கூரத்தாழ்வான் வைபவம் - பகுதி 2 ஆழ்வான் முக்குறும்பும் இல்லாதவர் என அவர் வாழ்நாள் சரித்திரத்தை சற்று அனுபவித்து வருகிறோம்.
முந்தைய பதிவில் அவரது செல்வ செழிப்பையும் அவர் அதனை துறந்து ஸ்வாமி இராமனுஜரை ஆஸ்ரயித்த வைபவத்தை அனுபவித்தோம்.
முக்குறும்பு - இந்த மூன்று விஷயங்கள் நம்மை நரகம் எனும் படுகுழியில் தள்ளும். அவர், (1) மிக்க செல்வந்தராக இருந்தவர். (2) அதிகமான ஞானத்தைப் பெற்றிருந்தவர் (3) உயர்ந்த குலத்தில் அவதரித்தவர்
அவர் துளியும் ஞான செருக்கு இல்லதாவர் என்பதை இந்த வைபவங்கள் நமக்கு நன்கு வெளிக் காட்டுகிறது.
அனைத்து சாஸ்த்ரங்களையும், வேதங்களையும் படித்தவர் ஆழ்வான். ஸ்ரீபாஷ்யத்தை முழுவதும் ஒரு வரி விடாமல் அறிந்தவர் ஆழ்வான். இருப்பினும் ஒரு துளி கூட “நான் படித்தவன்” என்கிற இறுமாப்பு இருந்ததில்லை. இவை அனைத்தும் இராமாநுசரின் திருவடி பலத்தால் தான் தனக்குக் கிடைத்தது என்று நினைத்து வாழ்ந்தவர் ஆழ்வான்.
கல்விச் செருக்கில்லாதவர், தம்மைத் தாமே தாழ்த்திக் கொண்டு மற்றவரை கௌரவிப்பது முதலிய குணங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆழ்வான்
கூரத்தாழ்வான் காலக்ஷேபம் செய்யும் ஸமயங்களில் மூலம் வாசித்து வந்த சிலரிலே, ஒருவர்க்கு ஒரு நூலைப் படித்து, ஆழ்வானிடம் விளக்கம் கேட்கவேண்டியிருந்தது.
ஆயினும், தான் ஆழ்வானிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்வது யாருக்கும் தெரியக் கூடாது என்று நினைத்தார். அவர் ஆழ்வானிடம், “நான் உம்மிடம் விளக்கம் கேட்பது யாருக்கும் தெரியக்கூடாது” என்றும் வேண்டிக் கொண்டார். அவர் விருப்பப்படியே, ஒருவருக்கும் தெரியாமல், ஒரு மறைவான இடத்தில் அவருக்கு விளக்கங்களைச் சொல்லி வந்தார். ஆனால் ஒரு நாள், தற்செயலாக ஒருவர் அங்கு வந்து விட்டார்.
கேட்பவர், “நாம் ஆழ்வானிடம் விளக்கம் கேட்பது வெளிப்பட்டுவிட்டதே” என்று நடுங்கிப் போய் விட்டார். இவர் நடுங்குவதைக் கண்ட ஆழ்வான், சடக்கென, அவர் கையிலிருந்த புத்தகத்தைத் தான் வாங்கி, தான் அவரிடம் விளக்கம் கேட்பதைப் போல் பாவனை செய்தார்.
அதாவது, அவரை ஆசார்யனாகவும், தன்னை சீடனாகவும் வந்தவர் நினைக்கும் படி செய்துவிட்டார். “ஆழ்வானிடம் தான் கற்பது யாருக்கும் தெரியக்கூடாது” என்று நினைத்தவருடைய எண்ணப்படி, தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டு அவரைக் கௌரவித்துள்ளார்.
கண்ணன், அர்ஜுனனுக்கு ஸாரதியாக தன்னைத் தானே தாழவிட்டது போல், ஆழ்வானும் செய்தார் என பெரியோர் காலக்ஷேபத்தில் தெரிவிப்பர்.
அடுத்த பதிவில் அவரது ஒவ்வொரு கல்யாண குணங்களையும் அவரின் சுவாரஸ்யமான வாழ்க்கை பதிவின் வாயிலாகக் காணாலாம்
Comments