியம் 1மணி வரை நடைபெறும்)

அரையர்களின் தாளத்துடன், அரங்கர் பாசுரங்களைக் கேட்டுமகிழ்வார்

ஆழ்வார் ஆசார்யர்களுக்கு தீர்த்த, பிரசாத மரியாதை:

அரங்கருக்கு நிவேதனம் நடைபெறும்.

பெருமாள் பிரசாத விநியோகங்களும் நடைபெறும்.

அர்ஜுன மண்டபத்தில், ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மரியாதை. அதன் பிறகு,ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்தோத்திரபாட கோஷ்டிகளுடன்,

தங்களுடைய சந்நிதிகளுக்கு எழுந்தருளுவார்கள்.

மூலஸ்தானம் எழுந்தருளல்:

  • நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் இருந்து, புதிய திருவாபரணங்கள் மற்றும் கொண்டை சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளுவார்.

  • நம்பெருமாள் வழி நடை உபயங்கள் கண்டருளி, ராஜமஹேந்திரன் திருச்சுற்றில் உள்ள மண்டபத்தில் தீர்த்த கோஷ்டி நடைபெறும்.

  • சிறிதுநேரம் நம்பெருமாள், "பத்தி உலாத்துதல்" ஆகி, மேலப்படியில் படியேற்றம் ஆகி, திருவந்திக்காப்பு (ஆரத்தி) கண்டருளுவார்.

  • பிறகு நம்பெருமாள் ஸர்ப்ப கதியில், கருவறைக்குள் (காயத்ரிமண்டபம்) எழுந்தருளுவார்.

  • இந்தமுறைப்படியே, பகல்பத்து திருநாளின், பத்துநாட்களும் நிகழ்வுகள் நடைபெறும். அத்யயன உற்சவத்தில் அரையர்களின் தாளத்துடன் கூடிய திவ்ய பிரபந்த பாசுரங்கள் அரங்கனை மட்டும் அல்ல, ஆழ்வார்கள்,ஆசார்யர்களையும் அவன்அடியார்களையும் பெரிதும் கொள்ளை கொள்ளும்!!!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்


234 views0 comments
bottom of page