top of page

திவ்யதேசங்களின் இன்றைய நிலை!

Updated: Sep 21, 2021

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோவில் மற்றும் கபிஸ்தலம் கஜேந்திர வரத பெருமாள் கோவில் தற்போது பராமரிப்பின்றி கவலைக்கிடமாக உள்ளது.

ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற, சுவாமி ராமாநுஜர் மங்களாசாசனம் செய்த ஸ்தலங்கள் உலகப் பிரசத்திப் பெற்றவையாகும். இவை 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் ‘திருக்கூடலூர் அருள்மிகு ஜெகத்ரட்சகப் பெருமாள் திருக்கோவில்’. இது ஆடுதுறை பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. திருவையாறிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கோவில் பழம்பெருமை வாய்ந்தது. பெருமாளை சேவிப்பதற்காக தேவர்கள், நந்தக முனிவரோடு கூடி இத்தலத்திற்கு வந்ததாகவும், அதனால், இதற்கு கூடலூர் என்று பெயர் உண்டானதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு பிரசத்திப் பெற்ற திருக்கூடலூர் ஜெகத்ரட்சகப் பெருமாள் கோவிலானது தற்போது கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

மேலும் அதனையடுத்து கபிஸ்தலம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் தஞ்சை மாவட்டத்திலுள்ளது. திருமழிசையாழ்வாரால் "ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன்" என பக்தி பெருக்கோடு பாடப்பட்ட திவ்யதேசமாகும். இது பஞ்ச கிருஷ்ண ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்கும் கோவிலின் நிலை மிக மோசமாக உள்ளது.

கபிஸ்தல அர்ச்சகர் சேஷாத்ரி ஸ்வாமி தான் ஒரே ஒரு அர்ச்சகராக இருந்து பெருமாளுக்கும் அங்குள்ள உட்பிரகார சந்நிதிகளிலும் நித்திய கைங்கரியம் செய்து வருகிறார். அவருக்கும் வயது 80 கடந்துவிட்டது. எனவே, முன்பு போல் சரியாக கோவிலில் நித்யபடி பூஜைகள், கைங்கரியங்கள் செய்ய முடியவில்லை. தள்ளாத வயதிலும் பெருமாளுக்கு சேவை செய்வதே அர்ச்சகர் சேஷாத்ரியின் நோக்கமாக இருந்தாலும், வயது மூப்பின் காரணமாக, சேஷாத்ரி சாதாரணமாக நடக்கக் கூடி முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு அடுத்ததாக அர்ச்சகர்கள் யாரும் இல்லை.

ஜெகத்ரட்சக பெருமாள் கோவிலின் மூலவர் சன்னதியில், தைல காப்பு செய்து பெருமான் திருமேனியை பாதுகாக்க வழியின்றி இருக்கும் நிலை
பராமரிப்பு இல்லாமல் காணப்படும் மூலவர் சன்னதி

அர்ச்சகர் நியமனம் இல்லாததாலும், கோவிலைப் பராமரிக்க யாரும் இல்லாததாலும், திருக்கோவிலின் நிலையே சிதலமுறும் தருவாயில் உள்ளது. மேலும், அப்பகுதி மக்களும் வேலைவாய்ப்பை தேடி மெல்ல மெல்ல வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதால், தினசரி பக்தர்கள் கூட யாருமில்லாத அளவில் உள்ளது. இதனால், கோவிலில் பராமரிப்பு இல்லாமல், வெளிப்புறத்தைச் சுற்றியும் அளவுக்கு அதிகமாக புல், களைச்செடிகள் முளைத்துள்ளன. அவை அகற்றப்படாமல் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. பெருமாளின் திருமேனி சிதலமைடையும் நிலையில் உள்ளது. கோவிலைச் சுற்றி உட்பிரகாரத்தில் உள்ள சன்னதிகளில் விளக்கு கூட ஏற்றப்படாமல் இருண்டு போய் காணப்படுகின்றன. முறையான பராமரிப்பு மற்றும் தூய்மை செய்யாததால் பெருமாள் மற்றும் தாயார் சன்னிதிக்குள் எலிகள் உள்ளிட்ட ஏராளமான பூச்சிகள் புகுந்தன. பெருமாள் நீண்ட நாட்களாக ஒரே ஒரு வஸ்த்ரம் மட்டுமே சாற்றியுள்ளார். முறையான சாற்றுப்படிகளும் பெருமாள், தாயாருக்கு செய்யப்படவில்லை. வஸ்த்ரங்கள் கறை படிந்த நிலையில் உள்ளன.



யாருமே கண்டுகொள்ளமால், திருக்கூடலூர் மற்றும் கபிஸ்தலம் பெருமாள் கோவில் கைவிடப்பட்ட கோயிலாக மாறி வருகிறது. கோவிலின் இந்த நிலைமையை சரிசெய்வதற்கு பக்தர்கள் முன்வர வேண்டும்.


யார் பெறுப்பு?


"இருக்கும் நாள் உகந்தருளின நிலங்களிலே ப்ரவணனாய் குணாநுபவ கைங்கர்யங்களே பொழுதுபோக்காகை"

என ஆழ்வார், ஆசாரியர்கள் அருளிசெய்தபடி,


கண்ட கண்ட விஷயங்களில் மனதை செலுத்தாமல் எம்பெருமானின் கல்யாண குண வைபவங்களை தியானிக்க வேண்டும். முக்கரணங்களான மனஸு, வாய், கரணம் ஆகிய மூன்றாலும் கைங்கரிய தொண்டு புரிய வேண்டும்


மனதால் அவனது கல்யாண குண வைபவங்களை தியானிக்க வேண்டும்; வாயால் அவனது புகழை பரப்ப வேண்டும்; பெருமான் எழுந்தருளியிருக்கும் கோவில்களில் நம்மால் இயன்ற அளவிற்கு திருப்பணிகளை செய்ய வேண்டும்.


இந்தத் திவ்யதேசங்களை ஸ்வாமி ராமாநுஜர் நம்மை நம்பி தானே விட்டு சென்று இருக்கிறார். அவர் நமக்காக நம் சம்பிராதாயத்திற்காகப் பாதுகாத்து வந்த இந்த பொக்கிஷத்தை நாமும் கடமை மறவாது காக்க வேண்டுமல்லாவா?




கட்டாயம் செய்ய வேண்டிய கோவில் திருப்பணிகள்:


கோவில் என்பது மூலவர், உற்சவர், ஸ்தல தீர்த்தம், விமானம், ஸ்தல விருக்ஷம் ஆகிய ஐந்தும் அடங்கும். நமது முன்னோர்களின் கலைநயத்தை விஞ்ஞானத்தை வெளிப்படுத்துவதே இந்தக் கோவில்கள் தான். இதனை புராதானம் மாறாமல் பராமரிப்பதே நமது கடமையாகும்.


கோவிலுக்கு நித்யபடி பூஜைகளுக்கு தேவையானவை:


பசும்பால், பச்சை கற்பூரம், தூய்மையான நிலையில் பஞ்ச பாத்திரங்கள், அனைத்து மூல, உட்புற சன்னதிகளுக்கு தீப விளக்கு, நெய், எண்ணெய், திரி, பெருமாள் அமுது செய்வதற்கான பிரசாத சமைக்க தேவையான அரிசி, பருப்பு, வெல்லம் போன்ற சாமான்கள், பூஜைக்குத் தேவையான புஷ்பம், மாலைகள், துளசி, பழங்கள் இவையனைத்தையும் ஏற்பாடு செய்ய தாங்கள் தான் முன்வர வேண்டும்.

ஆண்டாள் யாத்ரா சார்பில் கைங்கரியங்கள்: ஆண்டாள் யாத்ரா, 108 திவ்ய தேச ஆன்மீக சுற்றுலா மூலம் பல்வேறு பக்தர்களுக்கு பெருமாளை சேவிக்க வழிவகை செய்துவருகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் ஆண்டாள் யாத்ராவை ஊக்குவிக்கும் விதமாக வழங்கும் அடிப்படை கட்டணத்தில் ஒருபகுதியை, அப்படியே திருக்கோவில் கைங்கரியத்திற்கு வழங்கப்படுகிறது. அந்தவகையில், தற்போது கபிஸ்தலம் மற்றும் திருக்கூடலூர் இருகோவிலின் நிலையை உணர்ந்த ஆண்டாள் யாத்ரா, இருகோவிலுக்கும் தீப எண்ணெய் உள்ளிட்ட பூஜை பொருட்களை வழங்கியது. மேலும், ஆண்டாள் யாத்ரா தாமாக முன்வந்து அர்ச்சகர்கள், பட்டர்ககள் சுவாமிகள் 10 பேரை அழைத்து, கோவில் கருவறையை சுத்தம் செய்ய உதவியது. அவ்வாறு உதவ முன்வந்த அர்ச்சகர்கள், பட்டர்களுக்கு நன்றிகள். கபிஸ்தலம் திருக்கோவிலில் சுத்தம் செய்வதற்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட படங்களை இங்குக் காணலாம்.


ஆண்டாள் யாத்ரா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அர்ச்சர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்ட பெருமாள் சந்நிதி

.

திருக்கூடலூர் பெருமாள் கோவிலின் நிலையை அறிந்த பக்தர் ஒருவர், ஆண்டாள் யாத்ரா மூலம் தனது குடும்பத்தினருடன் திருக்கோவிலக்கு வருகை புரிந்து, கைங்கரியம் செய்து சேவித்தனர்
ஆண்டாள் யாத்ரா சார்பில் இரு திவ்யதேசங்களுக்கும் எண்ணெய் சமர்பிக்கப்பட்டது

அடிப்படை அங்கவஸ்திரம் கூட அணிவிக்க முடியாமல்..

கொரோனா ஊரடங்கால் கோவிலுக்கு பக்தர்கள் ஒரு விழாக் காலங்களிலும் வருகை புரிவதில்லை. இதனால் காணிக்கை காசு, அடிப்படை வருமானம் கூட கிடைக்கவில்லை. எனவே நித்ய படி பூஜைகளுக்கு தேவையான பூ, பழங்கள், துளசி, மாலைகள் என இதனைக் கூட ஏற்பாடு செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலை இன்னும் சீராகவில்லை. பிரசித்தி பெற தலங்களில் கூட கொரோனா ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் சேவிக்க அனுமதிக்கபடுவதில்லை. இதில் கிராமப்புறங்களில் உள்ள திவ்யதேசங்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். பக்தர்கள் ஆகிய நாம் தானே இதை முன்னோக்கி எடுத்து செல்ல வேண்டும்

பராமரிப்பு பணிகள்:

கைங்கரியம் செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களால் இயன்ற பணிகளை, இயன்ற வழிகளில் செய்யலாம். பொதுவான சில கைங்கரியங்கள்: கோவில் கதவுகள் சரிசெய்தல், வர்ணம் பூசுதல்,

ஆண்டாள் யாத்ரா சார்பில் விளக்குகள் விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டன

மின்விளக்கு, நித்யபடி பூஜைக்கு தேவையான பூக்களுக்காக நந்தவனம் அமைத்து கொடுத்தல், பிரசாதம் சமைக்க பாத்திரங்கள், கோவில் திருவிழா ஏற்பாடு செய்ய நிதி திரட்டுதல், எம்பெருமான் எழுந்தருளும் வாகனங்களைப் பழுது பார்த்தல், ஸ்தல புஷ்கரணியைத் தூர்வாரி தூய்மைப்படுத்துதல், கோபுரங்களில் பராமரிப்பு பணி செய்தல். கோவிலின் புனித தன்மையும் பழமையும் மாறாமல் பாரம்பரியத்தோடு இவை செய்யப்பட வேண்டும்.


பொதுமக்கள் தங்களால் இயன்ற கைங்கரியத்தைச் செய்து, கோவிலின் பெருமையைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும். மேலும், கோவில் பராமரிப்புக்குத் தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் என்பதே ஆண்டாள் யாத்ராவின் தாழ்வான வேண்டுகோளாகும்.

301 views0 comments

Comments


bottom of page