நம்மில் பலர் மதுரையில் மட்டும் தான் திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஸ்ரீவில்லிப்புத்தூரிலும் திருமலை நாயக்கர் அரண்மனை உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் எதற்காக இந்த அரண்மனை கட்டப்பட்டது, அதன் வரலாறு என்ன என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
பொதுவாக அரண்மனை என்றாலே நாடாளுவதற்காக கட்டப்படுவதாகும். அந்த வகையில், மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை நாடாளுவதவற்காகவே கட்டப்பட்டது. அதே நேரத்தில், திருமலை நாயக்கர் அரசருக்கு வைணவத்தில் பேரார்வமும் பெரும் பக்தியும் ஏற்பட்டது. குறிப்பாக ஸ்ரீ ஆண்டாள் தாயார் கோவிலுக்கு பெருந்தொண்டு ஆற்றத் தொடங்கினார்.
மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ ஆண்டாள் தாயாரை சேவிக்கவும், தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாளுக்கு கைங்கரியங்களைச் செய்யும் விரும்பினார். ஆனால் ஒவ்வொரு முறையும் மதுரையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வருவதற்கு பயணமும், நேரப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதை சரிசெய்ய எண்ணிய மன்னர், ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே ஒரு அழகிய அரண்மனை எழுப்ப முடிவு செய்தார்.
அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தாயாரை தரிசிக்க ஏதுவாக திருமலை நாயக்கர் ஒரு அரண்மனையை கட்டினார். பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஸ்ரீ ஆண்டாள் தயாருக்கு பல கைங்கரியங்களைச் செய்தார்.
வைணவத்தில் ஆழ்ந்த திருமலை நாயக்கர் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் பக்தி சிரத்தையுடனே இருந்தார். மதுரை வந்த பிறகும் ஆண்டாள் தாயாருக்கு பூஜை ஆன பின்னரே உணவு அருந்தி வந்தார்.
இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை வரையில் ஆங்காங்கு மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு பூஜை முடிந்ததும் மணி அடிக்கப்படும். அவ்வாறு மணியோசை கேட்ட பிறகு தான் உணவு அருந்துவார்.
ஸ்ரீ ஆண்டாளை சேவிப்பதற்காகவே தனியோரு அரண்மனை கட்டிய பெருமை திருமலை நாயக்கரையே சேரும். இதுவே அவர் வைணவத்தின் மீது கொண்டுள்ள பக்திக்கு எடுத்துக்காட்டு. திருமலை நாயக்கரின் வாழ்நாள் வரலாற்றை ஒப்பிடும் போது, இது வெறும் சிறு துளியே. இன்று திருமலை நாயக்கர் பேரரசனின் ஜெயந்தி தினமம். பேரரசனின் இந்த நன்நாளில் அவர் செய்த பக்தி தொண்டாற்றுகளை நினைவு கூறுவோமாக.
Comments