top of page

இராப்பத்து ஆறாம் நாள் உற்சவம்! வீணையும் தஞ்சாவூர் பலாமரமும்!!

Vaigunda Ekadesi 2021: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் இராப்பத்தின் ஆறாம் நாள் உற்சவம் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெரிய கோவிலில் இன்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் அரையர்களால் சேவிக்கப்படும். ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் நடைபெறும் சிறப்பு வைபவங்களை இங்குக் காணலாம்.


இன்றைய பாசுரங்கள்: 6ஆம் பத்து 110 பாசுரங்கள்


அரையர் அபிநயம் & வியாக்கியானம்:


இந்த பாசுரம் அரையர்களால் அபிநயம் செய்யப்படும்.


உலகமுண்ட பெருவாயா உலப்பில் கீர்த்தி யம்மானே
நிலவும் சுடர் சூழ் ஒளி மூர்த்தி நெடியாய் அடியேன் ஆருயிரே
திலதம் உலகுக்காய் நின்ற திரு வேங்கடத்து எம்பெருமானே
குல தொல் லடியேன் உனபாதம் கூடுமாறு கூறாயே 

நம்பெருமாள் அலங்காரம்


இராப்பத்தின் ஆறாம் நாளான இன்று நம்பெருமாள்,

 • அகலகில்லேன் இறையும் என்ற பாசுரத்திற்காக சௌரி-ராஜ முடியில் புஜகீர்த்தி

 • நகரியும், நடுவில் பெரிய பிராட்டியார் பதக்கம்,

 • திருமார்பில் பிரணவாகார விமான பதக்கம்

 • ரத்தின அபய ஹஸ்தம்,

 • நெல்லிக்காய் மாலை,

 • காசு மாலை,

 • எட்டு வட முத்து சரம்,

 • தங்க பூண் பவழ மாலை,


 • அடுக்கு பதக்கங்கள்,

 • பின் சேவையில் அண்டபேரண்ட பக்ஷி பதக்கம்

ஆகிய திருவாபரணங்கள் அணிந்து, ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்துக் கொண்டிருக்கின்றார்.

அரங்கனும் வீணை ஏகாந்தமும்:

 • அரங்கனுக்கு வீணை வாசிக்கும் கைங்கரியம் செய்பவர்கள் சத்யகூடம் வம்சத்தார்கள் எனப்படுகின்றனர்.

 • இப்போது 46 ஆவது தலைமுறையைச் சேர்ந்த ஐந்து வீணை இசைக்கலைஞர்கள் இசைத்துப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

 • நாழிகேட்டான் வாசலில், நம்பெருமாள் வந்து திரும்பியதும், வீணை இசை ஆரம்பமாகும்.

 • ஐந்து கலைஞர்களும் வீணையைத் தங்கள் தோளில் தொங்கவிட்டு, நின்று/நடந்து கொண்டே இசைப்பார்கள்!! நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் மட்டுமல்லாது,

 • தியாகைய்யர், முத்துசாமி தீக்ஷிதர், அருணாசலக் கவிராயர், புரந்தரதாசர், ஆதிசங்கரர், அல்லூரு வேங்கடாத்ரி ஸ்வாமிகள் ஆகியோரின் கீர்த்தனைகளையும் இசைப்பார்கள்.

 • நம்பெருமாள் மேலப்படிக் கட்டில் ஏறும் போது, "எச்சரிக்க! சதநாமு, ஏகாந்த ரங்கா!" என்னும் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரின் கீர்த்தனையை அற்புதமாக இசைப்பார்கள்.

 • நம்பெருமாளை நோக்கி இசைப்பதால் படிகளில் பின்னோக்கி ஏற வேண்டும்! அதுவும் நம்பெருமாள் நடை அசைவுக்குத் தகுந்த மாதிரி அவர்களும் ஆடிக் கொண்டே பாட வேண்டும்!!

 • விஜய ரங்க சொக்கநாதர் மேலப்படிக்கு, எதிரில் உள்ள, மண்டபத்தில் சிலையாக நின்று, இன்றும் தம் கீர்த்தனை இசைக்கப் படுவதைக் கேட்டு மகிழ்கிறார்!

 • கீர்த்தனைகள் தெலுங்கு, கன்னட, சம்ஸ்கிருத மொழிகளிலும் இருக்கும்.

 • பெரும்பாலான பாசுரங்கள் நீலாம்பரி, ஆனந்தபைரவி, ஸஹானா, ரேவதி ராகங்களில் சேவிக்கப்படும்.

 • இந்த உற்சவம் முழுதும் சேர்த்து சுமார் 250 பாசுரங்கள் கீர்த்தனைகளை இசைப்பார்கள், நெஞ்சை உருக்கும் வண்ணம் அற்புதமாக இசை பொழிவார்கள்.

ஊரிலேன், காணி இல்லை, உறவு மற்றொருவரில்லை பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி, காரொளி வண்ணனே! என் கண்ணனே!கதறுகின்றேன், ஆருளர் களைகண்? அம்மா! அரங்கமா நகருளானே!!"

என்னும் திருமாலைப் பாசுரத்தை உருகிப்பாடி, கேட்போரெல்லாம் கதறும்படி செய்து விடுவார்கள்.

 • இராப்பத்தில் இந்த வீணை ஏகாந்தத்தைக் கேட்பதற்காகவே பல ஊர்களிலிருந்தும் அண்டை மாநிலங்களிலிருந்தும், பக்தர்கள் வந்து ஆவலோடு காத்திருப்பார்கள்.

 • பூலோக வைகுண்டத்தில் நம் கண்ணுக்கு எதிரே, ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் நம்பெருமாள் இரவு ஒளியில் ஜொலிக்கிறார். வேறு எந்த சப்தமும் இல்லாத நிசப்தம். (அவ்வளவு கூட்டத்தில் யாரும் பேச/சப்தம் செய்யமாட்டார்கள்).

 • வீணையிலும் வாய்ப்பாட்டிலும் எழும் இசை நாம் பரமபதத்தில் உள்ளோமோ? என்று வியக்க வைக்கும்! ( யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும்,வேண்டேன் அரங்கமாநகருளானே!!).

வீணையும் தஞ்சாவூர் பலாமரமும்:

 • இவர்கள் இசைக்கும் வீணை, தஞ்சாவூருக்குப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட ஊரில் விளையும் பலாமரங்களிலிருந்து மட்டுமே செய்யப் படுகிறது.

 • 900 ஆண்டுகளுக்கு மேலாக, அந்தப் பகுதி பலாமரங்களிலிருந்து மட்டுமே பிரத்யேகமாகச் செய்யப்படுகிறது !

அஹோபில மடத்தில் இருந்து வரும் சீர்: அஹோபில மடத்தின் முதல் ஜீயரான, "ஸ்ரீ ஆதிவண் சடகோபன்" ஸ்வாமிகள் எழுந்தருளி இருந்தபோது, இந்த இராப்பத்து, 5 ஆம் நாளில் 5 ஆம்பத்து 2 ஆம் திருவாய்மொழி,

"பொலிக! பொலிக!! பொலிக!!! போயிற்று வல்லுயிர்ச் சாபம்"

என்று தொடங்கும் பாசுரம் ,

 • கலியுகத்தின் கொடுமைகளிலிருந்து நம்மை உஜ்ஜீவிக்கும் "ஸ்ரீராமானுஜர்" அவதரிக்கப்போகிறார் என்று, ஸ்வாமி அவதாரத்திற்கு முன்பே, நம்மாழ்வார் அருளிச்செய்துள்ளார்.

 • அவ்வாறு அவர் அருளி செய்ததைக் கேட்டு, ராமானுஜரின் காலத்திற்கு, வெகு காலம் பின்பு அவதரித்த, ஆதிவண் சடகோபன் ஜீயர் மறுநாள்/6ஆம்நாள் தம்முடைய மடத்தில் இருந்து, சீர் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.

 • ஒவ்வொரு ஆண்டும்,இந்த சீர் சிறப்பாக ,நடைபெற வேண்டி, அதற்கு உண்டான தனத்தையும் தேவஸ்தான அதிகாரிகளிடமே ஒப்படைத்தார்.

 • அதன்படி, இன்று வரை கோயில் திருக்கொட்டாரத்தில் இருந்து, அரிசி, பருப்பு, பூசணிக்காய் முதலியவை அஹோபில மடத்திற்கு அனுப்பப்படுகிறது.

 • அஹோபில மடத்தார், பெரிய கோயிலிலிருந்து, வாதூல தேசிகரையும், அத்யாபகர்களையும், மணியகாரரையும், ஸ்தாநீகரையும் அஹோபில மடத்திற்கு எழுந்தருளச் செய்து, அவர்களுக்குத் தகுந்த மரியாதைகள் செய்வார்கள்.

 • பின்னர் அவர்களுடன் அஹோபில மடத்து ஸ்ரீகார்யமும் (நிர்வாக அதிகாரி) ஊழியர்களும் அரங்கனுக்கான சீர்வரிசையை வாத்ய கோஷ்டியுடன் எடுத்து வருவார்கள்.

 • ஸ்ரீகார்யம், பெரிய பட்டு வஸ்திரத்தை, வெள்ளித்தட்டில் வைத்து யானை மேல் அமர்ந்து வந்து, நம்பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்.

 • கோவில் கொட்டாரத்தில், கொண்டுவரப் பட்ட அரிசி, பருப்பு, பூசணிக்காய் முதலானவை சமர்ப்பிக்கப்படும்.

 • நம்பெருமாளின் தீர்த்தம், சடாரி, பிரசாதங்கள் ஸ்ரீ கார்யம் ஸ்வாமிக்கு சாதிக்கப்படும்.

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

72 views0 comments

Comments


bottom of page