கூரத்தாழ்வான் வைபவத்தை ஒட்டி, அவரது சிறப்புகளில் முக்கியமானதாகக் கூறப்படும் முக்குறும்பை அறுத்தவர் என்பது பற்றி இங்குக் காணலாம்.
முக்குறும்பு - மூன்று விஷயங்களில் மிக உயர்ந்தவர்
(1) மிக்க செல்வந்தராக இருந்தவர்.
(2) அதிகமான ஞானத்தைப் பெற்றிருந்தவர்
(3) உயர்ந்த குலத்தில் அவதரித்தவர்
இவை அனைத்தும் ஒரு சேர இருப்பது அரிது. ஆனால், அவை அனைத்தும் தன்னிடம் இருந்தும் அவற்றின் தாக்கங்கள் துளியும் இல்லாதவராய் தன் வாழ்நாள் முழுவதும் இருந்தார். அதாவது நான், எனது என்ற அகங்கார, மமகாரங்கள் இல்லாதவராய் இருந்தார். அவர் வாழ்நாளில் நடந்த சரித்திரங்களையும் அவரது குண நலன்களையும் காணலாம்.
இதனாலேயே அவரது சிஷ்யரான திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில்,
மொழியைக் கடக்கும் பெரும்புகழான்* வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடக்கும்* நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்* பழியைக்கடத்தும் இராமானுசன் புகழ்பாடி அல்லா* வழியைக் கடத்தல்* எனக்கு இனியாதும் வருத்தமன்றே.
வஞ்ச முக்குறும்பாம் குழியைக் கடந்தவர் என போற்றி பாடியுள்ளார்.
மிக்க செல்வந்தராக இருந்தவர் அதனை துறந்த சுவாரஸ்யமான சரித்திரத்தை அனுபவிக்க பெறலாம்.
முதலில் அவரது செல்வ செழிப்பு எப்படிப்பட்டது எனக் காணலாம்
கூரத்தாழ்வான் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கூரம் எனும் கிராமத்தில் வசித்து வந்தவர். தினமும் அங்குள்ள ஏழை மக்களுக்கும் சாதுக்களுக்கும் ததீயாராதனம் (அன்னதானம்) செய்து வந்தார். இப்படி ஒரு நாள் ததீயாராதனம் கைங்கரியம் முடிந்தவுடன், அவரின் திருமாளிகை கதவுகளை சாத்து போது, அந்தக் கதவில் பொருத்தப்பட்டுள்ள மணிகளின் ஓசை காஞ்சி தேவப்பெருமாளின் திருச்செவிகளுக்கு கேட்டதாம். உடனே அங்கு கைங்கரியம் செய்து கொண்டிருக்கும் தனது பக்தரான திருக்கச்சி நம்பிகளிடத்தில் (இவர் காஞ்சி தேவபெருமாளுக்கு தினமும் ஆலவட்டம் கைங்கரியம் [விசிறி வீசுதல்] செய்பவர்) இன்னும் திருவாராதனம் முடியவில்லையே; அதற்குள் யார் நம் கோயில் கதவுகளைச் சார்த்துவது என்று கேட்டாராம். நம்பிகளும் பெருமாள் கேட்ட கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
"இந்த ஓசை நம் கோயிலில் இருந்து வரும் ஓசை அல்ல, அது கூரத்தாழ்வானின் திருமாளிகை கதவுகளை தாளிடும் போது எழும் ஓசை ஆகும்" என கூறினார். பெருமானும் மிகவும் மகிழ்ந்து, "கூரத்தாழ்வானின் ஐஸ்வர்யமோ இவ்விதம் நம்மை மயக்கிற்று!" என பேசிக்கொண்டு பெருமாளும் தாயாரும் புன்முறுவல் செய்தனராம்.
இவ்வாறு பெருமாளும் தாயருமே வியந்து பேசும் வண்ணம் அவரது செல்வ செழிப்பு இருந்தது.
செல்வத்தைத் துறந்தது:
இப்படி, பெருமாளும் தாயாரும் உரையாடியதை நம்பி வாயிலாக கூரத்தாழ்வான் கேள்விப்பட்டு, மிகவும் வருந்தினார். தனது ஞானமும் பக்தியும் எம்பெருமானுக்கு சந்தோசத்தை விளைவிக்காமல் போனதே என மனம் நொந்து கொண்டார். இந்த செல்வமா பெரிதாகப்பட்டது என தனது செல்வத்தை ஊர் மக்களுக்கு பகிர்ந்து அளித்தார்.
தேவ பெருமாளிடம் தனக்கு ஓர் ஆச்சாரியரை காட்டுமாறு பிராத்தித்தார். தேவப்பெருமாளும், திருவரங்கத்தில் உள்ள ஸ்வாமி இராமானுரின் திருவடிகளை ஆஸ்ரயிக்குமாறு பணித்தார். அந்த கணமே திருவரங்கம் நோக்கி புறப்பட்டார்.
இரவில் போகும் வழியில் அவரது தர்ம பத்தினியான ஆண்டாள், சற்று பயமாக இருக்கிறது; காலையில் செல்லலாமே என்று கூறினார். இவர் அவளிடம், "பயப்படும்படி என்ன வைத்திருக்கிறாய்? மடியில் கனம் இருந்தால் தானே பயமிருக்கும்?" என வினவ, "உயர்ந்த செல்வந்தராகிய நீர் அனைத்தையும் துறந்தீர்! இருந்தாலும், நீர் புசிப்பதற்கு ஏற்ற ஒரு வெள்ளி வட்டில் துணிக்குள் சுற்றிவைத்துள்ளேன் என கூறினார்.
இவர் அதையும் அருகிலிருந்த புதரினுள் வீசி எரிந்துவிட்டு, ஸ்வாமி இராமானுஜர் இருக்கும் இடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். திருவரங்கம் அடைந்து ஸ்வாமி இராமானுரிடம் பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கும் படி பிராத்திக்க, அவரும் உகந்தருளி அவர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தார். கூரத்தாழ்வானும் ஸ்வாமி இராமானுஜரை ஒரு க்ஷணமும் பிரியாமல் அவருக்குக் கைங்கர்யங்கள் புரிந்து வந்தார்.
Comments